
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் எனவும், ரஷ்யாவுடனான வர்த்தகத்தால் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 25% வரி விதிப்பால் நம் நாட்டில் பாதிக்கப்படக்கூடிய துறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. கச்சா எண்ணெய் தொழில்
இந்திய நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவிடம் இருந்து 37% கிடைப்பதால் இதனை மையப்படுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிவைத்துள்ளதால் அவரின் 25% வரி விதிப்பால் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் உள்ளிட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் போன்றவையும் பாதிக்கப்பட உள்ளது.
2. எலக்ட்ரானிக்ஸ்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை இந்தியாவில் அசெம்பிள் செய்து ஏற்றுமதி செய்வதால் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா அமெரிக்க மார்க்கெட்டுக்கு ஐபோன்களை அதிகளவு சப்ளை செய்யும் நாடுகளில் முன்னணியில் உள்ளது. தற்போதைய வரிவிதிப்பால் ஆப்பிள் தனது செயல்பாட்டை இந்தியாவில் குறைக்க வாய்ப்பு உள்ளதால் எலக்ட்ரானிக்ஸ் துறை பாதிக்கப்படும்.
3. ரத்தினங்கள் மற்றும் நகைகள்
நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி ஆகிறது. பொது விநியோக சங்கிலி முறியும் போது ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருந்தாலும் ரத்தின கற்கள் துறை பாதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 25% வரி விதிப்பால் அதிகமாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
4. மருந்து துறை
சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாக்டர் ரெட்டி'ஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் மற்றும் சிப்லா லிமிடெட் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களின் வருவாயில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை அமெரிக்காவில் இருந்து கிடைப்பதோடு, ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் மதிப்புள்ள காப்புரிமை பெறாத மருந்துகள் நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு அமெரிக்காவின் மருந்து சந்தையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதால் இந்த வரி விதிப்பால் மருந்துதுறையும் பாதிக்கப்பட உள்ளது.
5. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை
தி கேப் இன்க், பெப்பே ஜீன்ஸ், வால்மார்ட் இன்க் மற்றும் காஸ்ட்கோ ஹோல்சேல் கார்ப் போன்ற முக்கிய நிறுவனங்களுக்கு நம் நாட்டில் இருந்து ஜவுளி, ஆயத்த ஆடைகள், காலணிகள் செல்வதால் அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை பொருட்களின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது
6. ஆட்டோ மொபைல்ஸ்
கார்கள் மற்றும் ஆட்டோ மொபைல்களுக்கான உதிரி பாகங்கள் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிவதால் குறிப்பாக டாடா குழுமத்தின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஜாக்குவார், லேண்ட் ரோவர் ஏற்றுமதி பாதிக்கப்படுவதோடு ஆட்டோமொபைல் துறையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
7. ஐடி துறை
நம் நாட்டில் ஐடி துறையில் அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் குறிப்பிடும்படியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் அதிகரிக்கும் செலவினங்களால் அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்ப செலவினங்களை குறைக்க வாய்ப்புள்ளதால் நம் நாட்டின் ஐடி துறையில் பாதிப்பை தரலாம் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மேற்கூறிய துறைகள் அனைத்தும் அமெரிக்க அதிபர் டிரம்பின் 25% வரி விதிப்பால் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதே நிபுணர்கள் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.