'புரமோஷன் வேணாம் சாமி... நிம்மதி போதும்' என முடிவெடுக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்!

ஐடி உலகில் ‘ஜாப் ட்ராப்பிங்’ ட்ரெண்ட்: மேனேஜர் பதவியைத் தள்ளி வைத்து மனநிம்மதிக்காக சாதாரண ரோலைத் தேர்வு செய்யும் புதிய தலைமுறை!
Job Dropping Trend
Job Dropping Trend nri cornerAI Image
Updated on

Job Dropping Trend: சிறுவயது முதலே நன்றாகப் படித்து, அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பிய நாடுகளிலோ ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து, படிப்படியாக மேனேஜராக வளர வேண்டும் என்பதுதான் பலரின் நீண்டகாலக் கனவாக இருக்கும். ஆனால், தற்போது உலகளாவிய கார்ப்பரேட் உலகில், குறிப்பாக வெளிநாடுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

"பெரிய பதவி உயர்வும் வேண்டாம், அதிக சம்பளமும் வேண்டாம், எனக்கு எனது மன நிம்மதிதான் மிக முக்கியம்" என்று பலரும் தங்கள் பதவிகளைக் குறைத்துக்கொள்ளும் புதிய ட்ரெண்ட் மேற்கத்திய நாடுகளில் அதிரடியாக உருவாகியுள்ளது. இதைத்தான் ஆங்கிலத்தில் ஜாப் ட்ராப்பிங் (Job-Dropping) என்று அழைக்கிறார்கள்.

சிலிக்கான் வேலி முதல் லண்டன் வரை பரவி வரும் இந்தக் கலாச்சாரம், தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரிய பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, குறைவான பொறுப்புகளை மக்கள் தற்பொழுது அதிகம் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பதவி உயர்வால் வரும் மன அழுத்தம்!

பொதுவாக ஒரு பன்னாட்டு ஐடி கம்பெனியில் (MNC) சிறப்பாக வேலை செய்யும் ஒருவருக்கு லீட் அல்லது மேனேஜர் பதவியைக் கொடுத்து அழகு பார்ப்பார்கள். ஆனால், அந்தப் பதவி வந்த பிறகு அவர்கள் செய்யும் வேலை முற்றிலும் மாறிவிடும். வெளிநாடுகளில் மேலாளராகப் பணிபுரியும் போது, பல்வேறு டைம் ஸோன்களில் (Time Zones) உள்ள குழுக்களை நிர்வகிக்க வேண்டியிருக்கும்.

நாள் முழுவதும் குளோபல் மீட்டிங், எக்செல் ஷீட், ரிப்போர்ட் என்று அலைகிறார்களே தவிர, அவர்களுக்குப் பிடித்த தொழில்நுட்ப வேலையைச் செய்ய முடிவதில்லை. பன்முகத்தன்மை கொண்ட ஒரு குளோபல் அணியை நிர்வகிப்பது என்பது மிகப்பெரிய சவாலாகும். இதனாலேயே ஏற்படும் அதீத மன அழுத்தத்தைத் தவிர்க்க பலரும் சீனியர் பதவிகளை நிராகரித்துவிட்டு, சாதாரண பதவியிலேயே தொடர ஆசைப்படுகிறார்கள்.

பணத்தை விட நிம்மதி முக்கியம்!

அமெரிக்காவிலோ அல்லது பிற வெளிநாடுகளிலோ பெரிய பதவிகளுக்குப் போகும்போது டாலர்களிலும் யூரோக்களிலும் சம்பளம் கணிசமாக உயரும் என்பது நூறு சதவீத உண்மைதான். ஆனால் அதற்காகத் தங்களின் குடும்ப நேரம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்க இன்றைய இளைய தலைமுறையினர் தயாராக இல்லை. ஒரு காலத்தில் வெளிநாட்டில் சீனியர் வைஸ் பிரசிடென்ட் (Senior Vice President) அல்லது பிராஜெக்ட் ஹெட் (Project Head) போன்ற பதவிகளை அடைவது மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது.

ஆனால், இப்போது வொர்க் லைஃப் பேலன்ஸ் (Work-Life Balance) எனப்படும் வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமான சரியான சமநிலையைத்தான் பலரும் முழுமையாக விரும்புகிறார்கள். வெள்ளிக்கிழமை மாலை லேப்டாப்பை மூடி வைத்தால், திங்கட்கிழமை காலையில்தான் திறக்க வேண்டும்; வீக்கெண்டில் லாங் டிரைவ் செல்ல வேண்டும் என்ற சுதந்திரம் கீழ்நிலை பதவிகளில் மட்டுமே கிடைக்கிறது என்பதை வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆழமாக உணர்ந்துள்ளனர்.

கொரோனா ஏற்படுத்திய தாக்கம்!

கோவிட் லாக்டவுன் சமயத்தில், தாய்நாட்டையும் குடும்பத்தையும் விட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் வீட்டிலிருந்து வேலை பார்த்த பலருக்கும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் புரியத் தொடங்கியது. எந்திரம் போல உழைத்து என்ன சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணம் மேலோங்கியது. வருடத்திற்கு ஒருமுறை இந்தியா சென்று குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதும், தங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதும் தான் உண்மையான மகிழ்ச்சி என்பதை உணர்ந்தனர்.

இதையும் படியுங்கள்:
ஏஐ-யிடம் வேலையை இழக்காமல் தப்பிக்க சாணக்கியர் கூறும் 6 சீக்ரெட் டிப்ஸ் இதோ!
Job Dropping Trend

இதனால், பெரிய பொறுப்புகளைத் தலையில் ஏற்றிக்கொண்டு இரவும் பகலும் உழைப்பதைத் தவிர்க்கத் தொடங்கினர். குறைவான பொறுப்புகள் உள்ள வேலைக்கு மாறி, தங்களின் சொந்த வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர்.

நிறுவனங்கள் செய்ய வேண்டியது!

இந்த புதிய ட்ரெண்ட் உலகளாவிய நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. நன்றாக வேலை செய்யும் அனைவருக்கும் மேலாளர் பதவியைக் கொடுத்து அழகு பார்ப்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் இனி மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும்.

அனைவருமே பெரிய மேனேஜர் ஆக விரும்ப மாட்டார்கள். எனவே, அவர்களின் துறை சார்ந்த நிபுணத்துவத்தை வளர்க்கும் வகையிலான புதிய பதவிகளை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். ஊழியர்களும், குறிப்பாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர், தாங்கள் சேரும் போதே தங்களின் எதிர்பார்ப்புகளை நிர்வாகத்திடம் தெளிவாகத் தெரிவித்துவிடுவது மிகச் சிறந்த முடிவாகும்.

இதையும் படியுங்கள்:
நீங்க 30 வயச தாண்டுனவரா... உடம்பு வெயிட் போடாம இருக்க இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
Job Dropping Trend

அதிகப் பணம் மற்றும் அதிகாரம் என்ற மாயையைக் கடந்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றைய உலகளாவிய தலைமுறையினர் அதிக முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்க ஒரு நல்ல மாற்றமாகும். பதவி அல்லது பொறுப்புகளைக் குறைத்துக்கொள்வது ஒருபோதும் தோல்வியின் அடையாளம் கிடையாது. அது தங்களின் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் ஒரு தைரியமான முடிவு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com