அறுபது வயதைக் கடந்தவர்களை பெற்ற மகன் மகளைப் போல உடனிருந்து காப்பாற்றுவது பென்ஷன் எனும் ஓய்வூதியம் என்ற ஒற்றை வார்த்தைதான். 2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் என்பது கிடையாது. மேலும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு எப்போதுமே பென்ஷன் என்ற ஒன்று கிடையாது.
பலர் நன்றாக சம்பாதிக்கும் போது அறுபது வயதுக்குப் பிறகான வாழ்க்கைளைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். வரும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்வது குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்து மகிழ்ச்சியாக காலத்தைக் கழிப்பது என்று இருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே இளம்வயதிலேயே பிற்கால வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். அத்தகையவர்கள் தங்கள் கடைசி காலம் வரை மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
முப்பது வயதை நெருங்கியதுமே நீங்கள் கட்டாயம் ஓய்வூதியம் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும். தற்காலத்தில் எல்ஐசி மற்றும் பல தனியார் நிறுவனங்கள் ஓய்வூதிய திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றன. இதில் திறமையான நிதி ஆலோசகர்களைக் கலந்தாலோசித்து உங்கள் வருமானத்திற்கு ஏற்ப ஒரு திட்டத்தில் நீங்கள் நிச்சயமாக இணைந்தாக வேண்டும். ஒரே ஒருமுறை சில லட்சங்களை நீங்கள் இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்து விட்டால் அறுபது வயதிற்குப் பின்னர் மாதாமாதம் நீங்கள் முதலீடு செய்த தொகைக் ஏற்ப நிலையான மாத வருமானம் வந்து கொண்டே இருக்கும். அந்த தொகையை வைத்து நீங்கள் நிம்மதியாக வாழலாம்.
மத்திய அரசு “அடல் ஓய்வூதியத் திட்டம்” (Atal Pension Yojana) என்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பதினெட்டு வயது முதல் நாற்பது வயதுக்குட்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து மாதாமாதம் ஒரு சிறுதொகையை செலுத்தி வந்தால் அறுபது வயது நிரம்பியதும் நீங்கள் தேர்வு செய்த திட்டத்திற்கேற்ப மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் முதல் ஐயாயிரம் ரூபாய் வரை உங்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாக வந்து கொண்டே இருக்கும். உங்கள் மறைவிற்குப் பின்னர் மனைவிக்கோ அல்லது கணவருக்கோ ஓய்வூதியம் கிடைக்கும். இது ஒரு சிறந்த திட்டம். வங்கி அல்லது தபால் நிலையத்தில் இந்த திட்டத்தைப் பற்றி விவரங்களை அறிந்து இத்திட்டத்தில் நீங்கள் சேரலாம்.
முப்பது வயதானதும் வங்கி அல்லது தபால் நிலையங்களில் பொது வருங்கால வைப்பு நிதியில் (Public Provident Fund) சேர்ந்து மாதா மாதம் ஒரு சிறு தொகையை சேமிக்கப்பழக வேண்டும். இது பதினைந்து வருடங்கள் கொண்ட ஒரு ஆகச் சிறந்த திட்டம். வருடாவருடம் உங்கள் நிதி வசதிக்கேற்ப குறைந்தபட்சம் ஐநூறு ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் வரை செலுத்தலாம். பதினைந்து வருடங்களானதும் நீங்கள் செலுத்திய தொகையோடு வட்டியாக ஒரு தொகை கிடைக்கும்.
இந்த திட்டத்தில் சேர்ந்து நாற்பத்தி ஐந்து வயதானதும் கிடைக்கும் தொகையை வைப்புநிதியாக (Fixed Deposit) முதலீடு செய்துவிட வேண்டும். இதில் ஒரு சிறப்பம்சம் என்ற வென்றால் இதன் மூலம் கிடைக்கும வட்டிக்கு வருமான வரி கிடையாது. மீண்டும் நாற்பத்தி ஐந்து வயதில் ஒரு பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) கணக்கைத் தொடங்கி அறுபது வயது வரை சேமிக்க வேண்டும். ஏற்கெனவே பிபிஎப் மூலம் கிடைத்த பணம் மற்றும் தற்போது கிடைக்கும் பணம் இரண்டையும் ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்தில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்தால் மாதந்தோறும் கணிசமான தொகை வட்டியாகக் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழலாம்.
முப்பது வயதானதும் அறுபது வயதுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் யோசிக்கத் தொடங்கியாக வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை மிகவும் சிரமமானதாக அமைந்து விடும். மாதாமாதம் நமதில்லை என்று ஒரு சிறு தொகையை அறுபது வயதுக்குப் பின்னர் நமக்கான பாதுகாப்பான வாழ்க்கைக்காக சேமிக்கப் பழக வேண்டும்.
இளைஞர்களே. இன்றே திட்டமிடுங்கள். வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழுங்கள். நம் வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.