
இன்றைய பொருளாதார உலகில் அனைவரது மத்தியிலும் முதலீடு குறித்த விழிப்புணர்வு மேலோங்கியுள்ளது. இதன் காரணமாக முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலீடு செய்யும் முறை தான், அதன் பலனைத் தீர்மானிக்கிறது. மத்திய அரசுத் திட்டங்களில் முதலீடு செய்தால் பாதுகாப்பு நிறைந்ததாக இருக்கும். அதே வேளையில், இலாபம் குறைவாகவே கிடைக்கும். கொஞ்சம் ரிஸ்க் எடுக்கத் துணிந்தால் 13% வரை இலாபம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
ஒரு சிலர் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் வங்கிக் கடன் பெற்று, புதிதாக ஒரு வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டு, வாடகைப் பணத்தில் இஎம்ஐ கட்டுவது நல்ல முதலீட்டு யுக்தியாக இருக்குமா என்றும் சிந்திப்பதுண்டு. ரியல் எஸ்டேட் துறை அசுர வளர்ச்சியை அடைந்திருந்தாலும், இதுமாதிரியான முதலீட்டு எண்ணங்கள் சரிவருமா என்பதை நன்றாக ஆராய்ந்த பிறகே பலன் தருமா என்பதைச் சொல்ல முடியும்.
சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் வீடுகள் மற்றும் ஃபிளாட்டுகளின் விலை கோடிக்கணக்கில் விற்பனையாகிறு. சொந்த வீட்டை வாங்க வேண்டுமென்றால் நிச்சயமாக நம் கையில் பாதியளவு பணமாமவது இருக்க வேண்டும். வீட்டை மொத்தமாக வங்கிக் கடனிலேயே வாங்க நினைப்பது தவறான எண்ணம். அப்படியே நீங்கள் நினைத்தாலும், வீட்டின் மொத்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கடனாக கிடைக்கும்.
சொந்த வீடு இல்லாதவர்கள் கடன் வாங்கி வீட்டை வாங்குவது பரவலாக நடக்கும் விஷயம் தான். ஆனால் முதலீட்டு நோக்கத்தில் கடன் பெற்று வீட்டை வாங்க நினைப்பது சரிவராது. இடத்தைப் பொறுத்து வீட்டு வாடகையில் வேறுபாடு இருக்கும் என்பதால், அதிகபட்சமாக ரூ.20,000 இலிருந்து ரூ.30,000 வரையே வாடகை கிடைக்கும். ஆனால் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணை வாடகையை விட அதிகமாக இருந்தால், நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். வீட்டுக் கடன் நீண்ட கால கடன் என்பதால் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.
இருப்பினும் வீடு வாங்குவதற்குத் தேவையான மொத்த பணத்தில் குறைந்தபட்சம் பாதி பணத்தை கையில் வைத்திருந்தால், மீதி பணத்திற்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம். இத்தகைய சூழலில் வாடகைப் பணத்தைக் கொண்டு மாதத் தவணையை எளிதாக செலுத்த முடியும். ஆனால் வீடு வாங்கிய உடனேயே வாடகைக்கு ஆள் கிடைப்பதும் கடினம். அதேசமயம் வீட்டு பராமரிப்பு செலவுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வரை தேவைப்படும்.
கடனே வாங்காமல் வீட்டை வாங்கி வாடகைக்கு விடுவது ஓரளவு இலாபத்தைக் கொடுக்கும். கடன் பெற்று இன்னொரு வீட்டை வாங்கி வாடகைக்கு விடுவதில் பெரிதாக இலாபம் கிடைக்காது. ஆகையால் கடன் வாங்காமல் கையில் இருக்கும் பணத்தை தங்கம், பிக்சட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முதலீட்டைத் தீர்மானிக்கும் முன்பு அதிலுள்ள பலன்களை மட்டும் பார்க்காமல், விளைவுகளையும் ஆராய வேண்டும். வாடகைப் பணத்தைக் கொண்டு மாதத் தவணை கட்டும் காலமெல்லாம் எப்போதோ முடிந்து விட்டது. இன்றைய காலகட்டத்திற்கு இந்த முதலீட்டு யுக்தி எடுபடாது என்பதே எதார்த்தமான உண்மை.