ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை வைத்துக் கொள்வது நல்லதா?

savings account safety tips
savings account safety tips
Published on

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் சேமிப்புக்கணக்குகளை வைத்துக் கொண்டு பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா (savings account safety tips) என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் சற்று அலசிப் பார்ப்போம்.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் தனது ஆதார் மற்றும் பான் நகல்களைக் கொடுத்து முறையாக சேமிப்புக்கணக்குகளைத் தொடங்கி பயன்படுத்தலாம். ஆனால் இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

  • ஒவ்வொரு கணக்கிலும் ஒரு குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்துப் பராமரிக்க வேண்டும்.

  • ஒவ்வொரு கணக்கிற்கும் ஒரு ஏடிஎம் அட்டையை வாங்கினால் அதன் பாஸ்வேர்டுகளை ஞாபகம் வைத்துக் கொள்ளுவதில் சிக்கல்கள் ஏற்படும்.

  • ஒவ்வொரு ஏடிஎம் அட்டைக்கும் வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட தொகையினை நாம் செலுத்த வேண்டும்.

  • ஆறு மாதங்கள் ஒரு கணக்கை நாம் கையாளாமல் இருந்தால் அந்த கணக்கு முடக்கப்படலாம். இதன்பின்னர் நீங்கள் வங்கிக்குச் சென்று ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து அந்த கணக்கை மீட்க வேண்டும்.

பல வங்கிகளில் சேமிப்புக்கணக்குகளைத் தொடங்கினால் இதுபோன்ற பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கேட்பது புரிகிறது.

வரவிற்கு ஒரு கணக்கும் செலவிற்கு ஒரு கணக்கும் என இரண்டு வெவ்வேறு வங்கிகளில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி பராமரிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
சேமிப்புக் கணக்கில் பணம் இருக்கா? அப்போ இப்படி முதலீடு செய்யுங்க!
savings account safety tips

மேலும் தபால் அலுவலகத்திலும் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்கி வைத்துப் பயன்படுத்தலாம். ஒரு வங்கிக்கணக்கில் சம்பளம் மற்றும் பிற பணவரவுகளை மட்டும் வைத்துப் பராமரிக்கலாம். இரண்டாவது வங்கிக்கணக்கினை அன்றாட பணப்பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தலாம். அதாவது இரண்டாவது வங்கிக்கணக்கில் குறைந்தபட்சமாக மாதம் முதல் தேதியன்று இருபதாயிரம் ரூபாயைப் போட்டு வைத்து அதை அன்றாட செலவுகளுக்கு ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றங்களைச் செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு கூடுதல் பாதுகாப்பும் கிடைக்கும்.

பிக்சட் டெபாசிட்டுகளை ஒரே வங்கியில் போடாமல் இரண்டு வங்கிகளில் போட்டு வைப்பது நல்லது. தபால் நிலையங்களிலும் பிக்சட் டெபாசிட்டுகளை போடுவது நல்லது. இத்தகைய சமயங்களில் வட்டி முதலானவற்றை வரவு வைக்க தபால் நிலைய சேமிப்புக் கணக்கு பயன்படும்.

தற்காலத்தில் தபால் நிலையங்களும் வங்கிகளைப் போலவே செயல்படுகின்றன. தபால் நிலையங்களில் தற்போது ஏடிஎம் வசதி, காசோலை வசதி, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வசதி முதலான அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. எனவே தபால் நிலையத்தில் ஒரு சேமிப்புக்கணக்கினைத் தொடங்கி பயன்படுத்தலாம்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து ஒரு சிறுதொகையை எடுப்பது அவசியம். இதன் மூலம் உங்கள் வங்கிக்கணக்கு தொடர்ந்து செயல்பாட்டில் (Active Account) இருக்கும். இல்லையென்றால் செயல்படாத கணக்காக (Inactive Account) மாறிவிடும்.

வங்கிகளில் கேட்கும் போது கேஒய்சி எனப்படும் Know Your Customer படிவத்தை நிரப்பி உங்கள் புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்டு உடனே நேரில் சென்று கொடுத்துவிட வேண்டும். நமது கையெழுத்து அவ்வப்போது மாறும் இயல்புடையது. கையெழுத்து சரியாக இல்லாத காரணத்தினால் நாம் கொடுக்கும் காசோலைகள் வங்கிகளில் நிறுத்தப்படும். இத்தகைய சிரமங்களை நாம் இதன் மூலம் தவிர்க்க முடியும்.

மேலும் ஏடிஎம் இரகசியக் குறியிட்டு எண்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளுவது பாதுகாப்பானது.

இதையும் படியுங்கள்:
Saving A/C, Current A/C இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
savings account safety tips

தேவையில்லாமல் பல வங்கிகளில் சேமிப்புக்கணக்குகளைத் தொடங்கி வைப்பது நல்லதல்ல. இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. மேற் கூறியவாறு நீங்கள் செய்து பாருங்கள். எந்த சிக்கலும் எழாமல் நிம்மதியாக பாதுகாப்பாக பணபரிவர்த்தனைகளைச் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com