
'சிறுதுளி பெருவெள்ளம் 'என்பது சேமிப்புக்கான பழமொழி. ஆரம்பத்தில் வங்கிகளில் சேமிப்பது, நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது, பிக்சட் டெபாசிட் போன்ற முறைகளில் திட்டமிட்டு அதிகம் சேமித்தார்கள். பின்பு நவீன கால சேமிப்பு முறைகளான மியூச்சுவல் ஃபண்ட் (mutual funds), SIP போன்றவற்றில் சேமித்தாலும் கட்டுப்பாடான சேமிப்பு பழக்கத்தை உருவாக்க முடியவில்லை. அந்த வகையில் ஜப்பானில் ககெய்போ (Kakeibo) என்ற சேமிப்பு முறை குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
'வீட்டு நிதி பதிவு புத்தகம்' என்பதுதான் ககெய்போ என்பதன் பொருள். ஜப்பானின் முதல் பெண் பத்திரிகையாளர் ஹானி மோட்டோகோ என்பவரால் 1904 ஆம் ஆண்டு இது உருவாக்கப்பட்டது. இந்த முறை எந்த டிஜிட்டல் சாதனங்களும், ஆப்-களும், எக்செல் ஷீட்களும் இல்லாமல், வெறும் நோட்புக், பேனா மட்டும் கொண்டு நிதியை கண்காணிக்க ஒரு எளிய முறையை பரிந்துரைக்கிறது.
ககெய்போ ஒவ்வொரு தேவையற்ற செலவை செய்வதற்கு முன்னால் கீழ்காணும் கேள்விகளை கேட்கும் பழக்கத்தை உருவாக்குவதை அடிப்படையாக கொண்டது. அந்தக் கேள்விகள்
*இந்த பொருள் இல்லாமல் வாழ முடியுமா?
*என் தற்போதைய நிதி நிலையில் இதை வாங்க முடியுமா?
*நான் இதைப் பயன்படுத்த போகிறேனா?
*வீட்டில் இதற்கு இடம் இருக்கிறதா?
*இதை எங்கே பார்த்தேன்? யாரிடம் இருந்து தெரிய வந்தது?
*இன்று எனது உணர்வு எப்படி இருக்கிறது? அமைதி? மன அழுத்தம்? சந்தோஷம்? ஆகிய மனநிலைகளில் ஒன்றில் இருக்கிறேனா?
*இதை வாங்குவதால் என்ன உணர்வு வருகிறது? அது எவ்வளவு நேரம் நீடிக்கும்?
இந்தக் கேள்விகளை பலர் யோசிக்காமல் செலவு செய்துள்ளனர். பின்பு புரிந்து கொண்டதால், அவரவர் மனநிலையை மாற்றும் சின்ன சின்ன செலவுகளை தவித்தனர். அதோடு உண்மையிலேயே தேவையான விஷயங்களுக்கு மட்டும் கவனத்தை செலுத்தும் நிலையை இதனால் உருவாக்கினர்.
இத்தகைய ககெய்போ முறையை பலரும் பின்பற்றியதால் தாங்கள் முன்பு சேமித்த பணத்தின் அளவைவிட பல மடங்கு அதிவேகமாக முதலீடும், சேமிப்பும் செய்ததோடு தெளிவான முடிவெடுக்க இந்த கேள்விகள் உதவிகரமாக இருந்தது .
ககெய்போ முறை என்பது வாழ்க்கையின் மகிழ்ச்சியை முழுவதும் அகற்றுவதாக இல்லாததோடு, தேவையற்ற செலவுகளை குறைக்கும் முறையாக இருந்தது. இதனால் உண்மையான தேவைகளின் மேல் கவனம் செலுத்த உதவி அதற்கான செலவு முறைகளை பின்பற்ற ஆரம்பித்தனர் .
இன்றைய பொருளாதார நிதி ஒழுங்கு மேலாண்மை என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கான செயலாக மட்டுமல்லாமல், அவரவருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் கலையாக மாற்றிவிட்டது. அதற்கு வழிகாட்டும் ஜப்பானிய முறையாக ககெய்போ ஒரு சிறந்த உதாரணம்.