

உலக வரலாற்றில் பல்வேறு பொருளாதார நீர்க்குமிழிகள் (Economic Bubbles) அவ்வப்போது நிகழ்ந்துள்ளன. இயந்திரப் புரட்சிக்கு பிறகு உலகில் நடந்த மிகப்பெரிய பொருளாதார நீர்க்குமிழியான உலகப் பொருளாதார பெருமந்தத்தைப் (Great Depression) பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
உலகப் பொருளாதார பெருமந்தம் எப்படி உருவானது?
முதலாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பணக்கார நாடாக உருவானது. போர் நடந்த போது, ஆண்கள் போரில் ஈடுபட்டதால், பெண்கள் வேலையில் சேர்ந்தனர். போரிலிருந்து திரும்பிய ஆண்களும் வேலைக்கு சேர்ந்தபடியால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. சம்பளங்கள் கூடின. வேலையில்லாதவர்கள் சதவீதம் 1.4% மட்டுமே இருந்தது.
வானொலி, இசைப்பேழை (Phonograph), சலவை இயந்திரம் (Washing Machine), வெற்றிட சுத்தப்படுத்தி (Vaccum Cleaner) போன்ற பல புதிய உபகரணங்கள் சந்தையில் வரத் தொடங்கின. மேலும், போர்ட் நிறுவனத்தின் மாடல் டி (Model T) சிற்றுந்து ஒன்றுகூட்டு வரிசை (Assembly Line) முறைப்படி தயாரிக்கப்பட்டதால், ஒரு சிற்றுந்தின் தயாரிக்கும் காலம் 12 மணி நேரத்திலிருந்து 90 நிமிடங்களாக குறைந்தது. இதனால் சிற்றுந்தின் விலை குறைந்தது.
கிபி 1910 ஆம் ஆண்டு 780 டாலர்கள் என்று இருந்த ஒரு சிற்றுந்தின் விலை 290 டாலர்களாக கிபி 1924 இல் குறைந்தது. பலர் சிற்றுந்து வாங்க தொடங்கினர். இதே ஒன்றுகூட்டு வரிசை முறையைப் பின்பற்றி மற்ற பல வீட்டு உபயோகப் பொருட்களும் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. இந்தக் காலகட்டமானது கர்ஜிக்கும் இருபதுகள் (Roaring Twenties) என்று அழைக்கப்பட்டது. ஜாஸ் (Jazz) இசை பிரபலமானது. பொருட்களை வாங்கி குவிப்பதில் மக்கள் ஆர்வமாக இருந்தனர்.
ஆனால், இங்கு ஒரு சிக்கல் இருந்தது. இந்தப் புதிய பொருட்களை வாங்குவதற்கு மக்களிடம் போதுமான அளவு பணம் இல்லை. வங்கிகள் கடன்களின் வட்டியைக் குறைத்துக்கொண்டே இருந்தன. கட்டுப்பாடுகள் இன்றி, கடன்களை மக்களுக்கு அள்ளிக் கொடுத்தன. முதன் முறையாக தவணை முறையில் பொருட்களை வாங்கும் பழக்கம் உருவானது. வீட்டின் 75% உபகரணங்கள் கடனில் இருந்தன. மாடல் டி சிற்றுந்து கூட, போர்டு நிறுவனம் தவணை முறையில் அளித்தது.
தானியங்கி சிற்றுந்துகளின் வளர்ச்சியால் அது சார்ந்த துறைகளான ரப்பர், மின்சாரம், எண்ணைய், இரும்பு போன்ற துறைகள் வளர்ந்தன. வீடுகள் கடன்களில் வாங்கப்பட்டன.
முதலாம் உலகப்போரில் தானியங்களின் தேவை அதிகரித்தபோது, விவசாயிகள் பயனடைந்தனர். தானியங்களின் உற்பத்தியைப் பெருக்க, அதிக நிலங்களை, விவசாய உபகரணங்களைக் கடனில் வாங்கினர்.பங்குச்சந்தையில் அதிக இலாபம் ஈட்டமுடியுமென மக்கள் கருதி, பங்குகளைக் கடன்களில் வாங்க தொடங்கினர்.
பங்குச்சந்தை அதிக இலாபம் ஈட்டும் முகாந்திரமாக மக்கள் பார்க்கத் தொடங்கினர். முடி திருத்துபவர், சமையல்காரர், சப்பாத்துகளைப் பளபளபாக்குபவர் என எல்லாரும் பங்குச்சந்தையில் இறங்கினர். 10% பணத்தைக் கொடுத்து, மீதமுள்ள 90% கடனை வங்கி மற்றும் பங்குச்சந்தை தரகர் வாயிலாக பெற்று, பங்குகளை விளிம்பு முறையில் (Margin) வாங்கினர். பங்குகள் இங்கு அடமானமாக கருதப்படும். பங்குகள் விலை குறைந்தால், பணத்தைக் கொடுத்து குறைந்தபட்ச பாக்கியை இங்கு காக்க வேண்டும். மொத்தமாக 120 பில்லியன் டாலர்கள் கடனில் இருந்தது.
கிபி 1921 முதல் கிபி 1929 வரை காலகட்டத்தில் பங்குச்சந்தை ஆறு மடங்கு அதிகரித்தது. இவ்வாறு யூக வணிகம் அதிகரித்ததன் காரணமாக, ஐக்கிய அமெரிக்க மத்திய வங்கி கிபி 1928 இல் வட்டி விகிதத்தை அதிகரித்தது.
கிபி 1929 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி சிலர் திடீரென பங்குகளை விற்க தொடங்க, அது பலருக்குப் பரவி, பீதியைக் கிளப்பி ஒரே நாளில் பங்கு சந்தையில் 13 மில்லியன் பங்குகள் விற்கப்பட்டன.
பங்குச் சந்தையின் மதிப்பு ஒரே நாளில் 11% விழுந்தது. இது கருப்பு வியாழக்கிழமை (Black Thursday) என்று அழைக்கப்பட்டது. அக்டோபர் 29, செவ்வாய் கிழமை, மறுபடி மக்கள் பீதியுடன் பங்குகளை விற்க, ஒரே நாளில் 16 மில்லியன் பங்குகள் விற்கப்பட்டன. ஒரே நாளில் 13 % பங்குச் சந்தை மதிப்பு இழந்தது. இது கருப்பு செவ்வாய் (Black Tuesday) என்றழைக்கப்பட்டது.
இரண்டு வாரங்களில் பங்குச்சந்தை 50% மதிப்பை இழந்தது. பங்குகளை விளிம்பு முறையில் கடன் வாங்கிய பலரிடம் பங்குச்சந்தை தரகர்கள், வங்கிகள் பணத்தைக் கேட்க, பல கடன்கள் கடன் தீர்க்காமையில் (Default) சிக்கிக் கொண்டன. பலர் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்தனர். பலர் திவால் ஆயினர். அமெரிக்க பங்குச்சந்தை பொருளாதார பெருமந்தத்தை நோக்கி பயணித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக பங்குச் சந்தை மதிப்பை இழந்து 1932 ஆம் ஆண்டு தனது மதிப்பில் 90% இழந்தது. மக்கள் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க முயல, வங்கிகளோ அந்தப் பணத்தைக் கடன் கொடுத்திருந்தன.
கடன்கள் வாராக் கடன்களாக ஆனபடியால், வங்கிகள் திவால் ஆகின. பேங்க் ஆப் யூனைடெட் ஸ்டேட்ஸ் என்ற பெரிய வங்கியில் ஒரே நாளில் 3 மில்லியன் பணமானது மக்களால் கோரப்பட்டது.
அமெரிக்காவின் மொத்த வைப்பு நிதியான 550 மில்லியன் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த வங்கியிடம் இருந்தது. இந்த வங்கி திவால் ஆனபோது மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பங்குச் சந்தை வீழ்ச்சி பெருமந்ததை துவக்கிய பொழுதும் மக்களின் பீதி பெருமந்தத்தை நோக்கி பொருளாதாரத்தை அழைத்துச் சென்றது.
சம்பளங்கள் குறைய தொடங்கின. மக்களின் பொருட்கள் வாங்கும் அளவு குறைய ஆரம்பித்தது. பணவாட்டத்தை (Deflation) நோக்கி அமெரிக்கப் பொருளாதாரம் நகர்ந்தது. இவ்வாறு பெருமந்தம் நிகழ்ந்த பொழுதும் இதனைச் சரி செய்ய அமெரிக்க அதிபர் ஹூவர் (Hoover) முயலவில்லை. பிரச்சனை தானே சரியாகவிடும் என்று எண்ணினார்.
பெரும் பாதிப்புக்குப் பிறகே, ஸ்மூட் ஹாவ்லி(Smoot Hawley Tariff) வரியைக் கொண்டு வந்து வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்களுக்கு பெரும் வரி விதித்தார்.
இதற்கு பதிலடியாக 25 வெளிநாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு பெருமளவு வரி விதித்தன. எனவே, இது உள்ளூர் சந்தையைக் காப்பாற்றுவதற்கு மாறாக உள்ளூர் சந்தையை இன்னும் மோசமாக்கியது. 25% மக்கள் வேலையின்றி இருந்தனர். கிபி 1930 முதல் கிபி 1933 வரையிலான காலகட்டத்தில் 9000 வங்கிகள் திவாலாயின.
கிபி 1932 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் (Franklin D Roosevelt) அதிபராக பதவியேற்றார். அவர் நியூ டீல் (New Deal) என்ற பொருளாதார சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பங்குச் சந்தையை கண்காணிக்கும் செக்யூரிட்டிஸ் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (Securities Exchange Commission - SEC) நிறுவனத்தை உருவாக்கினார்.
வங்கிகளில் முதலீடு செய்தவர்களின் முதலீட்டைக் காக்க ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Federal Deposit Insurance Corporation-FDIC) நிறுவனத்தை உருவாக்கினார். குறைந்தபட்ச சம்பளம்(Minimum Wage), சமூக பாதுகாப்பு நிதி (Social Security Fund - SSF) போன்றவற்றைக் கொண்டு வந்தார்.
கிபி 1933 ஆம் ஆண்டு தங்கப் படித்தரத்திலிருந்து (Gold Standard) அமெரிக்கா வெளியேறியது. பணப் புழக்கம் அதிகரித்தது. பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பாடு அடையத் தொடங்கியது.
கிபி 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் காரணமாக, போர் சம்பந்தமான தொழிற்சாலைகளில் பலர் வேலைக்குச் சேர்ந்தனர். வேலையற்றவர்கள் சதவீதம் 10% ஐ விட குறைந்தது. அரசாங்கம் பெருமளவில் போர் சார்ந்த முதலீடுகளில் ஈடுபட்டது. இவ்வாறு அமெரிக்கா பொருளாதாரப் பெருமந்தத்திலிருந்து வெளிவந்தது.
பொருளாதாரப் பெருமந்தம் நமக்கு தெரிவிக்கும் பாடம் என்ன ?
தவணை முறையில் கடன் வாங்கி பொருட்களை வாங்குவது ஆபத்தானது. கடன் வாங்கி பங்குகளை வாங்குவது ஆபத்தானது. கடன்களை வாங்கும்பொழுது அதை அடைக்காத போது நமது மற்ற சொத்துக்களை விற்க நேரிடுகிறது. முதலீடுகள் பல இடங்களில் பரவலாக செய்யப்பட வேண்டும்.
பங்கின் அடிப்படை அறியாமல், யூக வணிகங்கள் (Speculation) தவிர்க்கப்பட வேண்டும். பெருமந்த நிகழ்வின் போது முதலீட்டில் கை வைக்காமல் பொறுமையாக இருந்தால் மறுபடியும் பங்குச் சந்தை மேலேறும்போது, அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவசரகால நிதி வைத்திருப்பது அவசியமானது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: