

பென்ஷன் வாங்கும் மூத்த குடிமக்கள், ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றிதழை (Life Certificate) சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். பென்ஷன் வாங்குவோர் உயிருடன் இருப்பதை வாழ்நாள் சான்றிதழ் மூலமாகத் தான் உறுதி செய்யப்படும்.
பென்ஷன் வாங்கும் மூத்த குடிமக்கள் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதியில் இருந்து நவம்பர் 30-ம் தேதி வரை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும். முன்பைக் காட்டிலும் தற்போது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை தற்போது மிகவும் எளிதாகி விட்டது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் வீட்டில் இருந்தே வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இருப்பினும் இன்னும் கால அவகாசம் இருக்கிறதே, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சிலர் வாழ்நாள் சான்றிதழை தள்ளிப் போடுவது உண்டு. கடைசி நேரத்தில் இதனை மறக்கவும் வாய்ப்புகள் உண்டு. அப்படி கால அவகாசத்திற்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் என்னவாகும்? பென்ஷன் தொகை நின்றுவிடுமா அல்லது பென்ஷன் வர தாமதமாகுமா என்று பலருக்கும் சந்தேகம் உண்டு.
ஒருவேளை வாழ்நாள் சான்றிதழை நீங்கள் கால அவகாசத்திற்குள் சம்ர்ப்பிக்கத் தவறினால், அடுத்து என்ன செய்வது எனத் திணறும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்தப் பதிவு உபயோகமாக இருக்கும்.
வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்காவிடில் என்னவாகும்?
மத்திய அரசு வழங்கிய காலக்கெடுவுக்குள் பென்ஷன் வாங்குவோர் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றால், அடுத்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஆனால் பென்ஷன் தொகை நிரந்தரமாக ரத்து செய்யப்படாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கால அவகாசம் முடிந்த பிறகு மீண்டும் வாழ்நாள் சான்றிதழை நீங்கள் சமர்ப்பித்தவுடன், விடுபட்ட மாதங்களுக்கான நிலுவைத் தொகையுடன் (Arrears), ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தற்காலிக பென்ஷன் ரத்து மூலம் அந்த குறிப்பிட்ட மாதங்களில் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் முடிந்த வரையில் காலக்கெடுவிற்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்து விடுங்கள்.
வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க செய்யவேண்டியவை:
டிஜிட்டல் முறை:
ஸ்மார்ட்போனில் Jeevan Pramaan Face App மற்றும் AadhaarFaceRD ஆகிய 2 செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஆதார் கார்டு எண், மொபைல் எண் மற்றும் பென்ஷன் கணக்கு விவரங்களை மற்றும் வங்கிக் கணக்கு வவிவரங்களை உள்ளிட்டு முகத்தை ஸ்கேன் செய்து உடனடியாக சமர்ப்பிக்கலாம்.
அஞ்சல் துறை சேவை:
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (IPPB) வாயிலாக முன்பதிவு செய்தால், தபால்காரர் பயோமெட்ரிக் கருவியுடன் உங்கள் வீட்டிற்கே வந்து வாழ்நாள் சான்றிதழைப் பதிவு செய்து தருவார்.
வங்கி சேவை:
உங்களுக்கு பென்ஷன் தொகை வரவு வைக்கப்படும் வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று பயோமெட்ரிக் பதிவின் மூலம் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
இ-சேவை மையங்கள்:
உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள இ-சேவை மையங்களுக்குச் சென்று பயோமெட்ரிக் முறைப்படி வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:
* ஆதார் அட்டை
* ஓய்வூதிய ஆணை எண்
* வங்கிக் கணக்கு புத்தகம்
* செல்போன் எண்
வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்த பிறகு, அதற்கான ரசீது எண்ணை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலப் Jeevan Pramaan இணையதளத்தில் அவ்வப்போது சான்றிதழின் ஒப்புதல் நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம்.