பிளாஸா ஒப்பந்தம் முதல் பங்குச்சந்தை வீழ்ச்சி வரை: ஜப்பானை வீழ்த்திய பொருளாதார நீர்க்குமிழி!

ஜப்பானை உலுக்கிய சொத்து நீர்க்குமிழியும், அது உலக நாடுகளுக்குக் கற்பித்த கசப்பான பாடங்களும்!
சொத்து நீர்க்குமிழி - Lost Decade Japan
சொத்து நீர்க்குமிழி - Lost Decade JapanAI Image
Updated on

ரலாற்றில் அவ்வப்போது பொருளாதார நீர்க்குமிழிகள் நிகழ்ந்துள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய பொருளாதார நீர்க்குமிழியான ஜப்பானின் சொத்து நீர்க்குமிழி (Asset Bubble) பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். இது இழந்த தசாப்தம் (Lost Decade) என்றும் அழைக்கப்படுகிறது.

ஜப்பானின் சொத்து நீர்க்குமிழி எப்படி உருவானது?

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பெரிதாக பாதிக்கப்பட்டது. அதனுடைய கட்டடங்களில் 25% தரைமட்டமாகிவிட்டன. 82% கப்பல்கள் நீரில் மூழ்கிவிட்டன.‌ இதிலிருந்து ஜப்பான் ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு எழுந்தது. பல்வேறு சீர்திருத்தங்கள் ஜப்பானில் செய்யப்பட்டன. அரசரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. போரை வெறுக்கும் புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.

ஜப்பானின் ஏகாதிபத்திய போக்கை ஆதரித்த பெரிய நிறுவனங்களின் குழுவான ஜைபாட்சுவை (Zaibatsu) ஒடுக்க முடிவெடுக்கப்பட்டது. அவை சந்தையில் ஏகபோக உரிமை (Monopoly) நிலையில் இருந்தன. அவைகளின் பங்குகளின் சதவீதம் குறைக்கப்பட்டு, சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட ஏதுவாக்கப்பட்டது. சந்தையில் போட்டி அதிகரிக்கப்பட்டது.

தொழிலாளர் சங்கங்கள் ஊக்குவிக்கப்பட்டன.‌ ஜப்பானின் 38% நிலமானது அரசாங்கத்தால் வாங்கப்பட்டு சகாய விலையில் அங்கு வேலை செய்தவர்களுக்கு விற்கப்பட்டது. இவை ஜப்பானை மக்களாட்சி நாடாக மாற்றியபோதும், பொருளாதார பிரச்னைகளை சரி செய்யவில்லை. பணவீக்கம், குறைந்த உற்பத்தி போன்றவை உருவாக்கிய உணவுப் பற்றாக்குறை ஜப்பானில் தொடர்ந்தது. பனிப்போரில் முதலாளித்துவ முறையில் ஜப்பானை சிறப்பாக கொண்டுவர அமெரிக்கா விரும்பியது.

இதையும் படியுங்கள்:
பேராசையால் வீழ்ந்த இங்கிலாந்து: உலகின் முதல் பங்குச்சந்தை ஏமாற்று வித்தை 'சவுத் ஸி பபுள்' வரலாறு!
சொத்து நீர்க்குமிழி - Lost Decade Japan

கி பி 1949 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை உயர்த்த டாட்ஜ் திட்டம் (Dodge Plan) கொண்டுவரப்பட்டது. பொருட்களுக்கு கொடுத்த மானியங்கள் நிறுத்தப்பட்டன. அரசாங்கத்தின் செலவுகள் குறைக்கப்பட்டன. பணத்தாள் அச்சடிப்பு குறைக்கப்பட்டது. ஒரு டாலருக்கு 360 யென் என்ற அளவில் யென்னின் மதிப்பு குறிக்கப்பட்டது. இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்கள் ஜப்பானின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கூட்டிச்சென்றன. அடுத்த சில தசாப்தங்களில் ஜப்பான் மிக வேகமாக பொருளாதார வளர்ச்சியில் உச்சத்தை நோக்கி வீறு நடை போட்டது.

கிபி 1952 இல் கொரியப் போரில் ஜப்பான் அமெரிக்கப் படைகளுக்கு படைத்தளமாக விளங்கியபோது, ஜப்பானிய பொருட்களின் விற்பனை அதிகரித்தது. இயற்கை வளங்கள் குறைவாக இருந்த சிறிய நாடான ஜப்பான் தொழில் மயமாக்கல் மற்றும் ஏற்றுமதி மூலம் வெகுவிரைவாக வளர்ந்தது. கிபி 1960 இல் ஜப்பானிய பிரதமர் ஹயாடோ இகேடா (Hayato Ikeda) ஜப்பானின் வருமானத்தை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக்க எண்ணினார்.

சொத்து நீர்க்குமிழி - Lost Decade Japan
சொத்து நீர்க்குமிழி - Lost Decade JapanAI Image

ஆனால், அதனை 7 வருடங்களிலேயே ஜப்பான் அடைந்தது. கிபி 1955 முதல் கிபி 1973 வரை வருடா வருடம் 10% வளர்ச்சியை ஜப்பான் அடைந்தது. இவ்வாறு ஜப்பான் வளர்ந்த வேலையில், பல்வேறு படிநிலைகளை பூர்த்தி செய்வதற்கான ஜப்பானின் மனிதவளம் நன்றாக இருந்தது. கிபி 1960களிலேயே 79% மக்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தனர். கிபி 1973 ஆம் ஆண்டு ஜப்பானில் எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டது. ஜப்பான் 99% எண்ணெய்த் தேவையை இறக்குமதி செய்து வந்தது.

இந்த எண்ணெய் நெருக்கடியினால் ஜப்பானின் உற்பத்தி விலை கூடியது. கிபி 1974 இல் பணவீக்கம் 25% எட்டியது. ஜப்பான் தனது எண்ணைய் கொள்முதல்களை பரவலாக்கிய போதும், முதலீட்டாளர்கள் ஜப்பானின் எண்ணெய் மீதான சார்பினை புரிந்து கொண்டனர். ஜப்பானின் வளர்ச்சி வருடா வருடம் 10% இருந்து 5% ஆக குறைந்தது. தொழில்நுட்பம் குறையத் தொடங்கியது. ஆனாலும், உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் இரண்டாவது இடத்தை ஜப்பான் எட்டியது.

கிபி 1980களில் ஜப்பானின் நிலத்தின் மதிப்பு கூடத்தொடங்கியது. ஜப்பான் பொதுவாகவே ஒரு விவசாய நாடு. அதனால் நிலம் வாங்குவதில் மக்களுக்கு பெரும் விருப்பம் இருந்தது.

கிபி 1956 முதல் கிபி 1986க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஜப்பானின் நிலத்தின் மதிப்பானது 5000% அதிகரித்தது. வங்கிகளும் நிலத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என கடன்களை வழங்கின.ஜப்பானின் பொருட்களுக்கு வெளிநாடுகளில் பெரும் மவுசு இருந்தது. அவைகள் சிறந்த தரத்துடனும் குறைந்த விலையுடனும் இருந்தன. மற்ற நாடுகளில் ஜப்பானிய பொருட்களுடன் போட்டியிடுவது கடினமாக இருந்தது.‌ உலகத்தின் தொழில்நுட்ப தலைநகராக ஜப்பான் இருந்தது. உலகின் 50 பெரிய நிறுவனங்களில் 32 ஜப்பானில் இருந்தன.

கிபி 1985 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக இருக்க(Trade Deficit), அதனை சீர் செய்ய அமெரிக்க டாலரின் மதிப்பு குறைக்கப்பட்டது. இதற்காக நியூயார்க்கில் இருந்த பிளாசா ஹோட்டலில் ஐந்து பெரிய பொருளாதார நாடுகள் சந்தித்து அமெரிக்க டாலரின் மதிப்பு ஆனது குறைக்கப்பட்டது.

இது பிளாஸா ஒப்பந்தம் (Plaza Accord) என்றழைக்கப்பட்டது. இப்போது ஒரு டாலருக்கு நிகரான யென்னின் மதிப்பானது 160 யென்னாக குறைக்கப்பட்டது. இங்குதான் ஜப்பானின் சொத்து நீர்க்குமிழி தொடங்கியது.

ஜப்பானின் யென் மதிப்பு அதிகமானதால் ஜப்பானின் ஏற்றுமதி பொருட்களின் விலை அதிகரித்தது. முன்னைப் போல் ஜப்பானிய நிறுவனங்களால் அதிக அளவில் பொருட்களை விற்க முடியவில்லை.‌ எனவே ஜப்பானிய நிறுவனங்களை ஊக்குவிக்க ஜப்பானிய மத்திய வங்கி பேங்க் ஆஃப் ஜப்பான் வட்டி விகிதத்தை குறைத்தது. பணப்புழக்கத்தை அதிகரிக்க எடுத்த இந்த முடிவானது மக்களை பெருமளவில் கடன் வாங்கி பங்குச்சந்தையிலும் நிலங்களையும் வாங்கி குவிக்க ஊக்குவித்தது.

ஜப்பான் வங்கிகள் தாராளமாக கடன்களை வழங்கின. இதற்கு முன்பு கடன் வழங்குவதற்கு ஜன்னல் விதிமுறைகள் (Window Guidelines) இருந்தன. அவை இப்போது புறக்கணிக்கப்பட்டன. அதிக அபாயகரமான முதலீடுகளில் இறங்கும் டோக்கின் நிதிகளில் (Tokkin Funds) முதலீடுகள் 40 டிரில்லியன் யென் அளவு(300 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) குவிந்தன.

ஜப்பானிய சொத்துக்களின் மதிப்பானது 1985 லிருந்து 1989 வரையிலான காலகட்டத்தில் 4 மடங்கு அதிகரித்தது. ஜப்பானிய அரண்மனையின் மதிப்பானது அமெரிக்காவின் மொத்த கலிபோர்னியா மாகாணத்தின் மதிப்பை விட அதிகமாக கருதப்பட்டது. அப்பொழுது மக்கள் பங்குச் சந்தையில் பெருமளவில் முதலீடு செய்தனர்.

ஒரு நிறுவனத்திற்கு எவ்வளவு நிலம் உள்ளதோ அதற்கு ஏற்றவாறு நிறுவனத்தின் பங்கின் விலை அதிகரித்தது. யூக வணிகம் பங்கு சந்தையில் அதிகமானது. ஹோண்டா போன்ற நிறுவனங்களின் இலாபத்தில் நடப்பு வருமானம் (Operating Profit) மட்டுமன்றி யூக வணிகத்தின் (Speculation) காரணமாக மட்டுமே 50% அதிகமாக இலாபம் இருந்தது. ஜப்பானில் மக்களால் வீடுகளை வாங்க இயலாத அளவுக்கு விலை அதிகரித்ததால் பல தலைமுறைகளுக்கு கடன் கட்டக்கூடிய 100 வருடக் கடன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சொத்து நீர்க்குமிழி - Lost Decade Japan
சொத்து நீர்க்குமிழி - Lost Decade JapanAI Image

இத்தகைய யூக வணிகத்தின் உச்சகட்டமாக டிசம்பர் 1989இல் பங்குச்சந்தை நிக்கி 225 (Nikkei 225) உச்சகட்டமாக கிட்டத்தட்ட 39 ஆயிரம் தொட்டது. அப்போதுதான் யசுஷி மோ(Yasushi Mo) பேங்க் ஆஃப் ஜப்பான் தலைவராக பதவியேற்றார். அவர் இந்த நீர்க்குமிழியை உடைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே, வட்டி விகிதத்தை 4.25% ஆக்கினார். தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டு ஆகஸ்ட் 1990 இல் 6% ஆக அதிகரிக் கப்பட்டது. இதன் காரணமாக, யூகம் சார்ந்து இருந்த பங்குச்சந்தையின் வளரச்சி அடி வாங்கியது.

கிபி 1992 இல் நிக்கி 225 தனது மதிப்பில் 60% இழந்தது. வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தமுடியாமல் பல கடன்களை தீர்க்காமையில் (Default) சிக்கிக் கொண்டன. பெருமளவில் பணத்தை இழந்த மக்கள் பொருட்களை வாங்குவதைக் குறைத்துக் கொண்டனர்.

ஜப்பான் பொருளாதாரம் மந்தத்தை (Recession) நோக்கி பயணித்தது. பணப்புழக்கத்தை அதிகரிக்க ஜப்பான் வட்டி விகிதத்தை 0.5% வரை குறைத்தது. பல பொது காரியங்களுக்கு பணம் செலவிட்டது. இந்த இழந்த தசாப்தங்களில் ஜப்பானின் பொருளாதாரம் 0.8% மட்டுமே வளர்ந்தது. பொருளாதாரம் பணவாட்டத்தை (Deflation) நோக்கி பயணித்தது. மக்கள் பொருட்களைக் குறைவாக வாங்க தொடங்கினர்.

பொருட்களின் விலைகள் குறைய தொடங்கின. விலை குறையும் என்று மக்களும் வாங்குவதைத் தள்ளிப்போட்டனர். இதன் காரணமாக தொழிற் சாலைகளில் புதிய கண்டுபிடிப்புகள் குறைந்தன. பலர் வேலைகளை இழந்தனர். பணவாட்டம் என்ற அபாயகரமான சுழற்சியில் பொருளாதாரம் இருந்தது. ஜப்பான் மத்திய வங்கி வங்கிகளுக்கு 0% வட்டியில் கடன் வழங்கியது.

மேலும், அவற்றின் கடன் பத்திர முதலீடுகளுக்கு இணையாக பணத்தைக் கொடுத்து, பணப்புழக்கத்தை அதிகரிக்க முயன்றது. இது அளவின் எளிமைபடுத்துதல் (Quantitative Easing) என்றழைக்கப் பட்டது. இந்த முயற்சிகள் அமெரிக்கா 2008 ஆம் அண்டு மந்தத்தைச் சந்தித்தபோது, அமெரிக்காவிற்கு பாடமாக விளங்கின.

இது அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு தொடர்ந்து 2018 ஆம் ஆண்டுதான் ஜப்பான் மறுபடியும் 1989 ஆம் ஆண்டு அடைந்த அதே பங்குச்சந்தை நிலையை அடைந்தது.‌ ஜப்பானின் இந்தப் பங்குச் சந்தை வீழ்ச்சியை கையாண்ட விதம் அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டு மந்தம் வந்தபோது கையாள்வதற்கு உதவியது.

இதையும் படியுங்கள்:
அமெரிக்காவை உலுக்கிய உலகப் பொருளாதார பெருமந்தம்: நாம் கற்க வேண்டிய பாடம் என்ன?
சொத்து நீர்க்குமிழி - Lost Decade Japan

ஜப்பானின் சொத்து நீர்க்குமிழி மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?

எந்த ஒரு சொத்திற்கும் உள்ளடங்கிய மதிப்பு உண்டு. அதைத் தாண்டி வாங்குவது, மதிப்பு வீழ்ச்சி அடையும்போது பெரும் கடனில் கொண்டு விடும். கடன் வாங்கி முதலீடு செய்வது அபாயகரமானது.

பணத்தைப் பரவலாக முதலீடு செய்யவேண்டும். பங்குகள் மட்டுமின்றி, கடன் பத்திரங்கள் என்று முதலீடு செய்யவேண்டும்.‌ யூக வணிகங்கள் கூடாது. பேராசை கூடாது. மத்திய வங்கிகள் நீர்க்குமிழியை முன்பே கவனித்து அதை உடைத்துவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறைத்துக்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com