

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வரும் இஸ்ரேல்–ஈரான் போர், அரபு நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் பொருளாதார பின்னடைவு நாமக்கல் முட்டை ஏற்றுமதியிலிருந்து இருந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் வரை தொடர்கிறது. அதேநேரம் இந்த புதிய பொருளாதார சவால்கள் இந்தியா போன்ற மிகப்பெரிய பொருளாதார நாடுகளுக்கு புதிய படிப்பினையும் தருகிறது.
நாமக்கல் முட்டை ஏற்றுமதி:
தமிழகத்தின் முட்டை உற்பத்தி மையமான நாமக்கல்லிருந்துதான் அமீரகம், ஓமன், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு, மாதந்தோறும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் கோழி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. போர் காரணமாக கடல் வழி போக்குவரத்து தடைபட்டுள்ளதால் ஏற்றுமதி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் முட்டைகளை தேக்கி வைக்க முடியாததால், முட்டை உற்பத்தியாளர்களுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும்.
மாம்பழக்கூழ் ஏற்றுமதி தேக்கம்:
மாம்பழக்கூழ் ஏற்றுமதியில் தமிழகத்தில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முக்கிய பங்களிக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவின் மாம்பழக் கூழுக்கு பெரிய அளவில் சந்தை உள்ளது. தற்போதைய போர் சூழலினால் ₹2,000 கோடி மதிப்பிலான மாம்பழக்கூழ் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக புதிய மாம்பழ அறுவடையும், மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணியும் தொய்வடைந்துள்ளது. இதனால் மாம்பழ விவசாயிகளும், பதப்படுத்தும் ஆலைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி பாதிப்பு:
ஈரான் இஸ்ரேல் போர் கடைசியில் கடலைமிட்டாய் வரையில் பாதிப்பை கொடுத்துள்ளது. கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகள் கடலை மிட்டாய் உற்பத்திக்கு புகழ்பெற்றது. கடலை மிட்டாய் தயாரிப்பில் இந்தப் பகுதியில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அரபு நாடுகளில் பிரபலமான இந்த கடலை மிட்டாய்கள் கப்பல் போக்குவரத்து பாதிப்பால், ஏற்றுமதி செய்ய முடியாமல் இருக்கிறது. இதனால், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கடலை மிட்டாய்க்களை விற்பனை செய்யும் வரையில் புதிய உற்பத்தி தொடங்க முடியாமல் பல நிறுவனங்கள் பாதித்துள்ளன.
பாஸ்மதி அரிசி மற்றும் காய்கறிகள்:
உலகின் மிகச்சிறந்த அரிசி வகையாக கருதப்படும் பாஸ்மதி அரிசிக்கு உலக நாடுகளில் பெரிய சந்தை உள்ளது. முக்கிய மத்திய கிழக்குப் பகுதியில் விரும்பப்படும் முதன்மை அரிசி வகையாக பாஸ்மதி உள்ளது. ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் சுமார் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி துறைமுகங்களிலும், கப்பல்களிலும் தேங்கியுள்ளது. அரபு நாடுகளுக்கு காய்கறிகளும் இந்தியாவிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, போரினால் காய்கறிகளின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
தீப்பெட்டித் தொழில் பாதிப்பு:
தமிழகத்தின் தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மெழுகு, ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளது. தற்போது இறக்குமதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மெழுகு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், ஶ்ரீ வில்லிபுத்தூர், சிவகாசி, கோவில்பட்டி சுற்றுப்புற பகுதிகளில் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை பாதிப்பு:
போர் சூழல் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையும் ஏற்ற இறக்கமாகவே நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தினையும் ஏற்படுத்தி வருகிறது.
மீண்டும் மீட்சி பெற:
1990 களில் நடைபெற்ற வளைகுடா போருடன் ஒப்பிட்டால் , இது மிகச்சிறிய போர் என்றே கூறலாம். அன்றைய பெரிய போரில் இந்தியாவின் பொருளாதாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இன்றைய காலத்தில் இந்தியா உலகின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இந்தியப் பொருளாதாரம் மற்ற நாட்டுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அதனால், எங்கு பிரச்சனை எழுந்தாலும் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியா தனது ஏற்றுமதியை அமெரிக்கா, அரபு நாடுகளுக்கு மட்டும் கவனம் செலுத்தாமல், கிழக்காசிய நாடுகள், ஆப்பிரிக்கா , ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் மனித வளம் அதிகம். ஏற்றுமதியை விட உள்நாட்டில் வியாபாரத்தில் வியாபாரிகள் அதிகக் கவனம் செலுத்தவேண்டும். அவர்களின் ஏற்றுமதி சந்தையை விட இந்திய சந்தை மிகப்பெரியது என்பதையும் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.