நினைத்த காரியம் நடக்குமா? இல்லையா? கனவின் மூலம் உணர்த்தும் முருகன் கோவில்!

Murugan Temple
Murugan Temple
Published on

அறுபடை வீடுகள் வைத்து மக்களுக்கு அருள்பாலிக்கும் முருகப் பெருமானுக்கு முதன் முதலாக பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் தான் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள வெற்றிவேலப்பர் முருகன் கோவில். முருகன் சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு  வந்து குன்றின் மீது அமர்ந்தது இங்குதான் என்றும் அதன் காரணமாகவே இக்கோவில் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

வெற்றி வேலப்பர் கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது ஆகும். இக்கோவிலில்  வைக்கப்பட்டுள்ள முருகன் சிலை மிகவும் பிரசித்தி பெற்ற சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. மேலும் பாண்டிய மன்னர்கள் முதன்முதலாக முருகனுக்காக கட்டிய கோவில்தான் இந்த வெற்றி வேலப்பர் முருகன் கோவில் எனச் சொல்லப்படுகிறது. இக்கோவில், பிற்காலத்தில் கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னனால் புனரமைக்கப்பட்டது. அதற்கான  கல்வெட்டுக்களும் இக்கோவிலில் செதுக்கப்பட்டுள்ளன.   மேலும் இங்கு  பாண்டியர்களைப் பற்றிய கல்வெட்டு ஒன்றும்,  பாண்டிய மன்னர்கள் தான் இக்கோவிலை கட்டினார்கள் என்பதை விளக்கும் வகையில் கோவிலில் உள்ள கற்தூண்களில் மீன்களின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
முதியவர்கள் முன் விரியும் டிஜிட்டல் உலகம்!
Murugan Temple

அடர்ந்த காடுகளுக்கு இடையே பசுமையான சூழலில், அமைதி மற்றும் தெய்வீகத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வெற்றி வேலப்பர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இங்கு பங்குனி மாதத்தில் நடைபெறும் திருவிழா மிகவும் விமர்சையாக நடத்தப்படுகிறது. அந்நாட்களில் முருகன் மிகச் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு சுற்றிலும் உள்ள கிராமம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார். மேலும் பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற விழாக்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. 

சிவலிங்கத்தின் மீது முருகன் அமர்ந்திருக்கும் வகையில் கோவிலின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே சிவபெருமானும் முருகனும் சேர்ந்தவாறு  அமைக்கப்பட்டுள்ள சிலை இங்குதான் இருப்பதாகவும்  சொல்லப்படுகிறது. மேலும் இக்கோவிலின் வலது புற மண்டபத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் இருக்கும் வகையில் மும்மூர்த்திகளின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அசுரனை முருகன் வதம் செய்த பிறகு இங்குள்ள மூவரையும் வழிபட்டதாகவும் அதனாலயே இக்கோவிலுக்கு வெற்றி வேலப்பர் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு புராணக் கதையும் உண்டு.

கோவிலின் சுவர் முழுவதும் பல்வேறு வகையான கற்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிவன், விநாயகர், காலபைரவர், கண்ணப்ப நாயனார், அகத்தியர் போன்ற பல்வேறு சிற்பங்கள் சுவர்கள் முழுவதும் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த வெற்றி வேலப்பர் கோவில் பழனி மலை கோவிலுக்கு மிகவும் முந்தையது என்றும் சொல்லப்படுகிறது. இங்கு உள்ள முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருப்பதோடு, இக்கோவிலில் வழிபடும்போது பல்வேறு தோஷங்கள் நீங்குவதாகவும் நம்பப்படுகிறது. மேலும் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறுமானால் அவை நிறைவேறுவதற்கு முன் அறிகுறி காட்டும் வகையில் வேல், சேவல் போன்ற முருகனின் ஆபரணங்களோ அல்லது வாகனமோ கனவில் வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சைஃப் அலி கான் தாக்குதல்: கரீனா கபூருக்கு ஆறுதல் சொன்ன பிரபலங்கள்
Murugan Temple

இனிமையான சூழல் மற்றும் பசுமையை ரசிப்பதற்காக இனிமேல் கொடைக்கானல் பயணம் செய்பவர்கள் மறக்காமல் இந்த பழமை வாய்ந்த வில்பட்டி வெற்றி வேலப்பர் முருகனையும் தரிசித்து அவன் அருளையும் பெற்று வரலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com