
ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் சென்னையை தலைமையிடமாக கொண்ட மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் நிறுவனமாகும். 1955-ம் ஆண்டு சென்னை திருவெற்றியூரில் ஆலையை தொடங்கிய என்ஃபீல்டு நிறுவனம், ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ராயல் என்ஃபீல்டு வாகனத்தை வாங்குவது குறைந்து, நிறுவனம் கடும் இழப்பை சந்திக்க தொடங்கிய நிலையில், 1994-ல் எய்சர் மோட்டார்ஸ் நிறுவனம் என்ஃபீல்டு நிறுவனத்தை வாங்கி புதிய தலைமையின் கீழ் மீண்டும் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியது. தனித்தன்மையான ராயல் என்ஃபீல்டு புல்லட், தனது தனிப்பட்ட அதிரவைக்கும் ஒலியுடன் கூடிய உயர்திறன் இயந்திரங்கள் இந்த நிறுவனத்தின் மதிப்புமிக்க மோட்டார் சைக்கிள் வகைகளில் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய அறிமுகமான கெரில்லா 450 பைக்கில் புதிய நிற ஆப்ஷனை சேர்த்துள்ளது. இது சமீபத்திய பூச்சு டேஷ் வேரியண்டின் ஒரு பகுதியாகும். புதுப்பிக்கப்பட்ட வண்ணப்பூச்சுடன் கூடிய ஷேடோ ஆஷ் என்ற மோட்டார் சைக்கிள், புனேவில் நடந்த தபஸ்வி ரேசிங்குடன் இணைந்து பிராண்டின் GRRR நைட்ஸ் X அண்டர்கிரவுண்ட் நிகழ்வில் வெளியிடப்பட்டது.
வைட்-ப்ரொஃபைல் டயர்களுடன் எஃகு இரட்டை-ஸ்பார் சட்டத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த ராயல் என்ஃபீல்டு, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அன்றாட பயன்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங்கிற்காக, முன்புறத்தில் 310 மில்லிமீட்டர் வென்டிலேட்டெட் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஒரு மோனோஷாக் உடன் வருகிறது. பயனாளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், டூயல் சேனல் ABS வழங்கப்படுகிறது. இந்த பைக் 11 லிட்டர்கள் பெட்ரோல் டேங்க் கொள்ளவுடன் வருகிறது.
கெரில்லா 450 452 சிசி, திரவ-குளிரூட்டப்பட்ட, ஒற்றை சிலிண்டர் எஞ்சின் மூலம், 8,000 ஆர்பிஎம்மில் 40 ஹெச்பி பவர் மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 40 நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்கிறது. இருப்பினும் ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450யில், டியூனிங் மற்றும் கியர் ஆகிய இரண்டு புதுப்பிப்புகளைத் தவிர இந்த பைக்கில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த பைக் அதிகபட்ச மணிக்கு 140 கி.மீ.வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450, அனலாக், டேஷ் மற்றும் ஃப்ளாஷ் ஆகிய மூன்று வகைகளில் வருகிறது. இதில் டேஷ் வேரியண்ட் (Dash) விலை ரூ.2.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அனலாக் வேரியண்ட்(Analogue) ரூ.239,000.00 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஃபிளாஷ் வேரியண்ட்(Flash) ரூ.254,000.00 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. இந்த பைக் எல்லோ ரிப்பன், கோல்ட் டிப், பிராவா புளூ, பீக்ஸ் ப்ரான்ஸ், பிளேயா பிளாக் மற்றும் ஸ்மோக் சில்வர் ஆகிய ஆறு வண்ணங்கள்ல் கிடைக்கிறது.