

இன்றைய பொருளாதார உலகில் கடன் இல்லாமல் ஒருவரால் வாழ முடியுமா என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த அளவிற்கு நம் நாட்டில் கடன் தொல்லையால் பலரும் நெருக்கடியான சூழலை சந்தித்து வருகின்றனர்.
ஒவ்வொரு புத்தாண்டிலும் பொதுமக்கள் ஒரு கெட்ட பழக்கத்தை கைவிடுவதோடு, ஒரு நல்ல பழக்கத்தை புதிதாக தொடர வேண்டும். அவ்வகையில் 2026 ஆம் ஆண்டை கடன் வாங்காமல் கடக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் என்னதான் திட்டமிட்டு வாழ்ந்தாலும், திடீர் மற்றும் அவசர செலவுகள் நம்மை கடன் வாங்க வைத்து விடுகின்றன. இருப்பினும் சற்று முன்னேற்பாடாக இருந்தால், அவசர காலத்தில் கடன் வாங்குவதைக் கூட தவிர்த்து விடலாம்.
அவ்வகையில் கடன் வலையில் சிக்காமல் இருக்க, இந்தியாவைச் சேர்ந்த பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் வழங்கிய சில அறிவுரைகளை இப்போது காண்போம்.
கிரெடிட் கார்டு தொல்லை வேண்டாம்:
நம்மை எளிதில் கடனாளியாக மாற்ற, நிதி நிறுவனங்கள் கையாளும் ஒரு ஆயுதம் தான் கிரெடிட் கார்டு. கடன் வாங்கக் கூடாது என நினைப்பவர்கள், எந்தச் சூழலிலும் கிரெடிட் கார்டை வாங்கவே கூடாது என ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கிறார். ஒருவேளை நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருந்தால், நிலுவைத் தொகையை செலுத்தி விட்டு கிரெடிட் கார்டை உடைத்துப் போடுங்கள்.
கிரெடிட் கார்டில் பெரிய தொகையைப் பயன்படுத்தி இருந்தால், தங்க நகைகளை அடகு வைத்தாவது, உடனடியாக கிரெடிட் கார்டு கடனை முடித்து விடுங்கள். இதுதான் கிரெடிட் கார்டு கடனை விரைந்து அடைப்பதற்கான சிறந்த வழி. ஏனெனில் கிரெடிட் கார்டு கடனுக்குத் தான் அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. அதன்பிறகு அடகு வைத்த தங்க நகைகளை ஒரு வருடத்திற்குள் திருப்ப முயற்சி மேற்கொள்ளுங்கள். "நான் கிரெடிட் கார்டை இதுவரை பயன்படுத்தியதே இல்லை," என்றும் ஆனந்த் சீனிவாசன் கூறியிருக்கிறார்.
கடனை விரைந்து அடைத்தல்:
தனிநபர் கடன் இருந்தால் அதனை Accelerated Payment Mode முறையில் திருப்பி செலுத்துவது நல்லது. அதாவது மாதாந்திர தவணையை (EMI) அதிகரித்தல் மற்றும் ஆண்டுதோறும் கூடுதல் தவணைகளை செலுத்துவதன் மூலம் கடனை விரைவாக முடித்து விடலாம். நீண்ட கால கடன் வகைகளில் ஒன்றான வீட்டுக் கடனிலும் இம்முறையைப் பயன்படுத்தலாம்.
ஒருசில தனியார் வங்கிகள், கூடுதல் தவணையை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். அப்போது உங்கள் வங்கி கடனை அரசு வங்கிகளுக்கு மாற்றிக் கொள்வது சிறந்தது. மாதாந்திர தவணையில் 1,000 ரூபாயை கூடுதலாக கொடுத்தாலும் கூட, அரசு வங்கிகள் அதனை ஏற்றுக் கொள்ளும்.
இருப்புத் தொகை:
வங்கிக் கணக்கில் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை இருப்பு வைத்துக் கொள்வது நல்லது. வெளியில் செல்லும் போதும், சிறு சிறு செலவுகளை சமாளிக்க இந்தத் தொகை உதவும்.
பரவலான முதலீடு:
ஒரே திட்டத்தில் முதலீடு செய்யாமல் வெவ்வேறு வகையான திட்டங்களில் முதலீடு செய்வது லாபத்தை அதிகரிக்க உதவும்.
சேமிப்பு:
மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீட்டுக்கு பயன்படுத்துவதோடு சிறிய அளவில் சேமிப்பையும் மேற்கொள்ள வேண்டும். இந்த சிறிய சேமிப்பு தான், உங்களுடைய அவசர காலத்தில் மிகப் பெரும் தொகையாக கடனில் இருந்து உங்களை காக்கும்.
பணத்தை சரியாகக் கையாள கற்றுக் கொண்டால், கடன் வலையில் இருந்து நீங்கள் தப்பித்து விடலாம். 2026 ஆம் ஆண்டில் மட்டுமின்றி, ஒவ்வொரு வருடமும் கடன் வலையில் சிக்காமல் இருக்க நிதி ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும். இதன்மூலம் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதோடு, நிம்மதியாக வாழவும் வழிவகுக்கும்