இந்தியாவில் ஹூண்டாய், ஹீரோ மோட்டார், டாடா என பல நிறுவனங்கள் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. கார்களை விட இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க உதவும் என்பதால் இன்றைய இளைஞர்களின் தேர்வாக உள்ளது.
விரைவான நகர சவாரிகளுக்கான ஸ்கூட்டராக இருந்தாலும் சரி அல்லது நீண்ட பயணங்களுக்கான சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிளாக இருந்தாலும் சரி, தற்போது புதிதாக வந்துள்ள இரு சக்கர வாகனங்கள் செயல்திறன், ஸ்டைல் மற்றும் சிக்கனத்திற்கு இடையில் சரியான சமநிலையை வழங்குகிறது. சரி இப்போது முன்னனி பைக் கம்பெனிகள் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள ஸ்கூட்டர்கள் பற்றியும், அதில் இளைஞர்களை கவரும் வகையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம், ஆக்சஸ் ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 4.2 அங்குல புதிய வண்ண டி.எப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது. இரவில் மட்டுமின்றி பகலிலும் இந்த டி.எப்.டி. திரையில் விவரங்களை எளிதாக பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சுசுகி ரைடு கனெக்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த டிஸ்பிளேயுடன் புளூடூத் மூலம் மொபைல்போனை இணைத்து கொள்ளலாம். நேவிகேஷன் வசதியும் உண்டு. புதிய வாகன உற்பத்தி விதிமுறைகளுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் தெரிவிக்கக் கூடிய தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இதில் 125 சி.சி. சிங்கிள் சிலிண்டர் என்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 6,500 ஆர்.பி.எம்.மில் 6.2 கிலோவாட் பவரையும், 5 ஆயிரம் ஆர்.பி.எம்.மில் 10.2 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். ஆக்சஸ் ஸ்கூட்டரில் மெட்டாலிக் மேட் பிளாக், மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் புளூ, பியர்ல் கிரேஸ் ஒயிட், சாலிட் ஐஸ் கிரீன் ஆகிய வண்ணங்கள் உள்ளன. தற்போது புதிதாக பியர்ல் மேட் அக்வா சில்வர் நிறமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப ஷோரூம் விலை ரூ.1.02 லட்சம்.
டிரையம்ப் நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ்சி மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. 400 எக்ஸ்-ஐ அடிப்படையாக கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கு அடுத்த உயர் வேரியண்டாக இது வெளிவந்துள்ளது. இந்த பைக் 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.
400 எக்ஸ்-ஐ விட புதிய பைக்கின் எடை 5 கிலோ அதிகம். 400 எக்ஸ்-ல் உள்ள 398 சி.சி. சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் இதில் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8000 ஆர்.பி.எம்.மில் 40 எச்.பி. பவரையும், 6500 ஆர்.பி.எம்.மில் 37.5 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
கிராஸ் ஸ்போக் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், அலுமினியம் சம்ப் கார்டு, என்ஜின் கார்டு ஆகியவை இடம்பெற்றுள்ளன. டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ்சி பைக், ஒரு மாடலில் மட்டுமே கிடைக்கிறது, ஆனால் பல வண்ணங்களில் கிடைக்கிறது. ஷோரூம் விலை ரூ.2.94 லட்சம்.
பெனலி டி.ஆர்.கே 502 என்பது பெனலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு சாகச மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த நிறுவனம், மேம்படுத்தப்பட்ட டி.ஆர்.கே 502 மற்றும் டி.ஆர்.கே. 502 எக்ஸ் ஆகிய பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் 500 சி.சி. இன்லைன்-2 லிக்விட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்சுடன் 46 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. புதிய அம்சமாக, டி.எப்.டி. டிஸ்பிளே, இணைய இணைப்பில்லாத நேவிகேஷன் வசதி, புளூடூத் இணைப்பு, டயரில் காற்றழுத்தத்தை தெரிவிக்கும் தொழில்நுட்பம், ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்ட பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இது நகர பயணங்கள் மற்றும் நீண்ட சாகச பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது. இதன் ஆரம்ப ஷோரூம் விலை ரூ.6.2 லட்சம்.
ஹோண்டா நிறுவனம், இ-கிளட்ச் அம்சம் கொண்ட சி.பி.650 ஆர் மற்றும் சி.பி.ஆர்.650 ஆர் ஆகிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு விளையாட்டு பைக்காகக் கருதப்படுகிறது.
இந்த பைக்குகளில் 649 சி.சி. இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 95 எச்.பி. பவரையும், 63 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. இ-கிளட்ச் வசதி உள்ளதால், கிளட்சை பிடிக்காமலேயே கியரை மாற்ற முடியும். விருப்பப்படுவோர் மேனுவலாக கிளட்சை பிடித்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். இ-கிளட்ச் வேரியண்ட், ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டை விட சுமார் ரூ.40 ஆயிரம் அதிகம். இதன்படி சி.பி.650 ஆர் சுமார் ரூ.9.6 லட்சம் எனவும், சி.பி.ஆர்.650 ஆர் சுமார் ரூ.10.4 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.