

காலையிலேயே டென்சனுடுடன் சமைத்துக் கொண்டிருந்தாள் கீதா.. மணி 7-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் குழந்தைகளை எழுப்பவில்லை. அதை நினைக்கும்போது பதட்டம் மேலும் அதிகமானது போலத் தோன்றியது. பள்ளிக்கூட ஆட்டோ 8 மணிக்கு வாசலுக்கு வந்து விடும். அதற்குள் பிள்ளைகளைத் தயார் செய்ய வேண்டும். இந்த நினைவுகள் அனைத்தும் மின்னல் என ஓடிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் சூடான வாணலியை இறக்கி வைத்தது நினைவில்லாமல் அதைத் தூக்கி கையில் சுட்டுக் கொண்டாள். அந்தக் பதற்றத்தில் தனக்கென போட்டு வைத்திருந்த காப்பி தம்ளரைத் தவறவிட்டு அடுக்களை முழுவதும் தெறித்தது.
கீதாவிற்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது. கொட்டிய காப்பியை சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மீண்டும் காப்பி தயாரிக்க நேரம் இடம் தராது என்ற போது கொஞ்சம் அதிகமாகவே வலித்தது. இத்தனைக்கு இடையில் படுக்கையறைக்கு ஓடி பிள்ளைகளை எழுப்பி விட்டுத் திரும்பினாள்.
"டேய், மிதுன் எந்திரி டா... டைம் ஆச்சு ஆட்டோ வந்துரும் தம்பி.." என்று சத்தமிட்டவாறு வாசலுக்கு விரைந்தாள். கைகள் கோலம் என்ற பெயரில் எதையோ விரைந்து வரைந்து தொலைத்தது. தனது கற்பனை ஓவியங்கள் பலவும் இன்று காணாமல் போனோர் பட்டியலில் சேர்ந்துவிட்டது என்பதை நினைத்துக் கொண்டே மீண்டும் படுக்கையறைக்குள் நுழைந்தாள். இளையவன் சரண் இன்னும் எழவில்லை..
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை ரெண்டு தட்டு தட்டி எழுப்பினாள். அவன் சற்று சிணுங்கிக் கொண்டே எழுந்தான் . மழலை இன்னும் மாறாத முகத்தை ரசிக்க கூட நேரமற்றவளாய் வேகமாய் குளியலறைக்குள் அழைத்துச் சென்று பல் துலக்கி விட்டு குளிக்க வைத்து வேகமாய் கிளப்பி விட்டாள்.
இதற்குள் மிதுன் கிளம்பி விட்டது சற்று ஆறுதலையும் தந்தது. இருவரையும் ஹாலில் அமர வைத்துவிட்டு தோசை வார்க்க வைத்திருந்த கல்லை மறந்தவள் பதறி ஓடினாள். அவசர கதியில் தோசைகள் வந்து விழுந்தன.
எந்திரமாய் பிள்ளைகள் வயிற்றில் அவற்றை விட்டு நிரப்பினாள். அவர்கள் மெல்வதற்க்குத் தடுமாறும் போது தாயாக மனது வலித்தாலும் கடிகார பூதத்தை நினைக்கும் போது மனம் பதறியது.
"தம்பி முழுங்குமா.. ஆட்டோ வந்துரும் டைம் ஆச்சு .." என்று பதிவு செய்யப்பட்ட வரிகள் போலத் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாள். ஆட்டோ வருவதற்குள் பிள்ளைகளின் வயிற்றை நிறைக்க வேண்டும்.. இதுவே அவளது மனநிலை.
ஒரு வழியாக பிள்ளைகள் உண்டு முடித்து ஷூ அணியவும் ஆட்டோ வருவதற்கும் சரியாக இருந்தது.. "அம்மா , டாட்டா பை பை .." என்று சொன்னபடி தெரு திரும்பும் வரை கை காட்டிய பிள்ளைகளை நினைத்த போது நெஞ்சு ஏதோ செய்தது..
இனி ஒரு நொடி தாமதித்தாலும் அந்த மானேஜரிடம் பேச்சு வாங்க வேண்டும் என நினைத்த மாத்திரத்தில் புயலாக புறப்படத் துவங்கினாள். வேகமாக குளியலறைக்குள் நுழைந்தவள் 5 நிமிடங்களில் தயாராகி முடித்தாள். காலை உணவை நின்று கொண்டே விழுங்கித் தீர்த்தாள். தனக்கான மதிய உணவைத் தூக்கிக் கொண்டு வெளியேறியவள் இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்தாள். இப்போதுதான் துவங்கும் காலை... தனக்கு மட்டும் தொடங்கி இடைவேளை கேட்பது போல இருந்தது..
தெரு தாண்டும்போது இடுப்பில் 1 வயது குழந்தையுடன் நின்று நாயைக் காட்டி சோரூட்டிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.. நைட்டியுடன் வேலைக்குச் செல்லும் கணவனின் சிடுசிடுப்பை பொருட்படுத்தாது எதையோ அவனது மதிய உணவுப் பையில் வைத்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண் .. இவர்களுக்கு காலை இனிதான் துவங்கும் போல என்று எண்ணியவளுக்கு மனது எதையோ தேடியது போல இருந்தது.
வீடு என்பது பெண்ணுக்கு சிறையா ? சிறகு கொண்டிருக்கும் பறவையா ? சிந்தித்தபடி சிக்னலில் நின்றவளுக்கு வெயிலில் நின்ற பெண் காவலரைக் கண்ட போது ஆறுதல் பிறப்பது போல தெரிந்தது...