கார் வாங்கும் போது சிலர் கேஷ் பேமெண்ட் செய்து வாங்குவார்கள். சிலர் கிரெடிட் கார்டுகளை வைத்து வாங்குவார்கள். அப்படி கிரெடிட் கார்டுகளை வைத்து வாங்குவோர் சிலர் ரிவார்டு பாயிண்டுகளுக்காக முழு தொகையையும் அதன் மூலமே செலுத்தலாம் என்று எண்ணுவர். அப்படி கிரெடிட் கார்டுகளை வைத்து பணம் செலுத்தும் போது அவற்றில் உள்ள நன்மை, தீமைகளை கருத்தில் கொள்வது முக்கியம்.
100 சதவீதம் கிரெடிட் கார்டை வைத்து கார் வாங்கும் யோசனை சிறப்பானதாக சிலருக்கு தோன்றலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.
கிரெடிட் கார்டை பயன்படுத்தி கார் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:-
கிரெடிட் கார்டு மூலம் முன்பதிவு: கிட்டத்தட்ட அனைத்து கார் டீலர்களும் முன்பதிவு தொகையை செலுத்துவதற்கு கிரெடிட் கார்டுகளை ஏற்றுக் கொள்கின்றன. பொதுவாக காரின் மதிப்பில் 5 முதல் 10 சதவீதம் வரை முன்பதிவின்போது செலுத்த வேண்டும். உதாரணமாக நீங்கள் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள காரை வாங்குகிறீர்கள்.. என்று வைத்துக் கொள்வோம். இதற்கு முன்பதிவு தொகையாக ரூ. 50,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலுத்தலாம். சில டீலர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் ரூ. 3 லட்சம் வரை பரிவர்த்தனைகளை ஏற்றுக் கொள்கின்றார்கள்.
ஆனால் சில சந்தர்ப்பங்களில் குறிப்பாக பிரீமியம் வாகனங்களுக்கு இந்த தொகை ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கக்கூடும். மீதி கட்டணம் செலுத்த கிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நினைவில் கொள்ளவும். காரின் விலையில் மீதமுள்ள நிலுவைத் தொகையை செலுத்தும் போது பெரும்பாலான டீலர்கள் கிரெடிட் கார்டு மூலம் கட்டணத்தை ஏற்க மாட்டார்கள்.
வரி: டீலர்ஷிப்கள் வசூலிக்கப்படும் தொகையில் 1.75% பரிவர்த்தனை கட்டணமாக செலுத்த வேண்டும். இது அவர்களின் லாப வரம்பை பாதிக்கலாம். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற கார்டுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும்போது வரியுடன் சேர்த்து 2.5% வரை கட்டணம் வசூலிக்கப்படலாம். இது கார் டீலர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.
உங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த திட்டமிட்டிருந்தால், நீங்கள் வேறு சில ஆப்ஷன்களைக் கருத்தில் கொள்ளலாம்:
உங்களுடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி முழு தொகையும் செலுத்தி கார் வாங்கும்போது முன்பதிவு தொகையை நீட்டிப்பது குறித்து உங்கள் கார் டீலருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
சில டீலர்கள் முழு பரிவர்த்தனை கட்டணங்களையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பர் அல்லது உங்களுடன் பிரித்து செலுத்த தயாராக இருப்பார். எனவே நன்மைகளை பெற இது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் பிரிமியம் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் இது சாத்தியமே.
கார் வாங்குவதற்கு முன் கார் டீலர்ஷிப்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்.
பல டீலர்கள் தங்கள் செயலாக்க செலவுகளை ஈடுகட்ட கட்டணம் வசூலிக்கின்றன. இது 1 முதல் 2 சதவீதம் வரை இருக்கலாம்.
இவற்றை எல்லாம் கார் வாங்கும்போது நாம் நினைவில் கொள்வது நல்லது.