

அவுட்டோர் கேட்டரிங் (Outdoor catering) என்பது ஒரு முக்கியமான துறையாகும். இது சமூக நிகழ்வுகள், திருமணங்கள் மற்றும் தொழில்துறை கேன்டீன்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு உணவு சேவைகளை வழங்குவதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிக்கிறது மற்றும் உள்ளூர் பொருளாதரத்தை மேம்படுத்துகிறது.
இது உணவுத் தொழிலின் ஒரு பகுதியாகும். அவுட்டோர் கேட்டரிங் என்பது பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. பொருளாதார மந்தநிலையின் போது கூட, சமூக நிகழ்வுகள் மற்றும் நிறுவனங்களின் தேவை காரணமாக கேட்டரிங் தொழிலின் தேவை பொதுவாக நிலையானதாகவே உள்ளது.
அவுட்டோர் கேட்டரிங் எனப்படும் வியாபாரம் ஆர்டரின் பெயரில் விசேஷங்களுக்கு உணவு தயாரித்து தரப்படும் ஒரு சிறந்த தொழிலாகும். ஒரு ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட்டிற்கு செல்லாமல் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் இடத்திற்கு சென்று உணவு தயாரிப்பதும், பரிமாறுவதும் இதில் அடங்கும்.
வியாபாரத்தின் இடத்தில் அல்லாமல் வெளியே, அவுட்டோர் இடங்களில் சேவை செய்வதால் இதற்கு அவுட்டோர் கேட்டரிங் என்று பெயர்.
இந்தத் தொழில் செய்வதற்கு முதலில் உணவுத்தர கட்டுப்பாடு சான்றிதழ் பெற வேண்டியது சட்டப்படி கட்டாயமாகும்.
அவுட்டோர் கேட்டரிங் தொழிலைத் தொடங்க முதலில் ஒரு வணிகத் திட்டத்தை உருவாக்க வேண்டும். அதில் நம் இலக்கு சந்தை, மெனு, விலை நிர்ணயம் மற்றும் நிதி திட்டமிடல் ஆகியவற்றை வரையறுக்க வேண்டும். பின்பு தேவையான உரிமங்கள் மற்றும் அனுமதிகளைப் பெற வேண்டும். அதன் பின்பு நம் வணிகத்திற்கான சட்ட பூர்வ அமைப்பை பதிவு செய்து, நிதி ஆதாரங்களை உறுதி செய்து, தேவையான உபகரணங்களை வாங்க வேண்டும்.
முறையான முதலீடு செய்து ஒரு கிச்சன் செட் அப், பாத்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் ஆகியவற்றை சிறிய அளவில் தேவையான அளவுக்கு வாங்கி வைப்பதன் மூலம் இந்த தொழிலைத் தொடங்கலாம். இதற்கு பல நபர்களின் தொடர்பு மிகவும் அவசியமாகும்.
அனைத்து சமையலுக்கும் முழு நேரமாக ஆட்களை வைக்காமல், தொடர்ந்து வரும் ஆர்டர்களுக்கு மட்டும் முழு நேர பணியாளர்களை அமர்த்திவிட்டு, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் சிறப்பு தேவைகளுக்கு தனித்திறன் கொண்டவர்களை அவ்வப்பொழுது பயன்படுத்திக் கொள்வது இந்த தொழில் லாபமுடன் செயல்பட உதவும். பரிமாறுவதற்கும், பார்ட் டைமாக வேலை செய்ய ஆட்களை எடுப்பதற்கும் பல நபர்களின் தொடர்பு அவசியமாகும்.
இந்தத் தொழிலில் மெனு அமைப்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். பாரம்பரிய உணவு வகைகள், பன்னாட்டு உணவு வகைகள், புதிய உணவு வகைகள் என நாம் எதை செய்யப் போகிறோம் என்பதில் தெளிவும் கவனமும் அவசியம்.
வாடிக்கையாளர்களை பெறுவதற்கு விளம்பரங்கள் செய்வதும், சந்தைப்படுத்துதலும் அவசியம். சமூக வலைதள விளம்பரங்கள், whatsapp விளம்பரம் ஆகியவற்றின் மூலம் கூட வியாபாரத்தை பெருக்கலாம். நாம் தொழில் தொடங்கும் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், வீடுகள், சங்கங்கள் போன்றவற்றை அணுகுவதும் நல்ல பலன் தரும். சுத்தம், சுகாதாரம் போன்றவற்றுடன் சுவையுடன் சமைத்து பரிமாறப்படும் உணவுகளுக்கு என்றுமே நல்லதொரு வரவேற்பு உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள், பிறந்தநாள் விழாக்கள் போன்ற குறிப்பிட்ட நிகழ்வுகளை இலக்காகக் கொள்ளலாம். சேவைகளை ஆன்லைனில் விளம்பரப்படுத்தலாம், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் பகுதியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் வியாபாரம் நன்கு வளரும்.