

ஜனவரி 1, 2026 முதல் நமது வங்கி சேவைகள், சமூக வலைதள பயன்பாடு மற்றும் வரி நடைமுறைகளில் முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த புதிய விதி நெறிமுறைகளை கவனிக்கத் தவறினால் அது நம் நிதி நிலையை பாதிக்கும்.
1) பான் ஆதார் இணைப்பு:
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் நம் பான் கார்டு செல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதாவது பான் கார்டு செயலிழந்து போகலாம். இதனால் வங்கி பரிவர்த்தனை தொடங்கி வருமான வரிக் கணக்கு தாக்கல், வருமான வரி ரீஃபண்ட் அனைத்திலும் சிக்கல்கள் ஏற்படலாம். ஜனவரி 1, 2026 முதல் பெரும்பாலான வங்கி மற்றும் அரசு சேவைகளுக்கு பான் மற்றும் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். அதை செய்யத் தவறினால் கணக்கு அணுகல் கட்டுப்படுத்தப்படலாம் அல்லது தடுக்கப்படலாம்.
2) கிரெடிட் ஸ்கோர்:
கிரெடிட் ஸ்கோர் புதுப்பிக்கப்படும் காலம் மாறுகிறது. இதுவரை கிரெடிட் ஸ்கோர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இனி ஒவ்வொரு வாரமும் அப்டேட் செய்யப்பட உள்ளது. இதனால் இ.எம்.ஐ -யை மிஸ் செய்தாலோ, கடன் திரும்ப கட்டாவிட்டாலோ நம்முடைய கிரிடிட் ஸ்கோரில் அவை பிரதிபலிக்கும். கிரெடிட் ஸ்கோர் சரியான நேரத்தில் புதுப்பிக்கப்படும். சரியான நேரத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு இது சாதகமாக இருக்கும்.
3) 8வது ஊதியக்குழு:
ஏழாவது ஊதியக் குழுவின் காலாவதி தேதி டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. எனவே ஜனவரி 1, 2026 முதல் அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு அமலுக்கு வருகிறது. இதனால் மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களுக்கு சம்பளம், பென்ஷன் தொகை போன்றவற்றில் மாறுதல் அதாவது ஓய்வூதியத்தில் திருத்தங்கள் வரலாம். இதன் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உயர வாய்ப்புள்ளது.
4) புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவம்:
ஜனவரி முதல் புதிய வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த வருமான வரி படிவத்தில் ஏற்கெனவே வங்கி பரிவர்த்தனைகள், செலவுகள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே இதை நிரப்புவது மிகவும் எளிதானதாக இருக்கும்.
5) கேஸ் சிலிண்டர்:
ஜனவரி முதல் வீட்டுப் பயன்பாடு மற்றும் கமர்ஷியல் பயன்பாடு எல்பிஜி சிலிண்டர்களின் விலை மாற உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.
6) புதிய பாதுகாப்பு விதிகள்:
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் UPI முறையில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பாதுகாப்பு விதிமுறைகள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றங்களை தடுக்க மொபைல் சிம் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதே விதி whatsapp, டெலிகிராம் போன்ற தகவல் தொடர்பு செயலிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப், டெலிகிராம் செயலிகள் நம் மொபைலின் சிம் கார்டு எண்ணுடன் நேரடியாக இணைக்கப்படும். இது பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
7) பி எம் கிஸான் மாற்றம்:
விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தில் புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இனிமேல் இந்த திட்டத்தின் கீழ் பண உதவி பெறுவதற்கு பிரத்யேக 'கிசான் ஐடி' வைத்திருப்பது கட்டாயம். நில ஆவணங்கள், பயிர் விவரங்கள், ஆதார் மற்றும் வங்கி கணக்கு தகவல்கள் இந்த ஐடியுடன் இணைக்கப்படும். இது திட்டத்தின் தவறான பயன்பாட்டை தடுக்கவும், தகுதியான விவசாயிகளுக்கு பலன் சென்று சேரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
8) கார் விலை உயர்வு:
வாகன சந்தையிலும் விலை மாற்றம் காணப்படுகிறது. ஹூண்டாய் தனது அனைத்து மாடல்களுக்கும் 0.6% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. மேலும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக Volkswagen மாடல்களைப் பொறுத்து 2.9% முதல் 6.5% வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு 2026 தொடக்கம் முதலே கார்கள், ஃபிரிட்ஜ், ஏசி ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான வாய்ப்பு என பல முக்கிய மாற்றங்களுடன் மக்களின் செலவுகளையும் திட்டங்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது.