மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை இரண்டு வகையான நிதிகள் உள்ளன. ஈக்விட்டி மற்றும் கடன் நிதிகள். ஈக்குவிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது பங்குகள், பத்திரங்கள் மற்றும் பிற பத்திரங்களில் முதலீடு செய்யும் நிதிகளாகும். கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் முதன்மையாக அரசு மற்றும் கார்ப்பரேட் பத்திரங்கள் போன்ற கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் பல நன்மைகள் உண்டு. இந்த நிதிகள் அதிக வருமானத்தை வழங்குவதுடன் பண வீக்கத்தை கூட விஞ்சக்கூடியவை. இருப்பினும் கடன் நிதிகளுடன் ஒப்பிடும்பொழுது அதிக ஆபத்தானவை மற்றும் சில நேரங்களில் நிலையற்ற வருமானத்தை உருவாக்க கூடியவை.
ஈக்விட்டி மற்றும் கடன் நிதிகளில் எது சிறந்தது என்பது நம்முடைய முதலீட்டு இலக்குகளையும், கால அளவு ஆகியவற்றையும் பொறுத்தது. ஈக்விட்டி நிதிகள் அதிக வருமானம் தரக்கூடிய வாய்ப்புகளை வழங்கினாலும் அவை அதிக ஆபத்துடையவை. கடன் நிதிகளோ ஒப்பீட்டளவில் குறைந்த வருமானம் தரக்கூடியவை. ஆனால் நிலையானவை மற்றும் ஆபத்து குறைவானவை.
ஈக்விட்டி நிதிகள் (Equity Funds):
சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஈக்விட்டி நிதிகளின் மதிப்பு மாறுவதால் அதிக ஆபத்துடையவை. இவை நீண்ட கால முதலீட்டாளர்கள் மற்றும் அதிக வருமானம் எதிர்பார்க்கும் நபர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
கடன் நிதிகள் (Debt Funds):
கடன் நிதிகள் ஈக்விட்டி நிதிகளை விட குறைவான அளவில் வருமானம் ஈட்டக் கூடியவை. ஆனால் அவற்றுடன் ஒப்பிடும்பொழுது நிலையானவை. கடன் நிதிகள் மூலதனத்தை பாதுகாப்பதிலும், வருமானத்தை ஈட்டுவதிலும் கவனம் செலுத்துகின்றன. பொதுவாக இவை அரசு மற்றும் பெருநிறுவன பத்திரங்கள், கருவூல பில்கள், வணிக பத்திரங்கள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் போன்ற பாதுகாப்பான, நிலையான வருமானக் கருவிகளில் முதலீடு செய்கின்றன.
எனவே இவை ஈக்விட்டி நிதிகளை விட குறைந்த ஆபத்துடையவை. ஏனென்றால் இவை அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன அல்லது நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
குறுகிய கால முதலீட்டாளர்கள் மற்றும் குறைந்த ஆபத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்கு கடன் நிதிகள் மிகவும் பொருத்தமானவை.
எது சிறந்தது?
நம்முடைய முதலீட்டு இலக்குகள், இடர் சகிப்புத்தன்மை மற்றும் கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஈக்விட்டி அல்லது கடன் நிதிகளை தேர்ந்தெடுக்கலாம்.
நீண்டகாலத்திற்கு முதலீடு செய்ய எண்ணம் இருந்தால் ஈக்விட்டி நிதிகள் அதிக வருமானத்தை அளிக்கும். ஆனால் எதிர்ப்படும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.
குறுகிய காலத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் நிலையான வருமானமும், குறைந்த ஆபத்தும் உடைய கடன் நிதிகள் சிறந்த தேர்வாக இருக்கும்.
சராசரி முதலீட்டாளர் என்றால் ஈக்விட்டி மற்றும் கடன் நிதிகளில் போர்ட்ஃபோலியோவை பல்வகை படுத்தலாம். முதலீட்டாளர்கள் பொதுவாக நீண்ட கால வளர்ச்சிக்கு பங்கு சந்தையையும், நிலைத்தன்மை மற்றும் வழக்கமான வருமானத்திற்கு கடன் நிதியையும் கருத்தில் கொள்ளலாம். முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவை ஈக்விட்டி மற்றும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரே நேரத்தில் முதலீடு செய்வதன் மூலம் பன்முகப்படுத்தலாம். இது ஆபத்தை பரப்பவும் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு இடையில் சமநிலையை அடைய உதவும்.
எனினும் முதலீடு செய்வதற்கு முன்பு சிறந்த நிதி ஆலோசகருடன் கலங்தாலோசிப்பது நல்லது.