

எதிர்பாராத செலவுகளுக்கு கடன் வாங்குவதைத் தவிர்க்க காப்பீடு அவசியம். எதிர்பார்த்த செலவுகளுக்கு கடன் வாங்குவதைத் தவிர்க்க சேமிப்பு மற்றும் முதலீடு அவசியம்.
ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
கடந்த காலங்களில் மக்கள் எந்த ஒரு செலவுக்கும் பணத்தைச் சேமித்தே செலவு செய்தனர். கடன் வாங்குவதைத் தவிர்த்தனர். சேமிப்பின் மூலம், கடனைத் தவிர்க்க முடியும். ஆனால், சேமித்தால் மட்டும் போதாது. முதலீட்டின் மூலமே பணவீக்கத்தினை வெல்லமுடியும். உதாரணமாக, பண வீக்கத்தினை 8% என கொண்டால், 1000 ரூபாய் சேமித்தால் அடுத்த ஆண்டு 1000 ரூபாய்தான் இருக்கும். ஆனால், 8% பணவீக்கத்தின் காரணமாக 1000 ரூபாய் பொருளின் விலை 1080 ரூபாய் ஆகியிருக்கும். எனவேதான் சேமிப்பு மட்டுமின்றி பணத்தைப் பெருக்கும் முதலீடும் அவசியம்.
முதலீட்டின் கூறுகள் யாவை?
எந்த ஒரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு.
1. பணம் வளரும் விகிதம் (Rate of Return)
2. பணத்தை இழக்கும் அபாயம் (Risk)
3. நீர்ப்புத்தன்மை (Liquidity)
எந்த ஒரு முதலீட்டாலும் இந்த மூன்றையும் ஒரே சமயத்தில் வழங்க இயலாது. உதாரணமாக, குறுகிய காலத்தில், பங்குகளில் பணம் வளரும் விகிதம் அதிகம். நீர்ப்புத்தன்மை அதிகம். ஆனால், பணத்தை இழக்கும் அபாயமும் அதிகம். குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு பங்குகள் சார்ந்த முதலீடுகள் ஆபத்தானவை. குறுகிய காலத்தில், வைப்பு நிதிகளில் பணம் வளரும் விகிதம் நடுத்தரம். நீர்ப்புத்தன்மை நடுத்தரம். பணத்தை இழக்கும் அபாயம் குறைவு. குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு வைப்பு நிதிகள் சார்ந்த முதலீடுகள் சிறப்பானவை. எனவே, குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
குறிக்கோள்களை எவ்வாறு பிரித்துக்கொள்ளலாம் ?
குறிக்கோள்களை பின்வருமாறு பிரித்துக் கொள்ளலாம்.
1. குறுகிய காலக் குறிக்கோள்கள் (5 வருடங்களுக்குள்ளான) - வருட இறுதியில் சுற்றுலா செல்ல தேவைப்படும் பணம், மின்னணு உபகரணம் வாங்க தேவைப்படும் பணம்
2. நடுத்தர காலக் குறிக்கோள்கள் (5 முதல் 10 வருடங்களுக்குள்ளான) - வீடு வாங்குவதற்கான முன்பணம், குழந்தைகளின் மேல்படிப்பிற்கான பணம்
3. நீண்ட காலக் குறிக்கோள்கள் (10 வருடங்கள் தாண்டிய) - குழந்தைகளின் திருமணத்திற்கு தேவைப்படும் பணம், ஓய்வுகாலத்திற்கு தேவைப்படும் பணம்
முதலீட்டின் வகைகள் யாவை?
அடிப்படையில் முதலீடுகளை பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், நிலம் என வகைப்படுத்தலாம். பங்குகள் நிறுவனங்கள் பணம் திரட்ட உதவுகின்றன. கடன்பத்திரங்கள் நிறுவனங்கள் கடன்பெற உதவுகின்றன. இவை இரண்டும் சேர்ந்த முதலீட்டுக் கலவை போதுமானது. உணவு, உடை, இருப்பிடம் போன்றவை அத்தியாவசியத் தேவைகள். நிலம் நாம் வாழ்வதற்கு மட்டும் போதுமானது. நிலத்தின் முதலீடு மூலம் பணத்தைப் பெருக்குவது கடினம். வரலாற்றில், தங்கம் பணவீக்கத்தினை ஒட்டியே வளர்ந்துள்ளது. நீண்ட காலக் குறிக்கோள்களில் முதலீட்டின் பரவலாக்கத்திற்கு தங்கத்தை வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதிகமாக தங்கத்தில் முதலீடு செய்யக்கூடாது.
குறிக்கோள்களுக்கு எவ்வாறு முதலீடு செய்வது?
குறிக்கோள்களுக்கு ஏற்ற முதலீட்டுக் கலவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
குறுகிய காலத்திற்கேற்ற முதலீடுகள் - வங்கியின் வைப்பு நிதி (Fixed Deposit), தொடர் வைப்பு நிதி (Recurring Deposit) போன்றவை போதுமானவை. குறிக்கோளுக்குத் தேவைப்படும் மாதாந்திர பணத்தை ஒதுக்கவேண்டும். கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய எண்ணினால், நீர்ப்புத்தன்மை பரஸ்பர நிதிகள் (Liquid Funds), பணச்சந்தை பரஸ்பர நிதிகள் (Money Market Funds) போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவை குறுகிய கால கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதால், வட்டி விகிதம் சார்ந்த அபாயம் (Interest rate risk) குறைவு. பங்குகள் குறுகிய காலத்திற்கு ஏற்றவை அல்ல.
நடுத்தர காலத்திற்கேற்ற முதலீடுகள் - பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் சார்ந்த கலவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பங்குகளின் விகிதாச்சாரம் குறைவாக வைத்திருக்கவேண்டும். 20% வரை வைத்திருக்கலாம். கடன் பத்திரங்களின் விகிதாச்சாரம் அதிகமாக வைத்திருக்க வேண்டும். பங்குகளுக்கு நிப்டி 50 போன்ற பங்குச்சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளைப் (NIFTY Index Fund) பயன்படுத்திக் கொள்ளலாம். நீர்ப்புத்தன்மை பரஸ்பர நிதிகள், பணச்சந்தை பரஸ்பர நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வருடாந்திர சமன்படுத்துதல் (Annual rebalancing) செய்து, இந்த விகிதாச்சாரத்தைக் காக்க வேண்டும். வருடாந்திர சமன்படுத்துதல் என்பது ஆண்டு இறுதியில் பங்குகள் அல்லது கடன்பத்திரங்களின் வளர்ச்சி அதிகமாக இருந்தால், அதிகமாக வளர்ந்த இடத்தில் பணத்தை மீட்சி (Redeem) செய்து, குறைவாக வளர்ந்த இடத்தில் முதலீடு செய்யவேண்டும். இதன் மூலம், முதலீட்டின் பணத்தை இழக்கும் அபாயத்தினைக் குறைக்கிறோம்.
நீண்ட காலத்திற்கேற்ற முதலீடுகள் - பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் சார்ந்த கலவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பங்குகளின் விகிதாச்சாரம் அதிகமாக வைத்திருக்க வேண்டும். 60% வரை வைத்திருக்கலாம். பணத்தின் இழப்பை தாங்கும் அளவிற்கு ஏற்ப 70%,80% வரை வைத்திருக்கலாம். பங்குகளுக்கு நிப்டி 50 போன்ற பங்குச்சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீண்ட கால நிறுவனங்கள் கடன்பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதிகள் (Corporate bond fund), அரசாங்கத்தின் கடன்பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதிகள் (Gilt Fund) போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றில், கடனின் அசலை இழக்கும் அபாயம் (Credit Risk) குறைவு. குறிக்கோளுக்கு வெகு முன்னரே, பங்குகளின் விகிதாச்சாரத்தினைப் படிப்படியாக குறைக்கத் தொடங்கி, குறிக்கோளின் காலத்தின்போது, 0% என பங்குகளின் விகிதாச்சாரத்தினை குறைத்து விடவேண்டும். வருடாந்திர சமன்படுத்துதல் செய்து, இந்த விகிதாச்சாரத்தைக் காக்க வேண்டும்.
குறிக்கோள்களுக்கு ஏற்ற முதலீடுகளைச் செய்து, எதிர்பார்த்த செலவுகளுக்கு கடன் வாங்காமல் சமாளிக்க முடியும். முதலீடுகளின் மூலம், கடனைத் தவிர்க்க வாழ்த்துகள்.