

சரியான நிதிக் கொள்கை என்பது வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒரு பகுதியை முதலீடு செய்து, மீதமுள்ள பணத்தை தனிப்பட்ட நிதி தேவைகளுக்கும், அவசர கால நிதிக்கும் எடுத்து வைப்பதாகும். வரும் லாபம் முழுவதையும் பிசினஸில் மீண்டும் முதலீடு செய்வது சில சமயங்களில் சரியானதாக இருக்கலாம். ஆனால் அது பல காரணிகளைப் பொறுத்தது.
1) வரும் லாபம் அனைத்தையும் முதலீடு செய்வதின் நன்மைகள்:
வணிகத்தின் விரிவாக்கத்திற்கு புதிய உபகரணங்கள், மென்பொருள் அல்லது புதிய இடங்கள் வாங்க இது உதவியாக இருக்கும்.
அதிக லாபம் ஈட்ட வாய்ப்புள்ள, லாபம் தரும் துறைகளில் இது உதவும்.
லாபத்தை மீண்டும் முதலீடு செய்வதன் மூலம், பிசினஸை விரைவாக விரிவுபடுத்தலாம். புதிய தயாரிப்புகள் அல்லது சேவைகளை அறிமுகப்படுத்தலாம். மேலும் சந்தையில் போட்டியை சமாளிக்கலாம். இது வேகமான வளர்ச்சிக்கு உதவும்.
கூடுதல் நிதி இருப்பு அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்க உதவும். மேலும் வெளிப்புற நிதியுதவியை சார்ந்திருப்பதையும் குறைக்கும்.
2) பாதிப்புகள்:
அனைத்து லாபத்தையும் முதலீடு செய்வதால் பணப்புழக்க பற்றாக்குறை ஏற்படலாம். உரிமையாளரின் தனிப்பட்ட தேவைகள் அல்லது எதிர்பாராத செலவுகளுக்கு போதுமான அளவு பணம் இல்லாமல் போகலாம்.
பிசினஸ் தோல்வி அடைந்தால் அனைத்து பணமும் இழக்க நேரிடும்.
இந்த போக்கு நிதி ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக பணத்தை எடுப்பதற்கு அல்லது வேறு முதலீடுகளை செய்வதற்கு பணம் இல்லாமல் போய்விடும். எனவே அனைத்தையும் முதலீடு செய்வது என்பது சரியல்ல.
3) இதில் கவனிக்க வேண்டியவை:
பிசினஸ் ஆரம்ப நிலையில் இருந்தால் அல்லது அதிக வளர்ச்சி வாய்ப்புகள் இருந்தால், அதிக முதலீடு தேவைப்படலாம்.
தனிப்பட்ட நிதி இலக்குகள் மற்றும் வாழ்க்கை முறை செலவுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
சந்தையில் நிலவும் போட்டிகள் மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அத்துடன் எவ்வளவு ஆபத்தை எடுக்கத் தயாராக உள்ளோம் என்பதைப் பொறுத்தும் முடிவெடுக்கலாம்.
4) சிறந்த அணுகுமுறை:
பொதுவாக லாபம் முழுவதையும் முதலீடு செய்வதற்கு பதிலாக, வரும் லாபத்தின் ஒரு பகுதியை வணிகத்தில் முதலீடு செய்வது சிறந்தது. ஏனெனில் இது வணிக வளர்ச்சிக்கு உதவுகிறது. மீதமுள்ள பணத்தை தேவைகளுக்கும், எதிர்பாராத செலவுகளுக்கும், அவசர காலங்களுக்கும், எதிர்காலத்திற்கான முதலீடுகள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
எனவே நிதி இலக்குகளை கவனமாக பரிசீலித்து சரியான முடிவு எடுக்க வேண்டியது அவசியம். இதற்கு ஒரு நிதி ஆலோசகர் அல்லது பிசினஸ் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.