

ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட சுசுகி மோட்டார் நிறுவனம், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் படகுகளுக்கான என்ஜின்கள் போன்ற பல்வேறு வகையான தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் 1983-ம் ஆண்டு கார் விற்பனையைத் தொடங்கிய சுசுகி நிறுவனம் கார்களை விற்பனை செய்யும். அதே நேரத்தில் சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது.
இந்நிலையில், ஜப்பானில் நடைபெற்று வரும் மோட்டார் வாகன கண்காட்சியில், பிரான்க்ஸ் பிளக்ஸ் பியூயல் கான்சப்ட் காரை (Fronx Flex Fuel Vehicle) சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கக்கூடியது. அதாவது, 85% எத்தனால் மற்றும் 15% பெட்ரோல் கலவையில் இயங்கும் திறன் கொண்டது, மேலும் பெட்ரோலிலும் இயங்க முடியும். இது பெட்ரோலுக்கும் எத்தனாலுக்கும் இடையில் நெகிழ்வாக இயங்க முடியும்.
இப்படி பல்வேறு வகையிலான எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோலையும் பயன்படுத்த முடியும் என்பதாலேயே நெகிழ்வு எரிபொருள் வாகனம் (Flex-Fuel Vehicle - FFV) என இதனை அழைக்கிறது சுசுகி. வாகனங்களில் எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியைக் குறைப்பதும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருளை ஊக்குவிப்பதுமாகும்.
மேலும் இந்தியச் சந்தையில் உள்ள பிரான்க்ஸ் காரில் பெட்ரோல் மற்றும் எத்தனால் இரண்டிலும் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்டிலும் கிடைக்கும். ஆனால், ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரான்க்ஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். அடாஸ் சூட், கருப்பு நிற அலாய் வீல்கள், புதுமையான கிராபிக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
ஸ்டாண்டர்டு பிராங்க்ஸ் மாடலும் இந்த பிராங்க்ஸ் FFV மாடலும் கிட்டத்தட்ட ஒன்றே தான்.
நெகிழ்வு எரிபொருள் வாகனத்தில் எத்தனாலின் பயன்பாட்டிற்கு ஏற்ப, எரிபொருள் டேங்க், எரிபொருள் செல்லும் பாதை ஆகியவை மாற்றப்பட்டிருக்கும் அவ்வளவு தான்.
மாருதி சுசுகி பிரான்க்ஸ் பிளக்ஸ் பியூயல் கார் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இனி E20 (20% எத்தனால் கலப்பு கொண்ட) பெட்ரோல் மட்டுமே கிடைக்கும் என சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.
இதனை விரைவில் 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், 85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தக்கூடிய காரை சுசுகி நிறுவனம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. E20 பெட்ரோல் மட்டுமே கிடைக்கும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் இனி வாகனம் வாங்கும் போது எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் சிந்தித்து வாங்க வேண்டும் என்றும் மக்களை யோசிக்க வைத்திருக்கிறது.
இந்தியாவின் எதிர்காலத்தில் மோட்டார் வாகனத் தேவைகள் பெட்ரோல், CNG, CBG, ஃப்ளெக்ஸ்-எரிபொருள் மற்றும் மின்சார வாகனங்களை உள்ளடக்கிய கலப்பு அணுகுமுறையாக இருக்கும் என்பதை இதன் மூலம் சுசுகி வலியுறுத்தியுள்ளது.