
மழை மற்றும் குளிர் காலங்களில் ஹீட்டர்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். தண்ணீரை சூடாக்கப் பயன்படும் ஹீட்டர்களைப் பயன்படுத்தும் போது நாம் கவனமாக கையாள வேண்டும். ஏனெனில் நன்மைகள் நிறைந்த ஒரு சாதனத்தில், தீமைகளும் இருக்கும் அல்லவா! ஆம், ஹீட்டர்களை கவனக்குறைவோடு பயன்படுத்தினால் உயிரைப் பறிக்கும் அளவிற்கு ஆபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், கேஸ் ஹீட்டர்களைப் பாதுகாப்பான முறையில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை அளிக்கிறது இந்தப் பதிவு.
பொதுவாக கேஸ் மற்றும் எலக்ட்ரிக் ஹீட்டர்களைத் தங்களின் தேவைக்கேற்ப மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எலக்ட்ரிக் ஹீட்டரைக் கையாள்வது மிகவும் எளிது என்றாலும், கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் கேஸ் ஹீட்டர்கள் முற்றிலும் வேறுபட்டவை. புரொப்பேன் அல்லது இயற்கை எரிவாயு ஆகியவற்றைப் பயன்படுத்தி தான் தண்ணீரை சூடாக்குகிறது கேஸ் ஹீட்டர். இதற்கு மிகக் குறைந்த நேரமே ஆகும் மற்றும் செலவும் குறைவு என்பதால் தான் பலரும் இதனைப் பயன்படுத்துகின்றனர். ஒரு சாதனத்தைப் பயன்படுத்தும் போது கவனமின்மையால் ஆபத்து நேர்வது இயல்பு தான். அதற்கேற்ப சிறிதளவு கவனக்குறைவு ஏற்பட்டாலும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய சாதனம் கேஸ் ஹீட்டர். ஆம் இதற்கு மிக முக்கிய காரணம் இதிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு என்ற வாயு தான்.
குளிர் காலங்களில் கேஸ் ஹீட்டரில் இருந்து கார்பன் மோனாக்ஸைடு அதிகளவில் வெளியேறும். இச்சமயங்களில் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்திருத்தல் அவசியமாகும். இல்லையெனில், கார்பன் மோனாக்ஸைடு வாயு வெளியே செல்ல வழியில்லாமல் வீட்டிற்குள்ளேயே சூழ்ந்து விடும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் பறிபோகும் அபாயம் ஏற்படும். ஆகையால் குளிர்காலங்களில் இதனைப் பயன்படுத்தாமல் இருப்பது தான் நல்லது.
குளிர்காலத்தில் தண்ணீரை சூடாக்கத் தான் ஹீட்டர்களையே வாங்குகிறோம். ஆனால் குளிர் காலத்திலேயே கேஸ் ஹீட்டரைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிப்பது, உங்களுக்கு சற்று விந்தையாக இருக்கிறது அல்லவா! இருப்பினும் நம் பாதுகாப்புக்குத் தானே முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நான் சொல்வது சரிதானே! ஏனெனில் கேஸ் ஹீட்டரில் இருந்து வெளிவந்த கார்பன் மோனாக்ஸைடு, பல உயிர்களை பலி வாங்கிய சம்பவங்களும் இந்தியாவில் நடந்துள்ளது.
பாதுகாப்பு குறிப்புகள்:
கேஸ் ஹீட்டர் பொருத்தும் இடம் நல்ல காற்றோட்டமான வசதியுடன் இருத்தல் அவசியமாகும்.
ஹீட்டருக்கு அருகில் எளிதில் தீப்பற்றக் கூடிய பெட்ரோல், டீசல் மற்றும் தீப்பெட்டி போன்றவற்றை வைக்கக் கூடாது.
ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை கேஸ் ஹீட்டரை சர்வீஸ் செய்து பராமரிக்க வேண்டும்.
அதிக நேரத்திற்கு ஹீட்டரை ஆன் செய்து வைத்திருக்கக் கூடாது. மேலும் தண்ணீரின் வெப்பநிலையை 45° முதல் 50° செல்சியஸ் அளவுக்குள் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக கேஸ் ஹீட்டரை நிறுவும் போது, அந்நிறுவனத்தில் நிபுணத்துவம் பெற்ற பணியாளர்களின் உதவியோடு நிறுவுங்கள்.
கேஸ் ஹீட்டர்களைப் பயன்படுத்த நினைத்தால், சில மணி நேரங்களுக்கு வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வையுங்கள். இதைச் செய்யத் தவறினால் விபரீதம் மட்டுமே மிஞ்சும்.