

பலருக்கும் கார் வாங்குவது என்பது கனவாக இருக்கும். அந்த ஜிஎஸ்டி 2.0 வந்த பிறகு கார்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதன் மூலம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பலரின் கார் வாங்கும் கனவு நனவாகி உள்ளது. குறிப்பாக கார்களில் விலை குறைந்துள்ளதால் மக்கள் எஸ்யூவி ரக கார்கள், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட கார்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் புது கார் வாங்கும் போது அரசாங்கம் நீங்கள் வாங்கும் கார்களின் மதிப்பிற்கு ஏற்ப உங்களுக்கு பணம் தரும் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆமாங்க.
நீங்க புது கார் வாங்கும் போது அரசு உங்களுக்கு Tax refund செய்யும். ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலானவர்கள் இந்த பணத்தை பெறாமலே விட்டு விடுகிறோம். சரி வாங்க இப்போது Tax refund செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
நீங்க கார் ஷோரூமுக்கு போய் கார் வாங்கும் போது அந்த பில்லில் TCS 1% என்று இருக்கும். அதாவது Tax collected at source என்று 1% பிடித்திருப்பார்கள். அதாவது நீங்கள் புதிதாக கார் வாங்கும்போது உங்களுக்கு காரை விற்பனை செய்யக்கூடிய அந்த நிறுவனம் வருமான வரி சட்டத்தின் பிரிவு Section 206Cஇன் கீழ் TCS 1% பிடித்தம் செய்து அதனை வருமான வரித்துறையிடம் வழங்கிவிடும். அதாவது காரின் மதிப்பு ஏற ஏற அதில் ஒரு சதவீதம் தொகை TCS என பிடித்தம் செய்யப்படும் .
உதாரணமாக நீங்கள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை வாங்குவதாக வைத்துக்கொண்டால் உங்களுடைய பில்லில் TCS 1% என 10,000 ரூபாய் பிடித்திருப்பார்கள். அதுவே நீங்கள் ரூ.20 லட்சம் மதிப்புள்ளகாரை வாங்குவதாக வைத்துக்கொண்டால் உங்களுடைய பில்லில் TCS 1% என 20,000 ரூபாய் பிடித்திருப்பார்கள்.
அதிக மதிப்புள்ள பொருட்கள் வாங்குவதை கண்காணிக்க வேண்டும் , வரி ஏய்ப்பை தடுக்க வேண்டும், முறைகேடான சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த TCS என்பது பிடித்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு கார் வாங்கும் போது பிடித்த தொகையை நாம் டேக்ஸ் ரீஃபண்டாக பெறலாம். நீங்க கார் வாங்கிய பிறகு அந்த கார் டீலரிடம் சென்று 27 டி FORM (FORM 27D) கேட்டு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும்போது (ITR) நம்முடைய FORMல் 26AS சோதித்துப் பார்க்க வேண்டும். அதில் FORM 27D விவரம் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
அப்படி TCS பிடித்த விவரம் அதில் இருக்கும் பட்சத்தில் அந்த TCS தொகையை நீங்கள் ரீஃபண்ட் கோரி வருமானவரித்துறையிடம் விண்ணப்பித்து அந்த தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது விதிமுறை பொதுமக்களுக்கு மட்டுமே பொருந்தும். கார் டீலர்கள், மறு விற்பனைக்காக காரை வாங்கும்போது இந்த விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.