
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. உயர்ந்து வரும் எரிபொருட்களின் விலை, சுற்றுச்சூழல் கவலைகள் மற்றும் அரசு வழங்கும் மானியங்கள் போன்றவை நாட்டில் எலெக்ட்ரிக் வாகானங்களுக்கான தேவையை அதிகரித்துள்ளன. பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவு மற்றும் பெட்ரோல் செலவும் மிச்சமாகும்.
மேலும் சமீப காலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெறும் சுற்றுச்சூழல் மாற்றாக மட்டும் இல்லாமல், நடைமுறைக்கு ஏற்றதாகவும், தொழில்நுட்பங்கள் நிறைந்ததாகவும், நீடித்து உழைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டதாகவும் உள்ளன. தினசரி பயணமாக இருந்தாலும் சரி, நீண்ட தூர பயணமாக இருந்தாலும் சரி, இந்த ஸ்கூட்டர்கள் சிறப்பான வகையில் வடிவமைக்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் ஓலா, ஏதர், ஹீரோ, பஜாஜ் போன்ற பல நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்கின்றன.
நீண்ட பயண தூரத்தை அடிப்படையாக கொண்டு, சந்தையில் பிரபலமாக இருக்கும் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொகுப்பை இந்த பகுதியில் பார்க்கலாம்.
டி.வி.எஸ். ஐக்யூப் என்பது டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இது தினசரி நகரப் பயணங்களுக்கு ஏற்றது. அதன் சிறப்பம்சங்களில் TFT டிஸ்ப்ளே, LED விளக்குகள், மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஜியோ-ஃபென்சிங் , ஸ்மார்ட் ஆப் அம்சங்கள் மற்றும் டிஜிட்டல் டேஷ்போர்டு ஆகியவை அடங்கும்.
ரூ.1.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கும் இது 3.4 கிலோவாட்ஸ் மோட்டாரைக் கொண்டுள்ளது மற்றும் அதன் 2.2 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரியிலிருந்து சுமார் 75 கி.மீ. நடைமுறை வரம்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்த ஸ்கூட்டர் ஐக்யூப், ஐக்யூப் எஸ், ஐக்யூப் எஸ்டி மற்றும் இரண்டு புதிய மாடல்களுடன் ஐந்து வகைகளில் கிடைக்கிறது. ஸ்டைலிங் மற்றும் குறைந்த இயக்கச் செலவுகளுடன் சிறந்த செயல்திறன், கம்பர்ட் மற்றும் கனெக்டட் மொபிலிட்டி ஆகியவற்றைத்தேடும் நகர்ப்புற ரைடர்களுக்கும் இது ஏற்றது.
டி.வி.எஸ் ஐகியூப் 2.2 கிலோவாட் பேட்டரி சக்தி கொண்ட இரு சக்கர வாகனங்கள் 950 வாட் சார்ஜர், 5 அங்குல அகலம் கொண்ட டி.எப்.டி வண்ணத்திரை, இரண்டு மணிநேரத்தில் 80 சதவீதம் விரைவாக சார்ஜ் ஆகும் திறம் கொண்டவையாக உள்ளன. அத்துடன், பாதுகாப்பு எச்சரிக்கை அம்சங்கள், திருப்பங்களில் வழிகாட்டும் அமைப்பு, பேட்டரி உபயோக எச்சரிக்கை, இருக்கையின் கீழ் 30 லிட்டர் அளவுள்ள பொருட்கள் வைப்பிடம் போன்ற வசதிகளும் உள்ளன.
ஏதர் 450எஸ் (Ather 450S) என்பது ஏதர் எனர்ஜி நிறுவனம் தயாரிக்கும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த தயாரிப்பு ஸ்மூத் ஆக்சலரேஷன் மற்றும் நிலையான ரேஞ்சை விரும்பும் ரைடர்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இது 2.9 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி, 5.4 கிலோவாட் மோட்டார் மற்றும் 115 கி.மீ. ரேஞ்சுடன், தினசரி பயணத்திற்கு உகந்ததாக உள்ளது. அதாவது ஏதர் 450எஸ் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால், 115 கிலோமீட்டர் தூரம் வரை செல்லமுடியும்.
இது 161 கி.மீ வரை செல்லக்கூடியது மற்றும் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டர் 7.45 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் மற்றும் எடை 108 கிலோ ஆகும். இதன் முக்கிய அம்சங்களில் 7 அங்குல டீப் வியூ டிஸ்ப்ளே, டியூப்லெஸ் டயர்கள், அலாய் வீல்கள், முன் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 12 அங்குல சக்கரங்கள் சவாரி மற்றும் கட்டுப்பாட்டை எளிதாக்குகின்றன. இதற்கு 3 ஆண்டுகள் அல்லது 30 ஆயிரம் கி.மீ உத்தரவாதம் உள்ளது. விலை ரூ.1.4 லட்சம்.
ஓலா எஸ் 1 ப்ரோ (Ola S1 Pro) என்பது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட மின்சார ஸ்கூட்டர் ஆகும். இந்த மாடல்களில் மேம்பட்ட ரேஞ்ச், அதிகபட்ச வேகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளன. இது வேகமானது, ஸ்மார்ட்டானது மற்றும் நெடுஞ்சாலை பயணங்களைக் கருத்தில் கொண்டும் தயாரிக்கப்பட்டது. ஓலா எஸ் 1 புரோ 141 கி.மீ/மணி வரை அதிகபட்ச வேகத்தை எட்டும் திறனைக் கொண்டுள்ளது, மேலும் 0 முதல் 40 கி.மீ/மணி வேகத்தை வெறும் 2.1 வினாடிகளில் எட்ட முடியும்.
இது 6 கிலோவாட் மோட்டார் மற்றும் 3 கிலோவாட் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட பேட்டரி மூலம், ஒரே சார்ஜில் 320 கி.மீ வரை ஓடக்கூடிய ரேஞ்சை வழங்குகிறது. இது பிரேக்-பை-வயர், இரட்டை-சேனல் ABS மற்றும் மோட்டார் கட்டுப்படுத்தி (MCU) மோட்டாருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாய்ஸ் கமெண்ட்ஸ், யூஸர் புரொபைல்ஸ் மற்றும் ஓ.டி.ஏ. அப்டேட்ஸ் போன்ற மென்பொருள் அம்சங்களுடன் கூடிய 7 அங்குல தொடுதிரையை கொண்டுள்ளது. இதற்கு உத்தரவாதக் கவரேஜ் 3 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ வரை உள்ளது. ஸ்டைலான, மினிமலிஸ்டிக் தோற்றத்தைக் கொண்டுள்ள ஓலா எஸ் 1 புரோவின் விலை ரூ.1.35 லட்சமாகும்.
