சேமிப்பு என்பது வருமானத்தில் ஒரு பகுதியை செலவிடாமல், எதிர்கால தேவைகளுக்காக ஒதுக்கி வைப்பதாகும். வாழ்வில் எதிர்பாராத நிதி நெருக்கடிகள் ஏற்படும்போது சேமிப்பு நமக்கு உதவும். திடீரென வேலை இழப்பு, மருத்துவ செலவுகள் போன்றவை ஏற்படும் சூழ்நிலைகளில் சேமிப்பு நிதி நமக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
வீடு வாங்குவது, குழந்தைகளின் படிப்பு, ஓய்வு காலம், குழந்தைகளின் திருமணம் போன்ற நீண்டகால நிதி இலக்குகளை அடைய சேமிப்பு அவசியம். சேமிப்பு மூலம் கிடைக்கும் வருமானம், பணவீக்கத்தை சமாளிக்க உதவும். போதுமான சேமிப்பு இருந்தால், நிதி ரீதியாக சுதந்திரமாக செயல்பட முடியும். மேலும், கடன் வாங்கும் அவசியம் குறையும். சேமித்த பணத்தை முதலீடு செய்து, அதிக வருமானம் ஈட்டலாம்.
தேவையில்லாத செலவுகளைக் குறைத்து, சேமிப்பை அதிகரிக்கலாம். நம் வரவு-செலவு கணக்குகளை திட்டமிட்டு, எங்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு, சேமிக்க வேண்டிய தொகையை ஒதுக்கலாம். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை தானாகவே சேமிப்பு கணக்கில் வரவு வைக்கும்படி வங்கியில் ஏற்பாடு செய்யலாம். கூட்டுறவு சங்கங்களில் சேமிப்பதன் மூலம் நல்ல வட்டி விகிதத்தைப் பெறலாம். நிதி ஆலோசகரின் உதவியுடன், நமது நிதி நிலைக்கு ஏற்ற சேமிப்பு திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.
நிதி திட்டமிடல் என்பது ஒருவரின் வருமானம், செலவு, சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை திட்டமிட்டு நிர்வகிப்பதாகும். சேமிப்பு என்பது எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான முதலீடு ஆகும். நிலையான வைப்புத்தொகை, தொடர் வைப்புத்தொகை, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்டுகள், அரசு சேமிப்பு திட்டங்கள் போன்றவை சேமிப்புக்கான சில வகைகள் ஆகும். சில சேமிப்பு திட்டங்கள் வரிச் சலுகைகளை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, ஆயுள் காப்பீடு மற்றும் வீட்டு கடன் ஆகியவற்றில் வரிச் சலுகைகள் உள்ளன.
நாம் அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்களை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வத்தினைக் காட்டுகிறோம். அதே நேரத்தில் நமது முதலீடு பாதுகாப்பாகவும் இருப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்றவர்களுக்கு ஏற்றது, SCSS காலாண்டு வட்டி செலுத்துதல்கள். இது ஒப்பிடமுடியாத பாதுகாப்பை வழங்குகிறது. 60 வயதுக்குகு மேற்பட்ட நபர்களுக்கு இத்திட்டம் பாதுகாப்பானது. இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ₹30 லட்சம் ஆகும். பிரிவு 80C இன் கீழ் நாம் வரிச் சலுகைகளைப் பெறமுடியும். இருப்பினும் வட்டி ஆண்டுதோறும் ₹50,000 ஐத் தாண்டினால் வருமான வரியை செலுத்த வேண்டியிருக்கும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோருக்கான ஒரு சிறப்பான முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் ஆண்டுக்கு ₹1.5 லட்சம் வரை முதலீடுகளை அனுமதிக்கிறது. வருமானம் முற்றிலும் வரி இல்லாதது, மேலும் இந்தத் திட்டம் EEE (விலக்கு-விலக்கு-விலக்கு) நிலையைப் பெற்றது. கல்வி அல்லது திருமணம் போன்ற நீண்ட கால சேமிப்புகளுக்கு இது சிறந்த முதலீட்டு திட்டமாகும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் முதலீட்டுத் திட்டம் 5 ஆண்டுக்கான நிலையான திட்டம் உத்தரவாதமான வருமானத்தைத் தேடும் மிதமான-ஆபத்துள்ள முதலீட்டாளர்களுக்கு சிறந்தது. வட்டி ஆண்டுதோறும் கூட்டுத்தொகையாகக் கணக்கிடப்படுகிறது, ஆனால் முதிர்ச்சியின் போது செலுத்தப்படுகிறது. இது பிரிவு 80C வரி விலக்குக்கு தகுதி பெறுகிறது. கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கட்ட வேண்டும். என்றாலும், இது நிலையான, பாதுகாப்பான வளர்ச்சியை வழங்குகிறது.
KVP நீண்ட கால சேமிப்பாளர்களுக்கானது. இத்திட்டத்தின் கீழ் நமது முதலீடு சுமார் 115 மாதங்களில் (9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள்) இரட்டிப்பாகிறது. இது வரிச் சலுகைகளை வழங்காவிட்டாலும், நிலையான வருமானத்தை தரும் ஓர் ஆபத்தில்லாத முதலீடாகும். தபால் அலுவலக மாதாந்திர திட்டம் நாம் வழக்கமான மாத வருமானத்தை விரும்பினால், MIS சிறந்தது. நாம் ₹9 லட்சம் (தனி) அல்லது ₹15 லட்சம் (கூட்டு) வரை முதலீடு செய்யலாம். இது 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான வட்டியை வழங்குகிறது. வரி விலக்குகள் எதுவும் இல்லை. மேலும் வட்டி முழுமையாக வரி விதிக்கப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் பாதுகாப்பு, கணிக்கக்கூடிய வருமானம் மற்றும் ஓய்வூதியம், குழந்தைகளின் எதிர்காலம் அல்லது வருமானத் தேவைகளுக்கு ஏற்ற விருப்பங்களைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. விகிதங்கள் காலாண்டுக்கு மதிப்பாய்வு செய்யப்படுகின்றது. அடுத்த மாற்றம் அக்டோபர் 2025 இல் நிகழ வாய்ப்புள்ளது.
இளமையிலேயே சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் நம் வாழ்வை எத்தகைய சிக்கலும் இன்றி நாம் வாழ முடியும். மக்களின் செலவழிப்பை ஊக்குவிப்பதும், தவணை முறைக் கடன்கள் மூலம் வாழ்க்கை வசதிகளை அதிகரிக்கத் தூண்டுவதும் பொருளாதார வளா்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்கிற சந்தைப் பொருளாதார சிந்தனை காணப்படுகிறது. இந்நிலையில் சேமிப்பின் அருமை அறிந்து வாழ்வோம். வாழ்வில் உயர்வோம்.