
Systematic investment plan (SIP) என்பது முறையான முதலீட்டு திட்டமாகும். இது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு முறையாகும். இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்யலாம். ஒருவர் மாதம் 500 ரூபாய் என்ற அளவிலான சிறு தொகையைக் கூட தவணையாக செலுத்த முடியும். இது ஒரு தொடர் வைப்பு போன்றது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை பற்று வைப்பதற்கு வங்கிக்கு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷனை வழங்க முடியும் என்பதால் இது மிகவும் வசதியானது.
உதாரணமாக ஆயிரம் ரூபாயை ஒவ்வொரு மாதமும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதும், முதலீடு செய்யும் ஒவ்வொரு முறையும் அந்த ஃபண்டின் யூனிட்டுகள் வாங்கப்படும். சந்தையின் ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதால் சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது குறைவான யூனிட்களும், இறக்கத்தில் இருக்கும் பொழுது அதிகமான யூனிட்களும் வாங்கப்படும். இது நீண்ட காலப்போக்கில் சராசரியாக செலவு செய்யும் முறையை உருவாக்குகிறது. இதன் மூலம் சந்தை ஏற்ற இறக்கங்களின் விளைவுகளை குறைக்க முடியும்.
எப்படி முதலீடு செய்வது?
முதலீட்டைத் தொடங்க தேவையான அனைத்து ஆவணங்களையும் பான் கார்டு, ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி விவரங்களுக்கான காசோலை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் தொடங்குவதாக இருந்தால் மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று பதிவு செய்து அடிப்படை விவரங்களுடன் படிவத்தை நிரப்பலாம்.
SIP-யின் நன்மைகள்:
நிதி ஒழுக்கம்:
சிப் ஆனது நிதி ஒழுக்கத்தை வளர்க்க உதவும். ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் ஒரு பழக்கத்தை உருவாக்குகிறது.
கூட்டு வட்டியின் நன்மைகள்:
நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பொழுது கூட்டு வட்டியின் ஆற்றல் சிறப்பாக வேலை செய்யும். முதலீட்டிலிருந்து கிடைக்கும் ரிட்டர்ன்களும் மீண்டும் முதலீடு செய்யப்படுவதால், கூட்டு வட்டியின் மூலம் கிடைக்கும் ரிட்டர்ன்கள் வழியாகவும் SIP முதலீட்டாளர்களுக்கு லாபம் அளிக்கின்றது.
சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து பயனடைய ஒரு சிறந்த வழியாகும். சந்தை ஏற்ற இறக்கங்கள் குறித்த எந்த ஒரு கவலையும் இன்றி ஒழுங்கான முறையில் முதலீடு செய்வதற்கு உதவுவதால் இத்திட்டம் பிரபலமடைந்து வருகிறது.
எளிதான அணுகல்:
SIPல் முதலீடு செய்வது மிகவும் எளிதானது மற்றும் வசதியானது. வங்கியில் மேன்டேட்டை சமர்ப்பிப்பதன் மூலம் 'சிப்'பை தானாக செயல்படும்படி அமைக்க முடியும். இதன் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு நாம் தேர்வு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமில் முதலீடு செய்யப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
சிப்கள் மூலம் நீண்ட காலத்திற்கு செல்வத்தை உருவாக்க முடியும்.
முதலீட்டு மூலதனம் குறைவு:
மிகக் குறைந்த தொகையைக் கொண்டே முதலீடு செய்யத் தொடங்கலாம் என்பதால் இவை எளிதில் சமாளிக்க கூடிய முதலீடாக உள்ளது. இளம் முதலீட்டாளர்கள் அல்லது முதலீடு செய்ய தொடங்குவதற்காக மிகக் குறைந்த அளவே பணம் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நெகிழ்வுத் தன்மை:
SIPல் முதலீட்டுத் தொகையை மாற்றியமைக்கலாம் அல்லது தேவைப்படும் பொழுது முதலீட்டை நிறுத்தலாம். அத்துடன் முதலீடு செய்ய விரும்பும் SIPன் தொகை, முதலீடு செய்யும் கால இடைவெளி ஆகியவற்றில் நெகிழ்வுத் தன்மையை அளிக்கின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. எனவே திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிப்பதுடன் SIPல் முதலீடு செய்வதற்கு முன்பு சிறந்த நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.