பிரபலமான தனிமனித நிதி அறிவுரை - உங்களது மழைக்காலத்திற்காக வெயில்காலத்திலேயே சேமியுங்கள்.
எறும்புகள் எவ்வாறு மழைக்காலத்திற்கான தானியங்களை வெயில் காலத்திலேயே சேமிக்கின்றனவோ, அதனைப் போலவே நாமும் நமது ஓய்வு காலத்திற்கான பணத்தை சம்பாதிக்கும் பொழுதே சேமித்துக் கொள்ள வேண்டும். இதனை ஆங்கிலத்தில், Save for a rainy day, 'அதாவது மழைகாலத்திற்காக சேமி' என்று கூறுவார்கள்.
வெட்டுக்கிளியும் எறும்பும் என்ற பிரபலமான ஈசாப் கதை நமக்குத் தெரியும்.
வெயில் காலத்தில் ஒரு எறும்பு கடினமாக உழைத்து தானியங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு வெட்டுக்கிளி சந்தோஷமாக ஆடிப் பாடிக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளி எறும்பைப் பார்த்து கேலி செய்தது.
'தானியங்கள் அதிகமாக கிடைக்கின்றனவே. ஏன் தானியங்களைச் நீ சேமிக்கிறாய் ?' என்றது வெட்டுக்கிளி.
'நான் மழைக்காலத்திற்காக சேமிக்கிறேன்' என்றது எறும்பு.
'மழைக்காலத்தைப் பற்றி ஏன் இப்பொழுதே கவலைப்படுகிறாய்?' என்றது வெட்டுக்கிளி.
'மழைக்காலத்தில் தானியங்கள் கிடைப்பது கடினம். மழைக்காலத்திற்கு இப்போதே சேமித்தால் தான் நம்மால் மழைக்காலத்தை எளிமையாக கையாள முடியும். நீயும் இப்போதே மழைக்காலத்திற்காக தானியங்களை சேமித்து வை' என்றது எறும்பு.
எறும்பின் அறிவுரையை வெட்டுக்கிளி அலட்சியம் செய்தது.
மழைக்காலம் வந்தது. அப்போது வெட்டுக்கிளியினால் தானியங்களை எளிதில் தேட முடியவில்லை. தானியங்கள் கிடைக்காமல் பசியால் வெட்டுக்கிளி வாடியது. அப்போது வெயில் காலத்தில் பார்த்த எறும்பின் நினைவு வந்தது. எறும்பின் வீட்டின் கதவை வெட்டுக்கிளி தட்டியது.
எறும்பு வெயில் காலத்தில் தானியங்களைச் சேமித்தபடியால் அதனால் மழைக்காலத்தை எளிதாக கையாள முடிந்தது. அதற்கு தானியங்களை வெளியில் தேட வேண்டிய தேவை இருக்கவில்லை. தனக்கு தானியம் கொடுத்து உதவுமாறு எறும்பிடம் வெட்டுக்கிளி வேண்டுகோள் விடுத்தது. வெயில் காலத்தில் தான் அறிவுறுத்தியபோதும் தானியங்களை சேகரிக்காமல் கேளிக்கைகளில் ஈடுபட்டு விட்டு மழைக் காலத்தில் தன்னிடம் வந்து தானியங்களைக் கேட்காதே என்று கூறி எறும்பு உதவி செய்ய மறுத்து விட்டது. வெட்டுக்கிளி தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.
இதனைப் போலவே நாமும் நமது சம்பாதிக்கும் காலத்தில் பணத்தைச் சேமித்து முதலீடு செய்து வைத்தால் நமது ஓய்வு காலத்தில், அதாவது சம்பாதிக்கக் கடினமான காலத்தில், நம்மால் சேமித்த பணத்தைக் கொண்டு எளிதாக வாழ்க்கையை வாழ முடியும். எனவே சம்பாதிக்கும் காலத்திலேயே நாம் பணத்தைச் சிக்கனமாக செலவு செய்து, சேமிப்போம். சேமித்தால் மட்டும் போதாது. அதனை முதலீடு செய்து பெருக்குவோம். முதலீட்டின் மூலம் நம்மால் பணவீக்கத்தினை எளிதில் கையாள முடியும்.
கி.பி 2023 ஆம் ஆண்டு payroll.org நிறுவனத்தால் நடத்தப்பட்ட கள ஆய்வில், அமெரிக்காவில், 78% மக்கள் ஒவ்வொரு மாதச் செலவிற்கும் அந்த மாதாந்திர சம்பளத்தை எதிர்நோக்கியே உள்ளனர். ஏதேனும் காரணங்களால், அந்த மாதச் சம்பளத்திற்கு பங்கம் விளைந்தால், அந்த மாதத்தினை அவர்களால் கடப்பது கடினம் என்ற நிலைமை நிலவுகிறது. இத்தகைய வாழ்க்கை வாழ்ந்தால், எதிர்காலத்திற்காக சேமிப்பது கடினம். ஓய்வு காலத்திலும் சம்பளத்திற்காக வேலைக்குச் சென்றேயாக வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே, சம்பாதிக்கும் காலத்திலேயே சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது அவசியம்.
நாம் எறும்பினைப் போல் மழைக் காலத்திற்கு சேமித்துக் கொள்வோம். வெட்டுக்கிளியைப் போல் மழை காலத்தைக் கடினமாக்கிக் கொள்ள மாட்டோம்.