
குறுகிய காலத்தில் அதிக லாபத்தைப் பெற வேண்டுமானால், அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தான் சிறந்தவை. அஞ்சல் அலுவலகம், எல்ஐசி மற்றும் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களைக் காட்டிலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நல்ல ரிட்டர்ன்ஸ் கிடைக்கும். இருப்பினும் இது பொருளாதாரச் சந்தையுடன் தொடர்புடையது என்பதாலும், இதுகுறித்த புரிதல் இல்லாததாலும் நடுத்தர மக்கள் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் பக்கமே வருவதில்லை. இந்நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆண்டுக்கு 12% ரிட்டர்ன்ஸைத் தருவதாக பலரும் சொல்வது உண்மை தானா என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
பங்குச்சந்தையுடன் தொடர்புடைய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்தான் பெரு முதலீட்டாளர்களின் முதல் தேர்வு. சந்தை அபாயங்களுக்கு உட்பட்டு இருந்தாலும் கணிசமான லாபத்தைக் கொடுப்பதால் இத்திட்டங்களுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. தற்காலத்தில் பரவலாக முதலீடு செய்ய விரும்பும் நடுத்தர வர்கத்தினர் கூட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிறிய அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
பொதுவாக வங்கிகள், எல்ஐசி மற்றும் அஞ்சல் அலுவலகத் திட்டங்களில் 6 முதல் 7.5% வரையே வட்டி கிடைக்கும். இந்த வட்டி விகிதத்தில் ஒருவர் முதலீடு செய்தால், அந்தத் தொகை இரட்டிப்பாக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 12% ரிட்டர்ன்ஸைத் தருவதால் 6 ஆண்டுகளிலேயே உங்கள் முதலீடு இரட்டிப்பாகி விடும். இருப்பினும் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை கவனித்து, கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஃபண்ட் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது என்பதை அறிந்து கொண்டு, அதில் முதலீடு செய்ய வேண்டும்.
அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யக் கூடாது. முதலில் பொருளாதாரச் சந்தையை தொடர்ந்து கவனித்து வர வேண்டியது அவசியம். அதோடு நிதி ஆலோசகரின் உதவியையும் இதில் நாடலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 12% ரிட்டர்ன்ஸைத் தருவதற்கு 2 காரணங்களைக் கூறலாம். முதலில் ஒவ்வொரு ஃபண்ட் பிரிவிலும் உள்ள பல்வேறு திட்டங்கள், தொடர்ச்சியாக கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவு வருவாயை ஈட்டியுள்ளன என்று பார்க்க வேண்டும். இதில் 12%-க்கும் மேல் வருவாயை ஈட்டிய திட்டங்களே அதிகம். அதாவது லார்ஜ்கேப் ஃபண்ட் திட்டங்களில் 24-க்கு 8, மிட்கேப் ஃபண்ட் திட்டங்களில் 20-க்கு 20, பிளெக்ஸிகேப் ஃபண்ட் திட்டங்களில் 18-க்கு 12, ஸ்மால்கேப் ஃபண்ட் திட்டங்களில் 13-க்கு 13 மற்றும் இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் திட்டங்களில் 28-க்கு 17 என இவையனைத்தும் 12%-க்கும் மேல் வருவாயை ஈட்டியுள்ளன.
இரண்டாவது காரணம் என்னவென்றால், இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10.10% வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மிகத் திறமையாக நடத்தப்படும் பெரு நிறுவனங்கள் பலவும் 2% முதல் 3% வரை கூடுதலான லாபத்தை ஈட்டும். இவையிரண்டு காரணங்களைக் கொண்டு தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நிச்சயமாக 12% ரிட்டர்ன்ஸைத் தரும் என பலராலும் கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பங்குச்சந்தையானது தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு சரிவை நோக்கிச் சென்றால், இந்த 12% ரிட்டர்ன்ஸ் பொருந்தாது என்பது தான் நிதர்சனமான உண்மை. இதனால் தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்று சொல்லப்படுகிறது.