
சிறுக சிறுக சேமிப்பதை இளம் வயதிலேயே வீட்டினர் கற்றுக் கொடுத்துவிட வேண்டும். சிறு சேமிப்பை இளம் வயதில் தொடங்குவது எளிது. ஆனால் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போது முதலீடு செய்வதை பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் ஈடுபட வேண்டும். அதற்கான தகவல்கள் இதோ:
சம்பாதிக்க தொடங்கும் பொழுதே முதலீடு செய்வது குறித்து நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை கேட்பது மிக மிக அவசியம். அவரவரின் நிதி நிலமை மற்றும் இலக்குகளின் அடிப்படையில் வழிகாட்டுதல் வழங்கக்கூடிய நிதி ஆலோசகரை சந்தித்து, அவருடன் கலந்துபேசி, பொருத்தமான திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கவேண்டும்.
முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கு பல்வேறு விதமான முதலீட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு, எல்லாவற்றிலும் பணத்தைப் பரவலாக பிரித்துப் போட்டு முதலீடு செய்வது நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். ஒன்றில் குறைந்தாலும் மற்றொன்று ஈடுகொடுக்கும்.
அதை விடுத்து, லாபம் தரும் முதலீட்டு திட்டமாகவே இருந்தாலும், அதிலேயே மொத்த தொகையையும் முதலீடு செய்தால் ஏதாவது ஒரு காலகட்டத்தில் திடீர் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிட்டால், அப்போது நிதி நிலையில் ஏற்படும் மாறுபாடு நஷ்டத்தை உண்டாக்கும். இதனால் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் . இந்த மன உளைச்சல் முதலீடு செய்வதற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடும்.
ஆதலால் பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட் போன்ற எல்லா விதமான திட்டங்களிலும் பரவலாக முதலீடு செய்து வைப்பது தான் ஏற்ற இறக்கத்திலிருந்து சேமிப்பைக் பாதுகாக்க உதவும். நீண்ட காலத்திற்கு நிலையான வருமானத்தையும் தரும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும்.
முதலீடு செய்ய திட்டமிடுவதற்கு முன்பு ஏழெட்டு மாதத்திற்கு குடும்ப செலவுகளை ஈடு செய்யக்கூடிய அவசர நிதியை நம் கைவசம் வைத்திருக்க வேண்டும். அந்த அவசர நிதி தான் எதிர்பாராத நிகழ்வுகளின் போது ஏற்படும் செலவை சமாளிக்க உதவும். அதை விடுத்து எல்லாவற்றையும் முதலீடு செய்து விட்டால் அவசர நிதியை திரட்ட முடியாது திண்டாடுவோம். அப்பொழுது அந்த சேமிப்பிலும் முதலீட்டிலும் தான் கையை வைப்போம்.
மேலும் வரவும் செலவும் இணையாகவோ மீதமாகும் தொகை சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு மட்டுமே போதுமானதாகவோ இருக்கும் பட்சத்திலும் அவசர நிதி கையிருப்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சேமிப்பையும் முதலீட்டையும் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதுவும் நிதி இலக்கை நோக்கிய திட்டமிடலுக்கு பெரிய தடங்கலாக மாறிவிடும். அப்பொழுதும் முதலீடு செய்ய தயங்குவோம். விவரம் புரியாமல் குழம்புவோம்.
ஆதலால் பண வரவுக்கு ஏற்ப நாம் விரும்பும் வாழ்க்கை முறை, நமக்குத் தேவைப்படும் பணத்தின் அளவு போன்ற விஷயங்களை வரையறை செய்து நிதி இலக்குகளை தீர்மானிக்க வேண்டும். அந்த இலக்கை அடைய எவ்வளவு சேமிக்க வேண்டும்? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எத்தனை ஆண்டுகள் அதற்கு தேவைப்படும்? என்பதை கணக்கிட்டு பார்த்து அதற்கு ஏற்ப திட்டமிடுவது தான் இலக்கை எளிமையாக அடைவதற்கு சிறந்த வழி.
வருமான வரியை ஈடு செய்யும் வகையிலான நிதி திட்டங்களை தேர்ந்தெடுத்து அது எப்படி எல்லாம் வரிச்சலுகையை வழங்குகின்றன என்பதையும் கணக்கில் வைத்து செயல்படுவது முதலீடு செய்வதற்கு நல்ல வழியை வகுத்து தரும்.
ஆதலால் சம்பாதிக்கத் தொடங்கும் பொழுதே பட்ஜெட்டை உருவாக்க வேண்டும். அதில் வரவு செலவுகளை மாதம் தோறும் கட்டமைத்து, வீண் செலவுகளை குறைத்து, அதில் மீதமாகும் தொகையை ஆர்.டி போன்ற சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதிலிருந்து ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு சேமிப்பு முதலீடு போன்றவற்றில் நிதானமாக நீந்தி கரை சேரலாம். இது நமக்கு நல்ல வருவாயையும் தன்னம்பிக்கையையும், முதலீடு செய்ய துணிச்சலையும் கொடுக்கும்.