

கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்கள் புதுப்புது மாடல்களில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.
அவ்வகையில் தற்போது ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. ‘யமஹா EC-06’ என்ற எலக்ட்ரிக் வாகனத்தை அந்நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
கடந்த ஆண்டே யமஹா EC-06 குறித்த அப்டேட்டுகள் வெளிவந்த நிலையில், தற்போது எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் நுழைந்துள்ளது யமஹா நிறுவனம்.
பொதுவாக வாகனச் சந்தையில் யமஹா பைக்குகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில் யமஹாவின் எலக்ட்ரிக் வாகனத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை:
தற்போது யமஹா EC-06 எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1,67,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
1. யமஹா EC-06 எலெக்ட்ரிக் பைக்கில் 4 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 169 கி.மீ. வரை பயணம் செய்யலாம்.
2. யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 79 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. இதில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 26 Nm டார்க் திறனையும், 6.7 kW பவரையும் உருவாக்கும் திறன் பெற்றது.
4. ஈக்கோ, ஸ்டாண்டர்டு மற்றும் பவர் ஆகிய 3 ரைடிங் மோட்கள் இதில் உள்ளன. இதுதவிர ரிவர்ஸ் மோடும் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
5. 2 சக்கரத்திலும் 200 மி.மீ. டிஸ்க் பிரேக்குகள் மற்றும் காம்பி பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளதால், எதிர்பாராத விபத்துகளை தடுக்க முடியும்.
6. பயணத்தின் போது பொருட்களை வைத்துக்கொள்ள இருக்கைக்கு அடியில் 24.5 லிட்டர் இட வசதியும் இருக்கிறது.
7. வேகம், மோட், பேட்டரி நிலை மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றைத் தெரிவிக்கும் LCD Display முகப்புப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.
8. தற்போது நீலம் கலந்த வெள்ளை நிறம் என்ற ஒரே கலரில் மட்டுமே இந்த வாகனம் விற்பனைக்கு வந்துள்ளது.
வாரண்டி:
யமஹா EC-06 எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரிக்கு 3 வருடங்கள் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.
யமஹா நிறுவனம் எலக்ட்ரிக் வாகன சந்தையில் நுழைந்துள்ளதால், மற்ற எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் யமஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்டைலிஷ் ஆன வடிவம், வாகன ஓட்டிகளை பெருமளவு ஈர்க்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.