
‘சீதாராமம்' திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தனது அழகு மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகை மிருணாள் தாக்கூர். இந்த படம் அவருக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா என பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் இந்தி மற்றும் தெலுங்குத் திரைப் படங்களில் அதிகமாக நடித்திருந்தாலும் தற்போது தமிழ் படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
2012-ம் ஆண்டு குங்கும் பாக்யா என்ற பிரபல இந்தி சீரியலில் நடித்ததன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2014-ம் ஆண்டு ‘ஹலோ நந்தன்’ என்ற மராத்தி மொழி படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் கால் பதித்தார்.
அதனை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்த இவர், 2022-ம் ஆண்டு சீதா ராமம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். முதல்படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததுடன், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் மாறினார்.
அதனை தொடர்ந்து நானியுடன் இவர் நடித்த ஹாய் நானா திரைப்படம் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்தது என்றே சொல்லலாம். 'ஃபேமிலி ஸ்டார்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுடனும் பிரபாஸின் 'கல்கி 2898 AD' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து மிகப்பெரியளவில் வளர்ச்சியடைந்த சிவகார்த்திகேயன் மற்றும் நானி போல் இவரும் குறுகிய காலத்திலேயே(13 ஆண்டுகள்) மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளார் என்றே சொல்லலாம்.
தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி இணையும் 'AA22xA6' படத்திலும், அடிவி சேஷின் 'டகோய்ட்: எ லவ் ஸ்டோரி' மற்றும் 3 பாலிவுட் படங்கள் என படுபிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரிப்பட வைத்துள்ளது. இந்த பேட்டியில் அவர் தான் விலையுயர்ந்த ஆடைகளை வாங்க விரும்பவில்லை என்றும், இதுவரை வாங்கியதிலேயே அதிக விலை என்றால் அது ரூ.2,000 மட்டுமே என தெரிவித்துள்ளார்.
ஏனெனில் எத்தனை விலை கொடுத்து ஆடைகள் வாங்கினாலும், அவை பெரும்பாலும் அலமாரியிலேயே முடங்கிக் கிடக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். திரைப்பட விழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு இவர் அணிந்து வரும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஆடைகள் அனைத்தும் வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்றும் மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார். மேலும் தனது சம்பாத்தியத்தை உணவு மற்றும் சொத்துகளில் முதலீடு செய்ய மட்டுமே விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், ஒரு முன்னணி நடிகையாக இருந்தும், கோடிகளில் சம்பளம் வாங்கியும் இவ்வளவு குறைந்த விலையில் ஆடைகள் வாங்குவதா என்று கேள்வி எழுப்பிய ரசிகர்களும் இணையவாசிகளும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை இவ்வளவு கஞ்சத்தனமாக இருக்க கூடாது என்றும் விமர்சித்து வருகிறார்கள்.