

இந்திய அஞ்சல்துறை வழங்கும் 9 தேசிய சேமிப்புத் திட்டங்கள் குறைந்த முதலீட்டில் பாதுகாப்பான, அரசின் உத்தரவாதத்துடன் கூடிய அதிக வருமான வாய்ப்புகளை தருகின்றன. சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு, காலமுறை வைப்பு, மாதாந்திர வருமானத் திட்டம், மூத்த குடிமக்கள் திட்டம், PPF, சுகன்யா சம்ரித்தி, NSC, கிசான் விகாஸ் பத்ரா போன்ற திட்டங்கள் மூலம் நீண்டகால நிதி பாதுகாப்பும் வரி சலுகைகளும் கிடைக்கின்றன.
போஸ்ட் ஆபீஸில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் பல திட்டங்கள் உள்ளன. எதிர்கால வாழ்விற்காக ஆயிரத்தில் சம்பாதித்தாலும், லட்சத்தில் சம்பாதித்தாலும் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம். யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் வாழ்வதற்கும், பிரச்னை இல்லாத எதிர்காலத்திற்காகவும் சேமிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று.
இந்திய அஞ்சல்துறை தேசிய சேமிப்புத் திட்டங்களின் கீழ் மொத்தம் 9 வகையான அஞ்சலக சேமிப்புத் திட்டங்களை வழங்குகிறது. இவை மத்திய அரசின் உத்திரவாதத்துடன் பல்வேறு பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்களை வழங்குவதுடன், அவற்றின் வட்டி விகிதங்கள் அரசால் காலாண்டுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படுகின்றன.
அஞ்சலக சேமிப்பு கணக்கு (Post Office Savings Account - SB):
வழக்கமான சேமிப்பு வங்கி கணக்கு போன்றது. குறைந்தபட்சம் ரூபாய் 500 முதலீடு செய்து இக்கணக்கைத் தொடங்கலாம். தனிநபர் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். 10 வயது நிரம்பிய குழந்தைகள் தங்கள் பெயரிலும், அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் இக்கணக்கைத் தொடங்கலாம். தபால் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்றுகளை வழங்கி கணக்கைத் தொடங்கலாம்.
அஞ்சலக தொடர் வைப்பு நிதி (National Savings Recurring Deposit - RD)
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க உதவும் திட்டம் இது. குறைந்தபட்சம் ரூபாய் 100 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் மாதாந்திரத் தவணையாகச் செலுத்தலாம். முதலீட்டிற்கு அதிகபட்ச உச்சவரம்பு எதுவும் இல்லை. இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் (60 மாதங்கள்) ஆகும்.
தொடர்ச்சியாக 12 தவணைகள் செலுத்திய பிறகு, கணக்கில் உள்ள இருப்புத் தொகையில் 50% வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும். அவசரத் தேவைகளுக்கு கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே கணக்கை முடித்துக் கொள்ளும் வசதி உள்ளது.
காலமுறை வைப்பு கணக்கு (National Savings Time Deposit - TD):
இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) போன்றது. ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் என நான்கு விதமான கால அளவுகளில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு மேல் ரூபாய் 100 மடங்குகளில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செலுத்தலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. இத்திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 6.90% முதல் 7.50% வரை வழங்கப்படுகிறது. 5 ஆண்டு காலமுறை வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமானவரிச் சட்டம் பிரிவு 80சி- ன் கீழ் வரி விலக்கு உண்டு.
மாதாந்திர வருமானத் திட்டம் (National Savings Monthly Income Account - MIS):
ஒரே முறையாக முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் நிலையான வருமானம் பெற இத்திட்டம் உதவுகிறது. அதிகபட்சமாக தனிநபர் கணக்கில் ரூபாய் 9 லட்சமும், கூட்டுக் கணக்கில் ரூபாய் 15 லட்சமும் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.40% வட்டி வழங்கப்படுகிறது. வட்டித்தொகை ஒவ்வொரு மாதமும் நம் அஞ்சலக சேமிப்புக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டம் 5 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்டது. கணக்கு தொடங்கியதிலிருந்து 1 வருடத்திற்குள் பணத்தை எடுக்க முடியாது. 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால் முதலீட்டில் 2% பிடித்தம் செய்யப்படும். 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் முடித்தால் 1% பிடித்தம் செய்யப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme - SCSS):
60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கான பிரத்யேகத் திட்டம். இது ஓய்வுக்குப் பிறகு மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வழங்குகிறது. இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. வட்டி ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் நம் கணத்தில் வரவு வைக்கப்படும்.
குறைந்தபட்சமாக ரூபாய் 1,000 முதலீடும், அதிகபட்சமாக ரூபாய் 30 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். முதிர்ச்சிக்குப் பிறகு இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி(Public Provident Fund - PPF):
நீண்டகால முதலீட்டுத் திட்டம் இது. இதன் முதிர்வு காலம் (maturity) 15 ஆண்டுகள் ஆகும். இதில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு. குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூபாய் 1,50,000 வரை முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் மத்திய அரசால் ஒவ்வொரு காலாண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு மாற்றப்படலாம்.
கணக்கு தொடங்கிய 3வது நிதியாண்டு முதல் 6வது நிதியாண்டு வரை நம் முதலீட்டின் அடிப்படையில் கடன் பெற முடியும். 7வது நிதியாண்டு முதல் குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் நம் கணக்கில் உள்ள தொகையில் 50% வரை முன்கூட்டியே எடுக்க அனுமதிக்கப்படும்.
சுகன்யா சம்ரித்தி கணக்கு (Sukanya Samriddhi Account - SSA):
பெண் குழந்தைகளின் எதிர்கால படிப்பிற்கும், திருமணத்திற்குமான சிறுசேமிப்புத் திட்டம் இது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இக்கணக்கைத் தொடங்கலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு இக்கணக்கைத் தொடங்க முடியும். குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூபாய் 1,50,000 வரை செலுத்தலாம்.
பெண் குழந்தைக்கு 18 வயது நிரம்பிய பிறகு அல்லது 10ஆம் வகுப்பு முடித்த பிறகு, அவரது கல்விச் செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50% வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இக்கணக்கை இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
தேசிய சேமிப்புப் பத்திரம் (National Savings Certificates - NSC):
ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் இது. ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப் படுகிறது. இந்த வட்டி ஆண்டுதோறும் கூட்டுத் தொகையாக கணக்கிடப்பட்டு, முதிர்வு காலத்தில் அசல் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும்.
வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-யின் கீழ், ஓராண்டில் நாம் முதலீடு செய்யும் ரூபாய் 1.5 லட்சம் வரைக்குமான தொகைக்கு வரி விலக்கு பெறலாம். குறைந்தபட்சமாக ரூபாய் 1,000 முதலீடு செய்யலாம். அதன் பிறகு ரூபாய் 100-ன் மடங்குகளில் முதலீட்டை அதிகரிக்கலாம்.
முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. அவசரத் தேவைகளுக்கு இந்தச் சான்றிதழ்களை வங்கிகளில் பிணையமாக வைத்து கடன் பெற முடியும்.
கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra - KVP):
நாம் செலுத்தும் முதலீட்டுத் தொகை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு (தற்போதைய வட்டி விகிதத்தின் படி) இரு மடங்காக வளரக்கூடிய சிறந்த முதலீட்டு திட்டமாகும். 10 வயது நிரம்பிய எந்த ஒரு தனிநபரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். மைனர்கள் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் முதலீடு செய்யலாம். இரண்டு அல்லது மூன்று பெரியவர்கள் கூட்டாகவும் கணக்கைத் தொடங்கலாம்.
வருடத்திற்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படுகிறது. இத்திட்டத்தில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வருமான வரி வரம்பின்படி வரி செலுத்த வேண்டியது அவசியம். முதலீடு செய்த தேதியிலிருந்து 2 1/2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பணத்தை முன்கூட்டியே எடுக்க அனுமதிக்கப்படும். இந்த சான்றிதழை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கோ அல்லது ஒரு அஞ்சல் நிலையத்திலிருந்து மற்றொரு அஞ்சல் நிலையத்திற்கோ எளிதாக மாற்றலாம்.
இந்த வழிகாட்டியைப் படிப்பதன் மூலம் உங்கள் வருமானத்திற்கு ஏற்ப சரியான அஞ்சலகச் சேமிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, எந்தவித நிதி அபாயமும் இன்றி அரசின் முழு பாதுகாப்போடு உங்கள் எதிர்காலத்திற்கான பெரும் தொகையைச் சேமிக்க முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: