
தொழில்முனைவோர் மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவர்களாக தமிழ்நாடு அரசு மதி சிறகுகள் என்ற ஒரு அருமையான சேவையை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குபவர்கள், ஏற்கனவே தொழில் முனைவோராக இருப்பவர்கள் என எல்லோருக்கும் ஏற்ற வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் மூலம் தொழில் தொடங்க ஆலோசனை, எந்த தொழிலை எப்படி செய்ய வேண்டும், தொழில் தொடங்க கடன் வசதி, மின்சார வசதி, பொருளை சந்தைப்படுத்துதல் பயிற்சி என எல்லா வகையிலும் அரசு திட்டங்கள் மூலம் உதவுகிறது.
தொழில் முனைவோர் மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு சில சந்தேகங்கள் மற்றும் ஆவணங்கள் சமர்பிப்பு, வரி செலுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில் நிறைய சந்தேகங்கள் இருக்கும். தொழில் தொடங்க என்னென்ன அனுமதி பெற வேண்டும். அதற்கு தேவையான ஆவணங்கள் ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டியிருக்கும். இது குறித்த தெளிவான ஆலோசனை மற்றும் விளக்கங்களையும் தமிழ்நாடு அரசே வழங்குகிறது.
மதி சிறகுகள் என்ற அந்த திட்டம் என்ன? அந்த சேவையை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு ஊரகப்புத்தாக்கத் திட்டம் (TNRT) என முன்னர் அழைக்கப்பட்ட வாழ்ந்து கட்டுவோம் திட்டம் (VKP), தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் உள்ள 3004 கிராமங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த, இந்த திட்டம் தொழில் ஊக்குவிப்பு மூலம் சுயசார்புள்ள சமூகங்களாக உருவாக்குவதற்கு நிறுவப்பட்டுள்ளது.
‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் பெருமைக்குரிய நிறுவனங்களில் ஒன்றான ஓரிட சேவை மையமான 'மதி சிறகுகள்’ தொழில் மையங்கள், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 42 நகரங்களில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மையமும் அடுத்தடுத்த இரண்டு அல்லது மூன்று வட்டாரங்களில் உள்ளதொழில் முனைவோர் / தொழில் நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இம்மையம் ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்பட்டு, தொழில் கருத்துருவாக்கம், அரசு துறை திட்டங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான வணிகத்திட்டம் தயாரித்தல், தொழில் நடத்துவதற்கான சான்றிதழ்கள், பதிவு மற்றும் இணக்கம் பெறுதல், திட்ட மற்றும் துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல், சந்தைப்படுத்துதல், பிராண்டிங் ஆதரவு போன்ற பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவைகளை வழங்குகிறது.
மேலும் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு இ-சேவை மற்றும் GST (சரக்கு மற்றும் சேவைவரி சேவைகளை) வழங்குகிறது. தொழில் முனைவோராக வேண்டுமென்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தற்போது தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது தொழில் தொடங்க திட்டமிடுபவர்கள் மிகக்குறைந்த செலவில் MSTM மையங்கலிருந்து பல்வேறு சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
மையங்கலிருந்து வழங்கப்படும் சேவைகளை பயன்படுத்திக்கொண்டு தங்கள் தொழில்களை நிலைத்தன்மை மற்றும் செழிப்பு நோக்கி திறம்பட வளர்த்து கொள்ள முடியும். இந்த மையங்களில் ஒரு நிறுவன மேம்பாட்டு அலுவலர் (EDO) மற்றும் ஒரு நிறுவன நிதி அலுவலர் (EFO) ஆகியோர் மையத்தின் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கு பொறுப்பாவார்கள்.
மேலும், தொழில்சார்ந்த நிபுணர்கள் தொழில் முனைவோர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வார்கள். இந்த சேவைகளைப்பெற, உங்களுக்கு அருகில் உள்ள மதிசிறகுகள் தொழில்மையம் (MSTM)-க்கு செல்ல வேண்டும்.