
தபால் அலுவலகத்தில் தொடர் வைப்புத் தொகை கணக்கை ஆரம்பிப்பது பணத்தை சேமிப்பதற்கும், நிலையான வட்டியை பெறுவதற்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் எளிய வழியாகும். இது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது. இதில் பணத்தை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு சுமார் 6.70% நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது. சந்தை ஆபத்து இல்லை. சந்தையின் ஏற்ற இறக்கங்களால் இது பாதிக்கப்படுவதில்லை. ஐந்து ஆண்டு கால முடிவில் அசல் மற்றும் காலப்பகுதியில் ஈட்டப்பட்ட வட்டி உட்பட முதிர்வுத் தொகையைப் பெறலாம். வட்டி காலாண்டுக்கு ஒரு முறை RD கணக்கில் கூட்டப்படுகிறது.
பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த தபால் அலுவலக தொடர்பு வைப்புத் திட்டம் (Recurring Deposit) ஏற்றதாக இருக்கும். இந்தத் திட்டம் மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது.
RD என்றால் என்ன?
RD என்பது தொடர் வைப்பு திட்டமாகும். இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்து கடைசியில் வட்டியுடன் பெரிய தொகையைப் பெறலாம். இது ஒரு வகையான சேமிப்பு திட்டமாகும். தபால் அலுவலக ஆர் டி அரசாங்க உத்தரவாதத்துடன் செயல்படுகிறது. குறைந்தபட்ச வைப்புத் தொகை மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் நிலையான வருமானத்தைப் பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் உட்பட யாரும் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் உதவியுடன் வைப்பு கணக்கை திறக்கலாம். மைனர் 18 வயதை எட்டியதும் தங்கள் ஆவணங்களை புதுப்பித்து, கணக்கை நிர்வகிக்க ஒரு புதிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
எப்படி முதலீடு செய்வது?
போஸ்ட் ஆபீஸ் ஆர் டி கணக்கை திறப்பது என்பது மிகவும் எளிதானது. தபால் நிலையத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கணக்கை திறக்கலாம். அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று RD விண்ணப்ப படிவத்தை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பி, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஆரம்ப வைப்புத் தொகை மற்றும் பணம் செலுத்தும் சீட்டு படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.
தேவையான ஆவணங்கள்:
தொடர் வைப்பு கணக்கை திறப்பதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.
அடையாளம் மற்றும் முகவரி சரிபார்ப்புக்கான ஆவணங்கள்- அடையாள அட்டை, முகவரி சான்றுகளில் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை.
பிற வசதிகள்:
*மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முன்கூட்டியே மூடவும் அனுமதிக்கப்படுகிறது.
*கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு எளிதாக மாற்றும் வசதியும் உள்ளது.
*கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் உரிமை கோருபவர் RD கணக்கின் தகுதியான இருப்பை பெறுவதற்கு தொடர்புடைய தபால் அலுவலகத்தில் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் அந்தச் சட்டபூர்வ வாரிசுகள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர் அந்தந்த தபால் அலுவலகத்தில் விண்ணப்பித்தை சமர்ப்பிப்பதன் மூலம் முதிர்வு காலம் வரை RD கணக்கை தொடர விருப்பம் உள்ளது.
ஆர் டி கணக்கை தொடங்கிய ஒரு வருடத்திற்கு பிறகு கடன் பெறும் தகுதி கிடைக்கும். நம்முடைய டெபாசிட் தொகையில் 50% வரை கடன் பெறலாம். கடனை ஒரே நேரத்தில் அல்லது EMIகளாக திருப்பி செலுத்தலாம். கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தவில்லையென்றால் கணக்கு முதிர்ச்சி அடைந்த பிறகு அஞ்சல் அலுவலகம் கடன் தொகையைக் கழித்து மீதமுள்ள தொகையை வழங்கும்.