

பெண்கள் இயற்கையாகவே பணத்தை முறையாகவும், சிக்கனமாகவும் கையாள்வதில் சிறப்பானவர்கள் தான். இருப்பினும் தங்கள் நிதி நிலைமையை உயர்த்திக்கொள்ள பணம் சேமிக்க பட்ஜெட் தயாரிக்கலாம்; மொத்தமாக பொருட்களை வாங்கலாம்; மாதாந்திர பட்ஜெட்டில் சரியாக திட்டமிட்டு பணத்தை சேமிக்கலாம். சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது போன்ற வழிமுறைகளையும் பின்பற்றலாம்.
1) பட்ஜெட் உருவாக்குங்கள்:
வருமானம் மற்றும் செலவுகளை கண்காணிப்பதன் மூலம், எந்தெந்த செலவுகளை குறைக்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பட்ஜெட் உருவாக்கலாம். அனாவசிய செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்தலாம். வீட்டின் மாத வருமானம் என்ன, ஒரு மாதத்திற்கான செலவு என்ன என்பதை முதலில் திட்டமிடுங்கள். மளிகை பொருட்கள், மின்சார கட்டணம், அத்தியாவசிய செலவுகள், போக்குவரத்து செலவு என ஒவ்வொன்றாக பிரித்து வகைப்படுத்தி, நம் நிதி நிலைமையைப் பொறுத்து எந்த செலவுகளை குறைக்கலாம் என்பதை முடிவு செய்யலாம்.
2) மொத்தமாக வாங்குங்கள்:
அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்களை சிறுது சிறிதாக வாங்காமல் மொத்தமாக வாங்குவது பணத்தை சேமிக்க உதவும். வீட்டு சாமான்கள் அல்லது மளிகைப் பொருட்கள் வாங்கும் போது கிடைக்கும் கூப்பன், கேஷ்பேக், தள்ளுபடி போன்ற சலுகைகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். பல ஆன்லைன் தளங்களில் தள்ளுபடி சமயத்தில் பொருட்கள் வாங்கும் போது நிறைய பணத்தை சேமிக்க முடியும். இது தவிர கேஷ்பேக் தரும் செயலிகள் மற்றும் இணையதளங்களையும் பயன்படுத்தலாம்.
3) மாதாந்திர பட்ஜெட்:
மாத வருமானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சேமிக்கலாம் என்பதை திட்டமிடலாம். எப்போதும் குறிப்பிட்ட தொகையை அவசரகால தேவைகளுக்கு ஒதுக்கி வைப்பது நல்லது. ஏனெனில், எப்போது மருத்துவ செலவுகள் வரும் என்று சொல்ல முடியாது. முதலிலேயே பணத்தை சரியாக சேமிக்காவிட்டால் கடைசி நேரத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தியோ அல்லது கடன் வாங்கியோ தான் செலவு செய்ய நேரிடும். எனவே, அவசர காலத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர பட்ஜெட்டில் ஒதுக்குவது நல்லது.
4) இலக்குகளை நிர்ணயுங்கள்:
ஸ்மார்ட்டாக ஷாப்பிங் செய்யலாம். அத்யாவசியமான பொருட்களைத் தவிர ஆடம்பரமான பொருட்கள் மற்றும் ஆடைகளை வாங்கி குவிப்பதை நிறுத்தலாம். எந்த பொருட்களை வாங்குவதற்கு முன்பும் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு யோசித்து இவை தேவையா என்று சிந்தித்து செயல்படலாம். எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு சேமிப்பதற்கான இலக்குகளை நிர்ணயித்து அதற்கேற்ப செயல்படலாம். குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குதல் அல்லது ஓய்வு காலம் போன்ற நீண்ட கால இலக்குகளுக்காக சேமிக்க தொடங்கலாம்.
5) தேவையற்ற செலவுகளை குறைக்கலாம்:
வீட்டிலாகும் மிகப் பெரிய செலவு மின்சாரம் தான். மின்சார கட்டணத்தில் கவனமாக இருக்கலாம். தேவையில்லாத நேரத்தில் ஓடும் ஃபேன், லைட், ஏசி போன்றவற்றை பார்த்து பார்த்து நிறுத்த, மின்சார கட்டணம் குறையும். மாதந்தோறும் வரும் மின்சார கட்டணத்தை குறைத்தாலே பெருமளவு பணத்தை சேமிக்க முடியும். அதேபோல், தேவையில்லாத செலவுகளை தவிர்த்து சேமிப்புக்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். ஒரு வீட்டிற்கு பொருளாதார திட்டமிடுபவர் இல்லத்தரசிகள் தான். கடினமான நேரங்களில் அவர்களின் சேமிப்பு குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். எனவே, தேவையற்ற செலவுகளை குறைப்பதற்கு திட்டமிடலாம்.
6) சிறப்பு சேமிப்புத் திட்டங்கள்:
ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS) போன்ற வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரிச் சலுகைகளைப் பெறலாம். பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களான நிலையான வைப்பு நிதி (FD) போன்ற விருப்பங்களை தேர்வு செய்யலாம். குடும்பத்தின் நிதி இலக்குகளை அடைவதற்கு சேமிப்புத் திட்டங்கள் மூலம் பணத்தை முறையாக நிர்வகிக்கலாம்.