

பங்குச் சந்தையில் நேரடிப் பங்கு முதலீடு செய்பவர்கள் பொதுவாக லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என மூன்று பிரிவுகளை எதிர்கொள்கிறார்கள். இதில் மிட் கேப் இடைப்பட்ட பிரிவாக இருப்பதால் அவ்வளவாக கவனத்துக்கோ விவாதத்துக்கோ உள்ளாவதில்லை. முதலீட்டாளர்களிடையே அதிக கவனத்துக்கும், விவாதத்துக்கும், சார்பு நிலைக்கும் உள்ளாவது லார்ஜ் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள்தான்.
காரணம், இவை இரண்டும் முதலீட்டின் வெவ்வேறு தேவைகளைப் பிரதிபலிக்கின்றன. லார்ஜ் கேப் ஒப்பீட்டளவில் நிலைத்தன்மையை வழங்குகிறது; ஸ்மால் கேப் அதிக வளர்ச்சி வாய்ப்புகளை முன்னிறுத்துகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது விருப்பம், முதலீட்டு இலக்கு, அபாயத்தைத் தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஏதாவது ஒரு பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
இதை ஒட்டி அவ்வப்போது முதலீட்டு உலகிலும், பங்குச்சந்தை முதலீட்டில் ஈடுபடுகிற நண்பர்களுக்கு இடையிலும் சுவையான, காரசாரமான விவாதங்கள் நடப்பதும் உண்டு.
இந்தப் பிரிவுகள் எதைக் குறிக்கின்றன?
லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் எனும் வகைப்பாடு நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பின் (Market Capitalisation) அடிப்படையில் செய்யப்படுகிறது. செபி வரையறையின்படி, சந்தை மூலதன மதிப்பில் முதல் 100 இடங்களில் உள்ள நிறுவனங்கள் லார்ஜ் கேப்; 101 முதல் 250 வரையிலான நிறுவனங்கள் மிட் கேப்; 251-வது இடத்திலிருந்து கீழே உள்ளவை ஸ்மால் கேப் நிறுவனங்கள். இந்தப் பட்டியலை AMFI அவ்வப்போது வெளியிடுகிறது.
லார்ஜ் கேப்: நிலைத்தன்மையின் அடித்தளம்
லார்ஜ் கேப் நிறுவனங்கள் பொதுவாக நீண்டகாலச் செயல்பாட்டு வரலாறு, வலுவான வணிக அமைப்பு, பரந்த வாடிக்கையாளர் தளம், நிதி ஆதாரம் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். பல நிறுவனங்கள் பொருளாதாரத்தின் பல்வேறு சூழல்களிலும் தங்களது வணிகத்தைத் தொடர்ந்து நடத்தும் திறனைப் பெற்றிருக்கின்றன.
இதனால் ஸ்மால் கேப் பங்குகளுடன் ஒப்பிடும்போது இவற்றில் விலை ஏற்ற இறக்கம் பொதுவாகக் குறைவாக இருக்கும். ஆனால், அதனால் இவை நஷ்டத்தைத் தராது என்று அர்த்தமல்ல. பொருளாதார மந்தநிலை, துறை சார்ந்த சிக்கல்கள், நிறுவனத்தின் லாபம் குறைதல் போன்ற காரணங்களால் லார்ஜ் கேப் பங்குகளும் சரிவைச் சந்திக்கலாம்.
சமீப காலங்களில்கூட சில லார்ஜ் கேப் பங்குகளும், ப்ளூ சிப் பங்குகளும் கடும் சரிவைச் சந்தித்திருந்தன. அது மட்டுமல்ல; அவற்றில் சில பங்குகள் ஒரு வருடத்துக்கு மேலான சரிவையும் கொண்டிருந்தன. இன்னமும் சில லார்ஜ் கேப் பங்குகள் சரிவில்தான் உள்ளன.
லார்ஜ் கேப் முதலீட்டில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே பெரிய, மிகப்பெரிய நிறுவனங்களாக வளர்ந்துவிட்டதால் அவை ஸ்மால் கேப் நிறுவனங்களைப் போல அதிவேக வளர்ச்சியைப் பதிவு செய்வது ஒவ்வொரு முறையும் சாத்தியமில்லை.
ஸ்மால் கேப்: அதிக வளர்ச்சி வாய்ப்புகளின் களம்
ஸ்மால் கேப் நிறுவனங்களின் முக்கிய ஈர்ப்பு அவற்றின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்பாகும். தற்போது சிறிய அளவில் செயல்படும் ஒரு நிறுவனம், புதிய சந்தைகளில் நுழைவது, உற்பத்தித்திறனை அதிகரிப்பது, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் வேகமாக வளரக்கூடும்.
குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணு உற்பத்தி, பாதுகாப்புத் துறை, மின்சார வாகன உதிரிபாகங்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் சில சிறிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைக் கொண்டிருக்கலாம். சரியான நிறுவனத்தைச் சரியான மதிப்பீட்டில் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டால், நீண்டகாலத்தில் நல்ல வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆனால், அதிக வளர்ச்சி வாய்ப்பு என்பது அதிக அபாயத்தையும் உள்ளடக்கியது. நிதி ஆதாரம் குறைவு, அதிகக் கடன், குறைந்த பணப்புழக்கம், நிர்வாகக் குறைபாடுகள் போன்றவை சிறிய நிறுவனங்களைப் பாதிக்கலாம். சந்தை சரிவின்போது ஸ்மால் கேப் பங்குகள் அதிகமாக வீழ்ச்சியடையவும் வாய்ப்புள்ளது.
எதிரெதிர் அல்ல; ஒன்றையொன்று நிறைவு செய்பவை!
லார்ஜ் கேப், ஸ்மால் கேப் ஆகிய இரண்டையும் எதிரெதிர் துருவங்களாகப் பார்ப்பது வழக்கமான அணுகுமுறை. ஆனால், ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; ஒன்றையொன்று நிறைவு செய்பவை என்பதுதான் உண்மை. இரவும் பகலும் சேர்ந்தால்தான் ஒரு நாள் முழுமை பெறுகிறது. அதுபோல, நிலைத்தன்மையும் வளர்ச்சி வேகமும் இணைந்தால்தான் ஒரு முதலீட்டுப் போர்ட்ஃபோலியோ முழுமையான தன்மையைப் பெறுகிறது.
லார்ஜ் கேப் பங்குகள் போர்ட்ஃபோலியோவுக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. ஸ்மால் கேப் பங்குகள் அதற்கு வளர்ச்சிக்கான கூடுதல் வேகத்தை அளிக்கின்றன. ஒன்றில் இருக்கும் குறையை மற்றொன்று ஓரளவுக்கு ஈடுசெய்யும் வகையில் இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தலாம்.
இதனை ஒரு வீரியமிக்க கலப்பின அணுகுமுறையாகக் கருதலாம். நிலைத்தன்மை மட்டும் இருந்தால் வளர்ச்சி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
வளர்ச்சி வேகம் மட்டுமே இருந்தால் அதிக ஏற்ற இறக்கங்களைச் சமாளிப்பது சிரமமாகலாம். இரண்டையும் சரியான விகிதத்தில் இணைப்பதன் மூலம், இரு பிரிவுகளின் நேர்மறையான அம்சங்களையும் ஒரே போர்ட்ஃபோலியோவில் பெற வாய்ப்பு ஏற்படுகிறது.
லாபத்தைவிட முக்கியமானது மதிப்பீடு!
ஒரு பங்கு கடந்த ஓராண்டில் உயர்ந்திருக்கிறது என்பதற்காக அதை வாங்குவது சரியான முடிவாகிவிடாது. அந்த நிறுவனத்தின் பங்கு விலை அதன் வருவாய் மற்றும் லாப வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது நியாயமானதாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
இதற்கு P/E (Price to Earnings), P/B (Price to Book Value) போன்ற மதிப்பீட்டு அளவுகோல்கள் உதவுகின்றன. ஸ்மால் கேப் நிறுவனங்களில் எதிர்கால வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், சில சமயங்களில் அவற்றின் மதிப்பீடு மிகையாக இருக்கலாம். அதேபோல் லார்ஜ் கேப் பங்குகளும் அதிக விலையில் வர்த்தகமாகலாம். எனவே, நிறுவனத்தின் தரத்துடன் அதன் விலையையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.
முதலீட்டாளர் என்ன செய்யவேண்டும்?
முதலீட்டாளர்கள் தங்களது வயது, நிதி இலக்குகள், முதலீட்டுக் காலம், வருமான நிலை, நஷ்டத்தைத் தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இரு பிரிவுகளுக்கும் ஒதுக்கீடு செய்யவேண்டும்.
நிறுவனங்களின் நிதிநிலை, கடன் அளவு, லாப வளர்ச்சி, நிர்வாகத்தின் நம்பகத்தன்மை ஆகியவற்றையும் ஆராயவேண்டும். சந்தையில் ஒரு பிரிவு வேகமாக உயர்கிறது என்பதற்காக அதில் அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
புத்திசாலித்தனமான அணுகுமுறை
லார்ஜ் கேப் அல்லது ஸ்மால் கேப் என ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துத்தான் முதலீடு செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முதலீட்டின் உண்மையான நோக்கம் ஒரு பிரிவில் வெற்றிபெறுவது அல்ல; ஒட்டுமொத்தப் போர்ட்ஃபோலியோவில் வெற்றிபெறுவதுதான். லார்ஜ் கேப் வழங்கும் அடித்தளத்தின் மீது ஸ்மால் கேப் வழங்கும் வளர்ச்சி வாய்ப்புகளையும் சேர்த்துக்கொள்ளும்போது, நீண்டகாலச் செல்வ உருவாக்கத்துக்கு ஏற்ற சமநிலையை உருவாக்க முடியும்.
அதற்கான சரியான விகிதம் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் மாறுபடும். லாபத்தை மட்டுமே துரத்தாமல், அபாயத்தையும் மதிப்பீட்டையும் புரிந்துகொண்டு முதலீடு செய்வதே புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: