
பாதுகாப்பான வாழ்க்கைக்கும், செல்வத்தை உருவாக்குவதற்கும் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது தான் பணக்காரராவதற்கு சிறந்த வழி. தேவையற்ற ஆடம்பரச் செலவுகள், நிதி மோசடிகள், அதிக வட்டி கடன்கள் மற்றும் திட்டமிடப்படாத முதலீடுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
1) சேமிப்பை புறக்கணிப்பது:
சிறு துளி பெருவெள்ளம். சிறு சிறு சேமிப்புகள் தான் பெருகி வரும். தேவையற்ற செலவுகளை குறைத்து எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பது அவசியம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க மற்றும் நிதி நெருக்கடிகளை தாங்கிக் கொள்ள சேமிப்பு உதவும். ஓய்வுக்கால திட்டமிடல், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற நீண்ட கால இலக்குகளை அடைவதற்கு சேமிப்பு அவசியம். சேமிப்பு என்பது முதலீடுகளுக்கு ஒரு சிறந்த அடிப்படையாகும். இது பணத்தை பெருக்குவதற்கு உதவும். தேவையற்ற செலவுகளை குறைப்பதுடன், வரவு செலவு கணக்குகளை முறைப்படுத்தி, சேமிப்பிற்கானத் தொகையை திட்டமிடுவது அவசியம்.
2) ஆடம்பர செலவு செய்வது:
தேவையோ இல்லையோ பார்த்தவுடன் ஒரு பொருளை வாங்க ஆசைப்படுவதும், அடுத்த வீட்டில் இருப்பவர்களிடம் இருக்கும் பொருள் நம்மிடமும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் தவறு. ஒருபொருளை வாங்குவதற்கு முன்பு அது நமக்கு தேவையா என்று பலமுறை யோசிக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை வாங்கி வீட்டில் அடைப்பதை தவிர்க்க வேண்டும். பிறரைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளக்கூடாது. ஆசைகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். உண்மையில் பணக்காரர்கள் மிகவும் சிக்கனமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். ஒவ்வொரு ரூபாயையும் கவனமாக பார்த்து செலவு செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
3) கடன் வாங்குவது:
கடன் வாங்குவது நம் நிதி வளர்ச்சியை தடுக்கும். எனவே முடிந்தவரை கடன் இல்லாமல் வாழ முயற்சி செய்ய வேண்டும். மாதத் தவணை எனும் பொறியில் சிக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கையில் இருப்பதைக் கொண்டு அதற்கேற்ப வாழப் பழக வேண்டும். குறிப்பாக வட்டிக்கு கடன் வாங்குவது என்ற பழக்கத்தை அறவே தவிர்த்து விட வேண்டும். மருத்துவ காப்பீடு என்பது ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இதன் மூலம் எதிர்பாராத மருத்துவ செலவுகள் நம் சேமிப்பை பதம் பார்க்காமல், தேவையற்ற கடன் தொல்லைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். கடனில் இருந்து கொண்டே பணக்காரர் ஆவது என்பது முடியாத காரியம். உண்மையில் பணக்காரர்கள் கடன் வாங்குவதை தவிர்க்கிறார்கள். தொழில் சம்பந்தமாக கடன் வாங்கினாலும் அவற்றில் கூட எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் என்றால் தான் தொழில் சார்ந்த கடன் வாங்குவார்கள்.
4) பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பது:
சேமிப்பதால் ஒருபோதும் பணக்காரராக முடியாது. சேமிக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்வதன் மூலமே பணக்காரனாக முடியும். அதாவது பணத்தை பெட்டியில் வெறுமனே தூங்க விடாமல் தேவைக்கு மட்டும் செலவு செய்து மீதி பணத்தை முதலீடு செய்ய வேண்டும். செலவு செய்தது போக மீதமுள்ள பணத்தை முதலீடு செய்வதற்கு பதில் முதலீடு செய்தது போக மீதமுள்ள பணத்தை செலவிற்கு வைத்துக் கொள்வது என்று ஆரம்பித்தால் தேவையற்ற செலவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். கூட்டு வட்டியை நம் நண்பனாக்கி கொள்ளலாம். எவ்வளவு சீக்கிரம் முதலீட்டை ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு கூட்டு வட்டியின் சக்தியை நம்மால் உணர முடியும்.
5) உழைப்பின்றி சோம்பி இருப்பது:
பணக்காரராவதற்கு கடுமையான உழைப்பு தேவை. தாங்கள் செய்யும் தொழிலில் மிகவும் விருப்பம் கொண்டு கடின உழைப்பை செலுத்துபவர்கள் தான் பணக்காரர்கள் ஆக முடியும். அதிர்ஷ்டத்தினால் பணக்காரர் ஆவது என்பது முடியாத காரியம். எந்தவொரு துறையிலும் சிறந்து விளங்கவும், நிதிச் செழுமையை அடையவும் கடின உழைப்பு மிகவும் அத்தியாவசியமானது.
6) திட்டமிடப்படாத செலவுகள்:
சில சந்தாக்கள் மற்றும் சேவைகளில் செலவழிக்கும் பணம் வீணாகலாம். பட்ஜெட் போடுவது, செலவுகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் நிதி இலக்குகளை நிர்ணயிப்பது போன்றவை அவசியம். குறைந்தது ஆறு மாதங்களுக்கான செலவுகளை ஈடு செய்யும் ஒரு அவசரகால நிதியை உருவாக்குவது அவசியம். ஒரு வருவாய் மூலத்தை மட்டும் நம்பி இருக்காமல், பல வருவாய் வாய்ப்புகளை உருவாக்குவது நிதி சுதந்திரத்திற்கு உதவும்.