
நஸ்ரியாவின் கம்பேக் படம் என்ற ஆரவாரத்தோடு ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளியான படம் சூஷ்மதர்ஷினி. திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்பொழுது ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
எதையும் சந்தேகக் கண்ணோடு ஒரு துப்பறிவாளரின் பார்வையோடு பார்ப்பது நஸ்ரியாவின் வழக்கம். ஊர்வம்பு பேசுவதற்காக இப்படிப் பார்த்துப் பழகி அவர் அதனாலேயே ஒரு சமயம் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். அவரது வீட்டுக்கு அருகில் தனது அம்மாவோடு குடி வருகிறார் மானுவல் (பசில் ஜோசப்). இவரது நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே நஸ்ரியாவிற்கு சந்தேகத்தைக் கொடுக்க, பலவிதமாக அந்த வீட்டை நோட்டம் விட ஆரம்பிக்கிறார். பஸில் ஜோசப்பின் அம்மா யாருடனும் பேசாமல் வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு வளைய வருகிறார்.
ஒரு கட்டத்தில் அவர் காணாமல் போகிறார். பிறகு அருகில் இருந்த ஒரு ரயில்வே ஸ்டேஷனில் கண்டுபிடிக்கப்பட்டு அழைத்து வரப்படுகிறார். அவருக்கு அல்சைமர் என்ற மறதி நோய் என்று பசில் ஜோசப் சொல்ல அதை நஸ்ரியா நம்ப மறுக்கிறார். பிறகு ஒரு முறை அவனது அம்மா திரும்பவும் காணாமல் போக, அவரைப் பார்த்துக் கொள்ள வீட்டில் இருந்த நஸ்ரியாவின் தோழி கவலை கொள்கிறார். அருகில் உள்ள தனது மற்ற இரண்டு தோழிகளுடன் சேர்ந்து தானே இறங்கி உண்மையைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். நஸ்ரியாவின் கணவர் அந்தோணிக்கு இதில் விருப்பமில்லையெனினும் தவிர்க்க இயலாமல் தவிக்கிறார்.
தனது அம்மாவைக் காண வந்த மானுவலின் தங்கையுடன் தொடர்பு கொண்டு இதுபற்றி அறிந்து கொள்ள முயல்கிறார். இதை அறிந்து கொண்ட மானுவல் தங்கள் குடும்ப விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார். உண்மையில் என்ன நடந்தது. மானுவல் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார். அவர் அம்மா எங்கே போனார். அவரின் உண்மை நிலை என்ன. மானுவலின் தங்கை பற்றிய மர்மம் வெளிப்பட்டதா என்பது தான் சூக்ஷ்மதர்ஷினியின் கதை.
அடுத்தவர் வீட்டு விவகாரங்களை எட்டிப் பார்க்கும் சாதாரண மனித மனம், அதன் சைக்காலஜி, சந்திக்கும் விஷயங்கள் குறித்து ஒரு கதை செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் எம்சி. துப்பறியும் படம் போலவே காட்சியமைப்புகள் உள்ளதால் ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில் பின்னணி இசை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர். பின்னணி இசை படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ் என்றே சொல்ல வேண்டும். நகைச்சுவையும், தேடுதலும் கலந்த காட்சிகளின் பின்னணிக்கு வலு சேர்த்திருக்கிறார். நஸ்ரியாவின் தோழிகளாக வரும் மெரின், அகிலா பார்க்கவன், பூஜா மோகன்ராஜ் மூவரும் கொடுத்த பாத்திரத்தைத் தங்களால் இயன்ற அளவு செய்திருக்கிறார்கள். கோட்டயம் ரமேஷ், சித்தார்த் பரதன் ஆகியோருக்கு பெரிய வேலை இல்லை.
ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று கடைசி வரை யோசிக்க வைக்கிறார்கள். பசில் ஜோசப் வில்லத்தனம் செய்வதில் ஓரளவு தான் ஜெயிக்கிறார். அவரது முகம் இது போன்ற பாத்திரங்களுக்கு ஏற்றதாகத் தெரியவில்லை. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு மொத்தக் கதையையும் பின்னியிருக்கிறார் இயக்குனர். ஆனால் அந்தத் திருப்பம் கொடுக்க வேண்டிய அழுத்தத்தைத் தரத் தவறிவிட்டது. நஸ்ரியாவின் நடிப்பு சில இடங்களில் ஓகே என்று தோன்றினாலும் பல இடங்களில் மிகைப்படுத்தப் பட்டதாகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும் இருப்பதாகத் தோன்றுவது நமக்கு மட்டும்தானா? அல்லது அந்தப் பின்னணியே அப்படித் தான் எழுதப்பட்டதா? என்று இயக்குனர் தான் விளக்க வேண்டும்.
வழக்கை விசாரிக்கும் போலீஸ், வீட்டைச் சோதனை போடாதா? பசில் ஜோசப் எடுக்கும் சில முடிவுகளைப் பார்க்கும்பொழுது அவர் நோக்கம் குறித்து முழு நம்பிக்கை வராததால் வேறு ஏதாவது இருக்கும் என்ற எண்ணத்துடன் தான் பார்க்க வேண்டியிருக்கிறது. முடிவும் சரிவர விளக்கப்படாமல் மேம்போக்காகக் கடந்து விடுவதால் கடைசியில் என்னதானாச்சு என்று ஒரு விளக்கப் படம் போட வேண்டியிருக்கிறது.
ஆஹா ஓஹோ என்று பலர் புகழ்ந்தாலும் பார்த்து முடிந்ததும் இதுக்காடா இவ்வளவு பில்டப்பு...? 'ப்ச்' என்னவோ பொழுது போச்சு போ என்பது தான் படம் பார்த்து முடிந்த பின் நமக்கு எழும் முதல் எண்ணம்.