வருமான வரிவிலக்குச் சலுகைகள் என்னென்ன உள்ளன? வாய்ப்புகளைத் தெரிந்துகொள்வோம்!

Mediclaim insurance...
Mediclaim insurance...

நிதி ஆண்டு முடியும் நேரம் வந்தாகிவிட்டது. தங்களது வருமானத்தில், வரி விலக்குகளைப் பெறுவதற்கான பல்வேறு வாய்ப்புகளைக் குறித்து, மக்கள் தேட ஆரம்பித்து விட்டனர்.

இந்தக் கட்டுரையில், மாத சம்பளம் வாங்கும் நபர் எந்தெந்த முகாந்திரங்களில், வரிவிலக்கு பெறலாம் என்று பார்க்கலாம்.

வீட்டு வாடகைப் படி (House rent allowance): 

இது பிரிவு 10(13A)இன் கீழ் வருகிறது. இதன்படி,

* அலுவலகத்தில் வழங்கப்படும் வீட்டு வாடகைப் படி

* வீட்டு வாடகை - 10% அடிப்படை ஊதியம் + பஞ்சப்படி

* பெரிய நகரங்கள் எனில், 50% அடிப்படை ஊதியம் + பஞ்சப்படி. சிறு நகரங்கள் எனில், 40% அடிப்படை ஊதியம் + பஞ்சப்படி

என மேலே குறிப்பிட்டுள்ள மூன்றில், குறைந்தபட்சத் தொகையை வரி விலக்காகப் பெறலாம்.

குழந்தையின் படிப்பு;

இது பிரிவு 10(14)இன் கீழ் வருகிறது. இதன்படி, மாதம் ஒரு குழந்தைக்கு ரூபாய் 100 வீதம் இரண்டு குழந்தைகளுக்கு படிப்பிற்கானத் தொகைக்கு வரி விலக்குப் பெறலாம். விடுதிச் செலவுக்கு, மாதம் ரூபாய் 300 வீதம் இரண்டு குழந்தைகளுக்கு வரி விலக்குப் பெறலாம்.

பயணப்படி விடுப்பு (Leave travel allowance):

இது பிரிவு 10(5)இன் கீழ் வருகிறது. அலுவலகத்தில் பெறப்பட்ட பயணப்படி, மற்றும் வருமான வரி விதிகளின்படி, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தொகை என இவ்விரண்டில் உள்ள குறைந்தபட்ச தொகைக்கு வரி விலக்கு பெறலாம்.

வீட்டின் மீதான கடன் வட்டித் தொகை:

இது பிரிவு 24இன் கீழ் வருகிறது. இதன்படி சொந்த அல்லது வாடகைக்கு விட்ட வீட்டின் கடன் வட்டித் தொகையில் ரூபாய் 2 இலட்சம் வரை, வரி விலக்குப் பெறலாம்.

வீட்டின் மீதான கடன்...
வீட்டின் மீதான கடன்...

படிப்பு மற்றும் முதலீடு சார்ந்த செலவுகள்:

இது 80Cஇன் கீழ் வருகிறது. காப்பீட்டுத் தவணை, தேசிய சேமிப்புப் பத்திரம், 5 வருடங்களுக்கான வைப்பு நிதி, பொது சேமநல நிதி, வீட்டுக் கடனின் அசலுக்கானத் தொகை, சுகன்யா சம்ருத்தி திட்டம், குழந்தைகளின் படிப்புக் கட்டணம் போன்றவற்றில், வருடம் ரூபாய் 1.5 இலட்சம் வரை வரி விலக்குப் பெறலாம்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme):

இது பிரிவு 80CCD(1)இன் கீழ் வருகிறது. தேசிய  ஓய்வூதிய திட்டத்தில் நிலை 1(Tier 1)இல் செய்யப்பட்ட முதலீட்டிற்கு ரூபாய் 1.5 இலட்சம் வரை வரி விலக்கு உண்டு. இதுவும் 80Cஇன் கீழ் வருகிறது. மேலும், பிரிவு 80CCD(1B)இன் கீழ், நிலை 1 இல் ரூபாய் 50000 வரை செய்யப்படும் முதலீட்டிற்கு வரி விலக்கு உண்டு. எனவே, 80C + 80CCD(1B) சேர்த்து 2 இலட்சம் வரை வரி விலக்கு கோர முடியும்.

மருத்துவக் காப்பீடு மற்றும் முன்கூட்டிய உடல்நலச் சோதனை (Mediclaim insurance and preventive health checkup):

இது பிரிவு  80Dஇன் கீழ் வருகிறது. இதன்படி, தனிநபர் மற்றும் அவரது குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் உடல்நலச் சோதனைக்கு ரூபாய் 25000 வரை வரி விலக்கு உண்டு. இதனைப் போலவே, மூத்தக் குடிமக்களுக்கு இத்தகைய மருத்துவக் காப்பீடு மற்றும் உடல்நலச் சோதனைக்கு ரூபாய் 25000 வரை வரி விலக்கு உண்டு.

தன்னைச் சார்ந்துள்ள மாற்றுத் திறனாளிகளின் சிகிச்சை (Treatment of dependent handicap):

இது பிரிவு 80DDஇன் கீழ் வருகிறது. தன்னைச் சார்ந்துள்ள மாற்றுத் திறனாளிகளின் இயலாமையின் அளவுக்கு ஏற்ப ரூபாய் 75000 அல்லது ரூபாய் 1,25,000 வரை வரி விலக்கு உண்டு.

குறிப்பிட்ட நோய்களின் சிகிச்சை (Treatment of specified disease):

இது பிரிவு 80DDBஇன் கீழ் வருகிறது. தன்னைச் சார்ந்துள்ள நபர்களின் நோய்களின் சிகிச்சைக்கு, அவர்களின் வயதுக்கு ஏற்ப ரூபாய் 40000 முதல் ரூபாய் 1 இலட்சம் வரை வரி விலக்கு கோரமுடியும்.

கல்விக் கடனின் வட்டி (Interest on education loan):
கல்விக் கடனின் தவணை கட்டத் தொடங்கிய ஆண்டு முதல் 8 ஆண்டுகள் வரை, கல்விக் கடனின் வட்டித் தொகைக்கு வரி விலக்கு கோர முடியும்.

இதையும் படியுங்கள்:
நயாகரா நீர்வீழ்ச்சியை வற்ற வைத்ததன் காரணம் தெரியுமா?
Mediclaim insurance...

குறிப்பிட்ட வீட்டுக் கடன்களுக்கு கடன் தவணைத் தொகை (Interest on housing loan for specific house property):

இது பிரிவு 80EEAஇன் கீழ் வருகிறது. முதல் தடவை வீடு வாங்குபவர்களுக்கு மட்டும் பொருந்தும். வீட்டுக் கடன் 1.4.2019 முதல் 31.3.2022 க்குள் எடுத்திருக்கும் பட்சத்தில், வீட்டுக் கடனின் கடன் தவணைத் தொகையில் ரூபாய் 1.5 இலட்சம் வரை வரி விலக்கு கோர முடியும்.

மின்சார வாகனம் வாங்கியதன் கடன் வட்டித்தொகை (Interest on loan for purchase of electric vehicle):

இது 80EEBஇன் கீழ் வருகிறது. இதுவரை எந்த மின்சார வாகனமும் வாங்கியிருக்கக்கூடாது. கடன் வழங்கப்பட்ட காலம் 1.4.2019 முதல் 31.3.2023க்குள் இருக்க வேண்டும். இதில் ரூபாய் 1.5 இலட்சம் வரை வரி விலக்கு கோர முடியும்.

சேமிப்பு வங்கியின் வட்டி (Interest on savings bank):

இது பிரிவு 80TTAஇன் கீழ் வருகிறது. இதன்படி, சேமிப்புக் கணக்கின் வட்டியில் ரூபாய் 10000 வரை வரி விலக்கு கோர முடியும்.

மாற்றுத் திறனாளி (Physically handicapped - Resident self):

இது பிரிவு 80Uஇன் கீழ் வருகிறது. இதன்படி, வருமான வரி செலுத்துபவரின் இயலாமையின் அளவைப் பொறுத்து, ரூபாய். 75000 முதல் ரூபாய் 125000 வரை வரி விலக்கு கோர முடியும்.

நன்கொடைகள் (Donations):

இது 80Gஇன் கீழ் வருகிறது. இதன்படி, குறிப்பிட்ட ஈகை நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு கோர முடியும்.

நிற்க. இவை எல்லாமே பழைய வரி முறையில் (Old Tax Regime) வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்குப் பொருந்தும். புதிய வரி முறையில் (New Tax Regime) வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு மிகச் சிலவே பொருந்தும். அனுபவம் மிகுந்த நிதி ஆலோசகரின் உதவியை நாடி அரசாங்கத்தின் இந்த வரிவிலக்குச் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com