ஸ்மால் கேப் பங்குகளின் மகுடம்: பேராசையில் இழக்காமல் எப்படி சம்பாதிப்பது?

பங்குச்சந்தையில் ஸ்மால் கேப் பங்குகள் மூலம் பாதுகாப்பாக லாபம் ஈட்டுவது எப்படி?
ஸ்மால் கேப் - Share Market Investment
ஸ்மால் கேப் - Share Market Investment
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

கடந்த சில மாதங்களாகவே பங்குச்சந்தை முதலீட்டாளர் களில் ஒரு பிரிவினரின் கவனம் ஸ்மால் கேப் (Small-cap) பங்குகளின் பக்கமும் திரும்பி வருகிறது. லார்ஜ் கேப் மற்றும் மிட்கேப் பங்குகளுடன் ஒப்பிடும்போது, வளர்ந்துவரும் சிறிய நிறுவனங்களின் பங்குகள் அதிக வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கக்கூடும் என்பதுதான் இதற்கு ஒரு முக்கியமான காரணம்.

பங்குகளில் உள்ள முப்பெரும் பிரிவுகள்

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் அவற்றின் அளவின் அடிப்படையில் லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால் கேப் என மூன்று பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

முதலீட்டாளர்கள் தங்களின் நிதி நோக்கம் மற்றும் ஆபத்து தாங்கும் திறனுக்கு (Risk Tolerance) ஏற்ப பங்குகளைத் தேர்ந்தெடுப்பதே முறை. ஆனால், நேரடித் திட்டங்களில் சுயமாக முதலீடு செய்பவர்களில் பலர் அதிக லாப ஆசையால் தவறான பங்குத்தேர்வுகளையும், முறையற்ற போர்ட்ஃபோலியோ ஒதுக்கீட்டையும் செய்து பெரும் நஷ்டத்தைச் சந்திக்கின்றனர்.

எந்த வகை பங்கு யாருக்கு உகந்தது?

1. லார்ஜ் கேப் பங்குகள்: குறைந்த அபாயமும் மிதமான லாப வாய்ப்பும் கொண்டவை. லாபத்தைவிட முதலீட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு ஏற்றவை.

2. மிட்கேப் பங்குகள்: மிதமானது முதல் அதிகமானது வரையிலான அபாயமும் லாப சாத்தியமும் கொண்டவை. லார்ஜ் கேப்பைவிட அதிக வளர்ச்சி வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்களுக்கும், அதற்கேற்ற ஏற்ற இறக்கங்களைத் தாங்கக்கூடியவர்களுக்கும் உகந்தவை.

3. ஸ்மால் கேப் பங்குகள்: அதிக அபாயமும் அதிக லாப சாத்தியமும் கொண்டவை. "அதிக லாபம் பெற அதிக ரிஸ்க் எடுக்கத் தயார்" என்பவர்களுக்கான தேர்வு இது.

இதையும் படியுங்கள்:
ஐபிஓ நஷ்டத்தில் பட்டியலிடப்பட்டதா? உடனே விற்கலாமா அல்லது லாபம் பார்க்கலாமா?
ஸ்மால் கேப் - Share Market Investment

போர்ட்ஃபோலியோவில் ஸ்மால் கேப்பின் பங்கு

ஒரு போர்ட்ஃபோலியோவில் இந்த மூன்று ரகங்களையும் சரியான விகிதத்தில் கலப்பதே ஆபத்துகளைச் சமநிலைப்படுத்தும் சிறந்த முதலீட்டு அணுகுமுறையாகும்.

லார்ஜ் கேப் பங்குகள் அதிகமாக இடம்பெறும் போர்ட்ஃபோலியோ ஒப்பீட்டளவில் குறைந்த ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கக்கூடும். மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளைச் சேர்ப்பது கூடுதல் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும். ஆனால், எந்தவொரு பங்கு வகையையும் மட்டும் வைத்திருப்பது முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யாது.

குறிப்பாக, முழுக்க முழுக்க ஸ்மால் கேப் பங்குகளை மட்டுமே கொண்ட போர்ட்ஃபோலியோ அமைப்பது மிக மிக ஆபத்தானது. சில முதலீட்டாளர்கள் அதிக லாபத்திற்காகத் தங்களின் மொத்தப் பணத்தையும் ஸ்மால் கேப்பில் முடக்குவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இது பரிந்துரைக்கப்பட முடியாத ஒரு அபாயகரமான அணுகுமுறையாகும்.

ஸ்மால் கேப் - Share Market Investment
ஸ்மால் கேப் - Share Market Investment

நிபுணர்களின் எச்சரிக்கை

பங்குச்சந்தையில் சந்தை அபாயங்கள் இல்லாத பங்குகளே கிடையாது. இருப்பினும், ஸ்மால் கேப் பங்குகளை மட்டுமே முழுமையாக நம்பி முதலீடு செய்யக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கான முக்கியமான காரணங்கள்:

· இருமுனைக் கத்தி (Volatility): ஸ்மால் கேப் பங்குகளில் வளர்ச்சி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவிற்கு வீழ்ச்சிக்கான வாய்ப்புகளும் அதிகம். நிறுவனத்தின் சொந்த நிர்வாகக் கோளாறுகளாலோ அல்லது ஒட்டுமொத்தச் சந்தைச் சரிவாலோ இவை சரியக்கூடும்.

· சந்தை வீழ்ச்சியின் தாக்கம்: பொதுவாக, ஸ்மால் கேப் பங்குகளில் ஏற்ற இறக்கங்களும் பணப்புழக்கச் சிக்கல்களும் அதிகமாக இருக்கக்கூடும். எனவே, சந்தையில் பொதுவான சரிவு ஏற்படும்போது இவை கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
மியூச்சுவல் ஃபண்ட் டைரக்ட் vs ரெகுலர் பிளான்: செபியின் புதிய விதி என்ன சொல்கிறது?
ஸ்மால் கேப் - Share Market Investment

தனிப்பட்ட பங்குகளா? அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளா?

ஸ்மால் கேப் பிரிவில் அதிகமாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் பாதை சற்று பாதுகாப்பான ஒரு மாற்று முதலீட்டு வழி. தனிப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வதைவிடப் பல நிறுவனங்களில் முதலீட்டைப் பரவலாக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மோசமான செயல்பாட்டால் ஏற்படும் தனிப்பட்ட நிறுவன அபாயத்தை (Company-specific Risk) ஓரளவுக்குக் குறைக்க முடியும்.

மாறாக, தனிப்பட்ட ஸ்மால் கேப் பங்கில் முதலீடு செய்யும்போது அதன் ஏற்ற தாழ்வுகள் அனைத்தும் அந்த ஒற்றை நிறுவனத்தைச் சார்ந்தே இருக்கும் என்பதால், வீழ்ச்சியின்போது நஷ்டமும் அதிகமாகவே இருக்கும்.

அனுபவமிக்க முதலீட்டாளர்கள் நஷ்டத்தைக் குறைப்பது எப்படி?

· சரியான நேரம் மற்றும் மதிப்பீடு: நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் மதிப்பீடுகளை (Valuation) ஆராய்ந்து, நியாயமான விலையில் மட்டுமே வாங்க வேண்டும். இலக்கு விலையை அடையும்போது பகுதியளவு லாபப் பதிவு (Profit Booking) செய்வதும் நல்லது.

· தொடர் கண்காணிப்பு: ஸ்மால் கேப் பங்குகளை "வாங்கிவிட்டு மறந்துவிடும்" பாணியில் வைத்திருக்கக் கூடாது. அவ்வப்போது பார்த்துக்கொள்வது அவசியம். காலாண்டு முடிவுகள் மற்றும் நிறுவன அறிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

போர்ட்ஃபோலியோவில் எவ்வளவு சதவீதம் ஒதுக்கலாம்?

ஸ்மால் கேப் பங்குகளுக்கு ஒருவரின் மொத்தப் பங்குச்சந்தை முதலீட்டில் எவ்வளவு சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று அனைவருக்கும் பொருந்தக்கூடிய விதியோ, செபியின் பொதுவான பரிந்துரையோ கிடையாது. இத்தகைய ஒதுக்கீடு முதலீட்டாளரின் வயது, முதலீட்டுக் காலம், வருமானம், நிதி இலக்குகள், ஏற்கனவே உள்ள முதலீடுகள் மற்றும் இழப்பைத் தாங்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

புதிய முதலீட்டாளர்கள், குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள் மற்றும் அதிக நஷ்டத்தைத் தாங்க முடியாதவர்கள் ஸ்மால் கேப் முதலீடுகளில் அதிகமாகப் பணத்தை ஒதுக்குவதைத் தவிர்க்கவேண்டும். தங்களின் மொத்த முதலீட்டுத் திட்டத்தைப் புரிந்துகொண்டு, தேவைக்கேற்ப தகுதிவாய்ந்த நிதி ஆலோசகரின் உதவியுடனோ சுயமான பகுப்பாய்வுகளோடோ ஒதுக்கீட்டைத் தீர்மானிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
பங்குச் சந்தை F&O வர்த்தகம்: லாபம் ஈட்டுவது எப்படி? ஆபத்துகள் என்ன?
ஸ்மால் கேப் - Share Market Investment

சீரான போர்ட்ஃபோலியோ கலவை (Asset Allocation)

போர்ட்ஃபோலியோவில் பன்முகப்படுத்துதல் (Diversification) முறையில் லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால் கேப் ஆகியவற்றைக் கலந்து அமைப்பது நல்லது. இதில் அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே மாதிரியான ஒதுக்கீட்டு விகிதம் கிடையாது. முதலீட்டாளரின் நிதி இலக்கு, முதலீட்டுக் காலம் மற்றும் அபாயத்தைத் தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒதுக்கீடு தீர்மானிக்கப்பட வேண்டும்.

உதாரணத்துக்கு எனது ஒதுக்கீட்டு விகிதாச்சாரம் மற்றும் அதற்கான காரணத்தைக் கீழே தருகிறேன்.

· லார்ஜ் கேப் பங்குகள் (50% - 60%): போர்ட்ஃபோலியோவிற்குப் பலமான அடித்தளத்தையும் பாதுகாப்பையும் தருபவை.

· மிட்கேப் பங்குகள் (20% - 30%): மிதமான ஆபத்துடன் சீரான மற்றும் வேகமான வளர்ச்சியைத் தருபவை.

· ஸ்மால் கேப் பங்குகள் (10% - 20%): அதிக ஆபத்துடன் அதிவேக வளர்ச்சி சாத்தியக்கூறுகளைக் கொண்டவை.

இங்கே நேரடிப் பங்குகள் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். மியூச்சுவல் ஃபண்ட், ஈ.டி.எஃப். மற்றும் பிற வகை பங்குச்சந்தை முதலீடுகள் பற்றிக் குறிப்பிடவில்லை.

பேராசையில் பெருநஷ்டம் ஆகவேண்டாம்!

ஸ்மால் கேப் பங்குகள் அதிக லாப சாத்தியத்தைக் கொண்டிருந்தாலும், அவை அதிஉயர் அபாயத்தையும் உள்ளடக்கியவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பேராசையால் மொத்தப் பணத்தையும் ஒரே இடத்தில் முடக்காமல், லார்ஜ் கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளைச் சரியாகக் கலந்து போர்ட்ஃபோலியோ அமைப்பதே முதலீட்டின் அபாயத்தைப் பரவலாக்கி, நீண்டகால நிதி இலக்குகளை அடைய உதவும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference: