சந்தையை கணிக்க நினைப்பது சூதாட்டமா? உங்கள் மனமே உங்களை ஏமாற்றுகிறதா?

Investment tips
Investment tips
Published on

Investment tips tamil: நம்மில் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய ஆசை என்பது கையில் இருக்கும் பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்பதுதான். அதற்காக நாம் தங்கம், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என பல வழிகளைத் தேடுகிறோம். ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நாம் அனைவருமே ஒரு சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டே இருக்கிறோம். 

விலை குறையும்போது வாங்க வேண்டும் என்றும், விலை உச்சத்தில் இருக்கும்போது விற்க வேண்டும் என்றும் நாம் கணக்கு போடுகிறோம். ஆனால் இந்த கணக்குகள் நிஜத்தில் பலிக்கிறதா என்பதைப் பற்றியும், நமது மனம் நம்மை எப்படி ஏமாற்றுகிறது என்பதைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நாளை நடப்பதை யாராலும் கணிக்க முடியாது!

இன்றைய இணைய உலகில் எங்கு பார்த்தாலும் பங்குச்சந்தை நிபுணர்கள் நிரம்பி வழிகிறார்கள். நாளை தங்கம் விலை ஏறும் அல்லது சந்தை விழும் என்று அடித்துச் சொல்பவர்கள் ஏராளம். ஆனால், நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் உறுதியாகக் கணிக்க முடியாது என்பதே நிதர்சனம். ஒருவேளை யாராவது அப்படி கணித்து அது சரியாக நடந்தால், அது அவர்களின் திறமை என்பதை விட அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். 

சரியான நேரத்தில் சரியான இடத்தில் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இவர்கள் கணிப்பு பலிக்கும் போது தம்பட்டம் அடிப்பார்கள். ஆனால் அதுவே தோல்வியடைந்தால் அமைதியாகிவிடுவார்கள். எனவே யூடியூப் வீடியோக்களைப் பார்த்துவிட்டு நாளை இதுதான் நடக்கும் என்று நம்புவது புத்திசாலித்தனம் அல்ல.

உளவியல் பொறி!

விலை மிகவும் குறைவாக இருக்கும்போது வாங்க வேண்டும் என்பதுதான் முதலீட்டின் அடிப்படை விதி. ஆனால் விலை அதலபாதாளத்தில் இருக்கும்போது நம்மால் வாங்க முடிகிறதா என்றால் இல்லை என்பதே பதில். காரணம், விலை இன்னும் கீழே போய்விடுமோ என்ற பயம் நம்மைத் தடுத்துவிடுகிறது. சரி, விலை ஏறும்போதாவது விற்கிறோமா என்றால் அதுவும் இல்லை. இன்னும் விலை ஏறும், இன்னும் லாபம் கிடைக்கும் என்ற பேராசை நம்மை விற்க விடுவதில்லை.

கடைசியில் விலை உச்சத்தில் இருக்கும்போது, ஐயோ எல்லோரும் சம்பாதிக்கிறார்களே, நாம் விட்டுவிட்டோமே என்ற பதற்றத்தில் (FOMO) நாம் வாங்க ஆரம்பிக்கிறோம். நாம் வாங்கிய சிறிது நேரத்திலேயே விலை சரசரவென குறையத் தொடங்கும். அப்போது பயத்தில் நஷ்டத்திற்கு விற்றுவிட்டு வெளியேறுகிறோம். 

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பெண் மனம்!
Investment tips

இப்படித்தான் நமது மனம் உச்சத்திலும் சரி, வீழ்ச்சியிலும் சரி, நம்மைத் தவறான முடிவுகளை எடுக்க வைக்கிறது. சந்தையின் போக்கை கணிப்பதாக நினைத்துக்கொண்டு நாம் செய்யும் அனைத்துமே உண்மையில் ஒரு சூதாட்டம் போலத்தான் முடிகிறது.

சரியான தீர்வுதான்?

சந்தையை யாராலும் கணிக்க முடியாது என்பதை முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். விலையைப்பற்றி கவலைப்படாமல், நம்மிடம் எப்போது பணம் இருக்கிறதோ அப்போதெல்லாம் முதலீடு செய்வதே சிறந்த வழி. அதுவும் ஒரே இடத்தில் மொத்த பணத்தையும் போடாமல் தங்கம், பங்குகள், ஃபிக்ஸட் டெபாசிட் என பிரித்து முதலீடு செய்வது புத்திசாலித்தனம். பத்து வருடங்கள் கழித்து பார்க்கும்போது, நாம் போட்ட பணம் நிச்சயம் வளர்ந்திருக்கும். தினமும் விலையைப் பார்த்து பதற்றப்படுவதை விட, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்துவிட்டு நிம்மதியாக இருப்பதே சிறந்தது.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை முதலீடு - வாரன் பஃபெட் கூறும் ஆலோசனைகள்...
Investment tips

பங்குச்சந்தையோ அல்லது தங்கமோ, நாளை என்ன நடக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். அதை கணிக்க நினைப்பது நேர விரயம். சந்தை ஏறினாலும் இறங்கினாலும் பதற்றப்படாமல், ஒரு ஒழுக்கமான முதலீட்டாளராக இருப்பதே நம் பணத்தைப் பாதுகாக்கும் வழி. 

அடுத்தவர் சொல்வதை நம்பி பணத்தைப் போடுவதை விட, நமது நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்துவதே நமக்கு மன அமைதியைத் தரும். பேராசையையும் பயத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நிதானமாக முதலீடு செய்பவரே உண்மையான வெற்றியாளர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com