
நாடு முழுவதும் மத்திய அரசின் அஞ்சல் சேவை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. பொதுமக்களுக்கு சிறப்பான சிறு சேமிப்புத் திட்டங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் விரைவு அஞ்சல் சேவை உள்பட பல சேவைகளை இந்திய அஞ்சல் துறை வழங்கி வருகிறது. இருப்பினும் ஓரிரு கிராமங்களில் அஞ்சல் நிலையங்கள் இல்லாத நிலையில், பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதனைப் போக்கும் வகையில் அஞ்சலக உரிமையாளர் விற்பனை நிலையங்களைத் தொடங்க காஞ்சிபுரம் மாவட்ட அஞ்சல் துறை கோட்டக் கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாவட்டம் முழுவதும் அஞ்சல் சேவைகளை விரிவுபடுத்தவும், பொதுமக்களுக்கு வசதிகளை மேம்படுத்தவும் அஞ்சலக உரிமையாளர் விற்பனை நிலையங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அஞ்சல் நிலையங்கள் இல்லாத கிராமங்களில் பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் பொதுமக்களின் மூலமாகவே அஞ்சல் நிலையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள நபர்கள் வருகின்ற ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து காஞ்சிபுரம் கோட்டக் கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் வெளிட்ட செய்திக்குறிப்பில்,
“தங்கள் சொந்த ஊரில் அஞ்சல் நிலையங்களைத் திறக்க ஆர்வமுள்ள நபர்கள், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விரிவான விவரங்கள், தகுதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை அருகிலிருக்கும் அஞ்சல் கோட்டங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
துரித அஞ்சல் முன்பதிவு, தபால் தலை விற்பனை, பதிவு அஞ்சல் முன்பதிவு, சில்லறை சேவைகள் மற்றும் பண விடைகள் உள்பட பல வகையான அஞ்சல் சேவைகள் அஞ்சலக உரிமையாளர் விற்பனை நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கிடைக்கும். அஞ்சல் துறை சார்பில் தபால் நிலையங்கள் இல்லாத கிராமங்களில் அஞ்சல் சேவையை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அஞ்சலக உரிமையாளர் விற்பனை நிலையங்களைத் தொடங்க பொருத்தமான வளாகங்களைக் கொண்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் விண்ணிப்பிக்கலாம். அஞ்சல் துறை தொடர்பான அடிப்படை அறிவு கொண்டவர்கள் மற்றும் முதலீடு செய்ய விருப்பம் கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்”
என தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு தெடர்பு கொள்ள வேண்டிய முகவரி: எஸ்.அருள்தாஸ், காஞ்சிபுரம் கோட்டக் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் - 631501.
தொலைபேசி எண்: 044-27222901.