

Retirement investment plans:
எதிர்காலப் பாதுகாப்பிற்காகவும், ஓய்வுக் காலத்தை நிம்மதியாகக் கழிப்பதற்காகவும் சேமிக்க நினைப்பவர்களின் முதல் தேர்வு PF (Provident Fund) திட்டங்களாகத்தான் இருக்கும். இதில் மத்திய அரசு வழங்கும் இரண்டு மிக முக்கியமான திட்டங்கள் PPF (Public Provident Fund) மற்றும் EPF (Employee Provident Fund) ஆகும். இவ்விரண்டில் உங்களுடைய நிதி இலக்குகளுக்கு எது மிகவும் பொருத்தமானது, தற்போதைய வட்டி விகிதங்கள் என்னென்ன மற்றும் இவற்றின் விதிகள் மற்றும் வரி விலக்குகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை முழுமையாகப் பார்ப்போம்.
திட்டம் யாருக்கானது?
EPF (பணியாளர் பொதுங்கால வைப்பு நிதி): இது முழுக்க முழுக்க மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கானது. 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இத்திட்டம் கட்டாயமாகும். இதில் ஊழியரின் அடிப்படைச் சம்பளத்தில் (Basic + DA) 12% பிடிக்கப்பட்டு, அதே அளவிலான தொகையை நிறுவனமும் தன் பங்கிற்கு ஊழியரின் கணக்கில் செலுத்துகிறது.
PPF (பொது பொதுங்கால வைப்பு நிதி): இத்திட்டம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொருந்தும். நீங்கள் மாதச் சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், சுயதொழில் செய்பவராக இருந்தாலும் அல்லது இல்லத்தரசியாக இருந்தாலும் எந்தவொரு வங்கி அல்லது அஞ்சலகத்தில் PPF கணக்கைத் தொடங்கலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ₹500 முதல் அதிகபட்சமாக ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.
வட்டி விகிதங்கள்:
முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்ப்பது லாபகரமான வட்டி விகிதத்தைத்தான். இதில் EPF திட்டம் சற்று கூடுதல் லாபத்தை வழங்குகிறது.
தற்போதைய 2025-2026 நிதியாண்டிற்கு மத்திய அரசு EPF திட்டத்திற்கு 8.25% வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில், தற்போதைய நிலவரப்படி PPF திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இதன் வட்டி விகிதங்கள் மத்திய அரசால் ஒவ்வொரு காலாண்டிற்கும் மாற்றியமைக்கப்படக்கூடியவை என்றாலும், கடந்த சில காலாண்டுகளாக இது 7.1% என்ற அளவில் நிலையாக நீடித்து வருகிறது.
வரி விலக்கு:
வரிச் சேமிப்பைப் பொறுத்தவரை, இரண்டு திட்டங்களுமே முதலீட்டாளர்களுக்குப் பெரும் நிம்மதியைத் தருகின்றன, ஏனெனில் இரண்டுமே EEE (Exempt-Exempt-Exempt) அந்தஸ்தைப் பெற்றவை ஆகும்.
அதாவது, நீங்கள் முதலீடு செய்யும் தொகை, அதற்குப் பெறப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய மூன்று நிலைகளிலும் வரி விலக்கு உண்டு. பழைய வருமான வரி முறையின் கீழ் பிரிவு 80C-இன் படி ₹1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
இருப்பினும், EPF திட்டத்தில் ஒரு முக்கிய கட்டுப்பாடு உள்ளது; ஒரு ஊழியரின் சொந்த ஆண்டுப் பங்களிப்பு ₹2.5 லட்சத்திற்கு மேல் சென்றால், அதற்கு மேல் உள்ள தொகைக்குக் கிடைக்கும் வட்டிக்கு ஊழியரின் வருமான வரி வரம்பின்படி வரி விதிக்கப்படும், ஆனால் PPF திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு முழுமையாக வரி விலக்கு உண்டு.
முதிர்வுக் காலம்:
PPF விதிகள்: PPF கணக்கின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள் ஆகும், அவசரத் தேவைகளுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு சில நிபந்தனைகளுடன் பகுதியளவு பணம் எடுக்க அனுமதிக்கப்படும், மேலும் 15 ஆண்டுகளுக்குப் பிறகும் கணக்கை மேலும் 5 ஆண்டுகள் வீதம் நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
EPF விதிகள்: இது உங்கள் ஓய்வூதிய காலம் வரை நீடிக்கும் நீண்ட காலத் திட்டமாகும். எனினும், வேலை இழப்பு (தொடர்ந்து 2 மாதங்கள் வேலை இல்லாத பட்சத்தில்), திருமணம், மருத்துவச் செலவுகள் அல்லது வீடு கட்டுதல் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பகுதியளவு பணத்தை ஆன்லைனில் எளிதாக எடுத்துக் கொள்ளும் வசதி EPF-இல் உள்ளது.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளம் வாங்குபவராக இருந்தால், உங்கள் வருங்கால வைப்பு நிதியான EPF-இல் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது, ஏனெனில் இதில் 8.25% என்ற அதிக வட்டி கிடைப்பதோடு உங்கள் நிறுவனத்தின் பங்களிப்பும் இணைகிறது. நீங்கள் கூடுதல் தொகையைச் சேமிக்க விரும்பினால் VPF மூலமாகவும் இதில் முதலீட்டை அதிகரிக்கலாம்.
மறுபுறம், நீங்கள் சுயதொழில் செய்பவராகவோ, வணிகராகவோ அல்லது சம்பளத்துடன் கூடுதலாக ஒரு பாதுகாப்பான, வரி இல்லாத நீண்ட கால முதலீட்டைத் தேடுபவராகவோ இருந்தால் PPF சிறந்த தேர்வாக இருக்கும். சந்தை அபாயங்கள் இல்லாத அரசு உத்தரவாதம் கொண்ட பாதுகாப்பான எதிர்காலத்திற்கு இவ்விரண்டுமே மிகச் சிறந்த முதலீடுகள்.