எந்த ஒரு முதலீட்டிலும் அவசரப்பட்டு தவறான காலத்தில் வெளியேறினால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எந்த ஒரு முதலீட்டிலும் வெளியேறும் காலம் என்பது மிகவும் முக்கியமானது. இதனை ஆங்கிலத்தில் Exit Strategy, அதாவது 'வெளியேறும் யுக்தி' என்று கூறுவார்கள். அவசரப்பட்டு முதலீட்டில் இருந்து வெளியேறினால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் அல்லது மொத்த முதலீட்டை இழக்க நேரலாம்.
பங்குச்சந்தை முதலீடுகள் நீண்ட காலத்தில் நல்லதொரு பணப்பெருக்கத்தை கொடுக்கும். பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்த காலத்தில், அவசரப்பட்டு பங்குச் சந்தையிலிருந்து வெளியேறினால் நாம் மிகப்பெரிய நஷ்டத்தினை சந்திக்க நேரிடும். உதாரணமாக, கொரோனா பெருந்தொற்று போன்ற காலங்களில் பங்குச்சந்தையானது கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்தக் காலத்தில் ஒருவர் பங்குச்சந்தையில் இருந்து அவசரப்பட்டு வெளியேறி இருந்தால் பெரும்பாலும் கடும் நஷ்டத்துடன் வெளியேறி இருப்பார்.
*****************
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்:
காட்டில் ஒரு நன்னீர் ஏரி இருந்தது. அந்த ஏரியில் ஒரு ஆமை மற்றும் இரண்டு நாரைகள் நண்பர்களாக மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. ஆமை புத்திசாலியானது. ஆனால், அவசர புத்தி கொண்டது.
அந்த ஏரி ஒரு வானம் பார்த்த பூமியாக மழையை நம்பி இருந்தது. சில வருடங்கள் தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தால் அந்த ஏரி சிறிது சிறிதாக வறண்டது. மீன்களும் மிகவும் குறைந்து விடவே, நாரைகள் வேறு ஒரு ஏரியைத் தேடிச் செல்ல முடிவெடுத்தன.
தனது நண்பர்கள் தன்னைப் பிரிந்து செல்வதைக் கண்ட ஆமை வருந்தியது. புத்திசாலி ஆமைக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு கோலினை எடுத்து அதன் இரண்டு பக்கங்களிலும் நாரைகள் அலகில் கவ்விக் கொள்ள, நடுவில் ஆமை வாயால் கவ்விக்கொண்டது. நாரைகள் அந்தக் கோலினைச் சுமந்து சென்று மற்றொரு ஏரியில் அந்த ஆமையை இறக்கி விட திட்டம் போட்டது ஆமை. செல்லும்போது நடுவில் வாயைத் திறக்கக் கூடாது என்று நாரைகள் ஆமையை எச்சரித்தன. ஆமையும் சரி என்று ஒப்புக்கொண்டது.
நாரைகளுடன் ஆமையின் புதிய ஏரியை நோக்கிய பயணம் தொடங்கியது. இந்த வித்தியாசமான காட்சியைக் கண்ட மற்ற பறவைகள் அதிசயித்தன.
பறவைகள் அந்த நாரைகளின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டின. நாரைகள் தங்கள் அலகில் கோல் இருந்தபடியால் அமைதி காத்தன. ஆனால், ஆமை அந்த யோசனை தன்னுடையது தான் என்று கூற அவசரப்பட்டு வாயைத் திறந்தபோது, கோலிலிருந்து நழுவி அந்தரத்திலிருந்து கீழ்நோக்கி விழுந்து உயிரை இழந்தது.
*****************
இங்கு ஆமை என்பது நமது பணத்தைப் போன்றது. நமது பணத்தை நாம் குறிப்பிட்ட குறிக்கோளுக்காக ஒரு குறிப்பிட்ட முதலீட்டுப் பயணத்தில் ஈடுபடுத்துகிறோம். முதலீட்டுப் பயணத்தில் நாம் கோலினைக் கெட்டியாக பிடித்திருக்க வேண்டும். அந்த முதலீட்டின் பயணத்தில் நடுவில் அவசரப்பட்டு எடுத்தால், ஆமையைப்போல பெரிய காயங்களை அடையலாம். இதனை ஆங்கிலத்தில் Buy and Hold Strategy, அதாவது 'வாங்கி, பிடித்துக் கொள்ளும் யுக்தி' என்று கூறுவார்கள்.
நமது பங்குச்சந்தை முதலீடானது நீண்ட காலத்திற்கானது. அவ்வப்போது பங்குச்சந்தையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு நாம் அஞ்ச கூடாது. அவசரப்படக்கூடாது. ஆமை பயணித்த போது, எவ்வாறு மற்ற பறவைகள் பல்வேறு கருத்துக்களை உதிர்த்தனவோ, அதனைப் போலவே பங்குச்சந்தையின் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு பல்வேறு கருத்துக்களை பலர் உதிர்க்கலாம். நாம் நமது நீண்ட காலக் குறிக்கோளில் தெளிவாக இருந்து, நமது நீண்ட கால பயணத்திலிருந்து நமது பணத்தினை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது.
கடந்த 44 ஆண்டுகளில் பங்குச்சந்தையானது வருடா வருடம் 17% வளர்ந்துள்ளது. ஆனால், பல்வேறு ஏற்றத் தாழ்வுகளுக்குப் பிறகே, இந்த வளர்ச்சி நீண்ட காலத்தில் வந்துள்ளது. ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு, ஒருவர் அவசரப்பட்டு வெளியேறி இருந்தால், அவரால் இந்த 17% வருடா வருட வளர்ச்சியை அடைந்திருக்க முடியாது.
நமது குறிக்கோளுக்கான முதலீட்டினைச் சரியாக தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும். முதலீட்டினைச் செய்த பின் அதை நன்கு பிடித்துக் கொள்ள வேண்டும். சரியான காலத்தில் முதலீட்டில் இருந்து வெளியேற வேண்டும். அவசரப்பட்டு வெளியேறக்கூடாது.