

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கீவே (Keeway) இருசக்கர வாகன நிறுவனம், சீனாவின் QJ குழுமத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனம் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பல்வேறு ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக பிரீமியம் மற்றும் நவீன வடிவமைப்பு வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறது. அந்நிறுவனம், உலகளவில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்தி உள்ளது.
ஆண்டுதோறும் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் உலகின் மிக முக்கியமான இருசக்கர வாகன வர்த்தகக் கண்காட்சியான EICMA-வில் கீவேயின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஆண்டுதோறும் சந்தைகளுக்காகப் புதிய மாடல்களைக் காட்சிப்படுத்துவதுடன், தனது தரத்தையும் ஐரோப்பியச் சான்றிதழையும் அது தொடர்ந்து பேணி வருகிறது.
முன்னணி நிறுவனமான கீவே, வடிவமைப்பு, தரம் மற்றும் சேவை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துவதில் சிறந்து விளங்கும் தயாரிப்புகளை வழங்கி, ஸ்கூட்டர் மற்றும் சிறிய முதல் நடுத்தர அளவிலான மோட்டார் சைக்கிள் பிரிவுகளில் உலகளவில் தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
சென்னையில் கீவே வாகனங்களை வாங்க அல்லது டெஸ்ட்-ரைடு செய்ய விரும்பினால், அண்ணா சாலையில் உள்ள Keeway மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள் மூலம் அணுகலாம்.
இதற்கிடையே இந்திய இருசக்கர எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து, கீவே தனது புதிய ‘ஹைப்வோல்ட் ஆர்’ (Hypevolt R) என்ற பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிகபட்ச வேகம், அதிநவீன தொழில்நுட்பங்கள், சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் பிரீமியம் அம்சங்களை உள்ளடக்கிய சிறந்த செயல்திறனுடன் வெளிவந்துள்ளது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 12 கிலோவாட் திறன் கொண்ட மிட்-மவுண்டட் மின்மோட்டர் பொருத்தப் பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 180 கிமீ ரேஞ்ச் மற்றும் 115 கிமீ/மணி வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
அதாவது இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக (100%) சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் தூரம் வரை தடையின்றி பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கூட்டருக்கு வெளிப்புறம் மற்றும் உள்புறம் என இரு வகையாகவும் சார்ஜ் செய்யும் வசதியையும் வழங்கப்பட்டுள்ளது.
இது வெறும் 2.3 நொடிகளில் 40 கி.மீ. வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு 5 கிலோவாட்-ஹவர் அகற்றக்கூடிய பேட்டரிகள் இதில் இடம்பெற்றுள்ளன. 0 - 80% சார்ஜ் ஏற 3 மணி நேரம் ஆகும். முழு சார்ஜில் 180 கிலோமீட்டர் (IDC) வரை பயணிக்க முடியும். தினசரி பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற வகையில் இதன் ரேஞ்ச் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் செயல்திறன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
140 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டரில் வசதிகளை பொறுத்தவரை 5 அங்குல டி.எப்.டி.திரை, புளூடூத் இணைப்பு, புரொஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லேம்ப், யூ.எஸ்.பி. டைப்-ஏ மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட், 27 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கைக்கு கீழ் சேமிப்பு இடம் (Boot Space) ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, ஸ்கூட்டரின் முன் மற்றும் பின் என இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் டூயல் சேனல் ஏபிஎஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் கண்டறிதல் மற்றும் ரிவர்ஸ் கேமரா போன்ற பிரீமியம் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
கிரிஸ்டல் வைட் (Crystal White) மற்றும் பிளாட்டினம் (Platinum Grey) கிரே என இரண்டு வண்ணங்களில் ஹைப்வோல்ட் ஆர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஸ்கூட்டர், ஏதர் 450 அபெக்ஸ், டிவிஎஸ் எக்ஸ் மற்றும் பிற பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஹைப்வோல்ட் ஆர் ஸ்கூட்டரின் விலை அறிமுக சலுகையாக சுமார் ரூ.1.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், வெறும் 5 ஆயிரம் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து வண்டியை நமக்கானதாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த அதிநவீன பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை, உங்களின் தினசரி நகர்ப்புற பயணங்களை முற்றிலும் செலவு குறைந்ததாகவும், சொகுசானதாகவும் மாற்றப்போகிறது. பெட்ரோல் விலை உயர்வு பற்றிய கவலையின்றி, அதிநவீன பாதுகாப்பு தொழில் நுட்பங்களுடன் கூடிய ஒரு நீண்டதூர பயண அனுபவத்தை மிகக் குறைந்த முன்பதிவு தொகையிலேயே நீங்கள் உடனடியாகப் பெற முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: