

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்(SCSS) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு அவர்களின் ஓய்வு காலத்திற்குப் பிறகு நம்பகமான மற்றும் நிலையான வருமானத்தை வழங்குகிறது. ஜூலை- செப்டம்பர் 2025 காலாண்டிற்கு, இந்த திட்டம் 8.2% போட்டித்தன்மை வாய்ந்த வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இதன் முக்கிய அம்சங்கள்:
அரசாங்க ஆதரவு திட்டமாக, SCSS நம் முதலீட்டின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்கிறது.
தபால் அலுவலகங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் தனிப்பட்ட அல்லது கூட்டாக கணக்கு தொடங்கலாம்.
ஓய்வு பெற்றவர்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்குவதும், வழக்கமான வருமானத்தை உருவாக்குவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
காலாண்டு அடிப்படையில் வட்டி வழங்கப்படும் இந்தத் திட்டம் தற்போது 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்த திட்டம் 5 ஆண்டுகள் முதிர்வுக் காலத்தைக் கொண்டுள்ளது. முதிர்ச்சி அடைந்த ஒரு வருடத்திற்குள் தேவையான படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். நீட்டிப்பின் பொழுது வட்டி விகிதம் புதுப்பித்தலின் போது நிலவும் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது.
இந்தத் திட்டம் வரி சேமிப்பு திட்டமாகும். முதலீடு பிரிவு 80C இன் கீழ் 1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெற தகுதியுடையது. இருப்பினும் வட்டி, வருமானம் வரிக்கு உட்பட்டது. ஏப்ரல் 1, 2025 நிலவரப்படி, அனைத்து SCSS கணக்குகளிலிருந்தும் மொத்த வருடாந்திர வட்டி ₹1 லட்சத்தைத் தாண்டினால் TDS பொருந்தும். மொத்த வருமானம் குறைவாக உள்ளவர்கள், படிவம் 15H சமர்ப்பிப்பதன் மூலம் TDS விலக்குகளைத் தடுக்கலாம்.
குறைந்தபட்ச வைப்புத் தொகை 1000 ரூபாய். தனிக்கணக்கு அல்லது வாழ்க்கைத் துணையுடன் கூட்டுக் கணக்கிற்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு 30 லட்சம் ரூபாயாகும்.
வட்டி ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களின் முதல் நாளில் காலாண்டுக்கு ஒரு முறை செலுத்தப்படும். இது இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
தகுதி வரம்புகள்:
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்த கணக்கை திறக்கலாம். அவர்களைத் தவிர, 55-60 வயதுடைய ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்கள் ஓய்வூதிய சலுகைகளைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் முதலீடு செய்யலாம். 50-60 வயதுடைய ஓய்வு பெற்ற பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் ஓய்வூதிய சலுகைகளுக்குப் பிறகு அதே ஒரு மாத கால அவகாசம் உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIக்கள்) மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் HUFsகள்(Hindu Undivided Families) இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியற்றவர்கள்.
எப்படி திறப்பது?
கணக்கைத் திறப்பதற்கு அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்று கணக்கை தொடங்கலாம்.
பிற முக்கிய விதிகள்:
கணக்கை முன்கூட்டியே மூடலாம். ஆனால் அபராதங்கள் உண்டு. ஒரு வருடத்திற்குள் என்றால் வட்டி எதுவும் வழங்கப்படாது. ஒரு வருடம் கழித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்றால் அசல் தொகையில் 1.5% கழிக்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசல் தொகையில் 1% கழிக்கப்படும்.
கூட்டுக் கணக்குகளை வாழ்க்கைத் துணையுடன் மட்டுமே திறக்க முடியும். கூட்டுக் கணக்கில் உள்ள முழு வைப்புத் தொகையும் முதல் கணக்கு வைத்திருப்பவருக்கு சேரும். நம் கணக்கிற்கு ஒரு நாமினியை பரிந்துரைக்கலாம்.