

உலகளாவிய வாகனத் துறையில் மின்சார கார்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கு வித்திட்ட எலான் மஸ்கின் 'டெஸ்லா' (Tesla) நிறுவனம், தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் தனது டெஸ்லா ‘ரோட்ஸ்டர்’ (Tesla Roadster) என்ற புதிய படைப்பை உலக அரங்கில் வெளியிட்டு புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், உலகம் முழுவதிலும் உள்ள வாகன ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மெக்ரிகரில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) சோதனை மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட அறிமுக நிகழ்வில், எலான் மஸ்க் இந்த காரை உலகிற்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் டெஸ்லா நிறுவனம் தனது புதிய தலைமுறை Roadster என்ற காற்றில் பறக்கும் திறன் கொண்ட காரின் அதிரடி செயல் விளக்கத்தையும் காட்டியது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து உருவாக்கியுள்ள இந்தக் கார், மணிக்கு 370 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
டெஸ்லா மற்றும் எலான் மஸ்க்கின் மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ரோட்ஸ்டர் கார், ராக்கெட் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் 'கோல்ட்-கேஸ் த்ரஸ்டர்' (Cold-gas thrusters) மற்றும் கம்ப்ரஸ்ட் ஏர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமே இந்த கார் காற்றில் பறக்கவும் (Hovering), காற்றில் சுழன்று பேலன்ஸ் பெற்று தரையில் சரியாக இறங்கும் அதிரடி செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
அதாவது, சில வினாடிகளுக்குள் அதிவேகத்தை எட்டும் திறன் கொண்ட இக்கார், சாலையில் இருந்து வானத்திற்கு மிக எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாறக்கூடிய அதிநவீனக் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது. குறைந்தபட்ச வடிவமைப்புடன், அதே சமயம் உயர் தொழில்நுட்பம் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிமுக நிகழ்ச்சியின் போது, டெஸ்லாவின் புதிய ரோட்ஸ்டர் கார், ராட்சத வளைவுப் பாலமொன்றில் செங்குத்தாக ஏறி தலைகீழாகப் (Upside-down)பயணித்த விதம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அங்கிருந்து காற்றில் பாய்ந்து ஒரு முழுமையான 'ஃபிளிப்' (Flip) அடித்து மீண்டும் பத்திரமாகத் தரையிறங்கிய இந்த அபாரமான சாகசத்தை நேரில் கண்டவர்களும், வீடியோவில் பார்த்தவர்களும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.
மேலும் இந்த பறக்கும் கார் வெறும் 1 நொடிக்கும் குறைவான நேரத்தில் 0 முதல் 60 மைல் (சுமார் 96 கி.மீ) வேகத்தை எட்டிவிடும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இது உலகிலேயே மிக அதிவேகமாக இயங்கும் காராக இருக்கும். மின்சார வாகன (EV) சந்தையில் இது ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இக்கார் மணிக்கு 370 கி.மீ (சுமார் 230 மைல்கள்) உச்ச வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 300 மைல்கள் (சுமார் 480 கி.மீ) வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டது.
ரோட்ஸ்டர் காரின் ஒட்டுமொத்த எடையைக் குறைக்க மெக்னீசியம், டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபர் போன்ற எடை குறைந்த, அதிக வலிமை கொண்ட பொருட்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த கார் இருவர் மட்டுமே அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ் (active aerodynamics) மற்றும் மல்டி-மோட் சக்ஷன் சிஸ்டம் (multi-mode suction system) ஆகிய அம்சங்களும் இதில் உள்ளது. இது, பந்தயப் பாதையிலும் அதற்கு வெளியேயும் அடுத்த கட்ட செயல்திறனுக்காக டவுன்ஃபோர்ஸை அதிகப்படுத்துகிறது.
இதில் பல செயல்பாட்டு முறைகளைக் கொண்ட உறிஞ்சும் அமைப்பு (suction system) உள்ளது. இந்த காரை சுற்றி பொருத்தப்பட்டுள்ள 'கோல்ட்-கேஸ் த்ரஸ்டர்கள்' (cold-gas thrusters), வாகனம் முன்னோக்கியும் மேல்நோக்கி பறக்கவும், பக்கவாட்டில் சுழலவும் உதவுகின்றன.
புதிய டெஸ்லா ரோட்ஸ்டர் 2 கார்—பெர்ஃபார்மன்ஸ் (Performance), த்ரஸ்ட் (Thrust), மற்றும் ராக்கெட் (Rocket) என மூன்று வெவ்வேறு வகைகளில் (Variants) வெளியாகிறது.
வழக்கமான கார்களைப் போலச் சாலையில் செல்வதுடன், தேவைப்படும்போது வான்வெளியில் பறக்கும் திறனைப் பெற்றுள்ள இப்புதிய ரோடுஸ்டர் மாடல், ஆட்டோமொபைல் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
விண்வெளி மற்றும் கார் உலக தொழில்நுட்பங்களை இணைக்கும் ஒரு புரட்சிகரமான படைப்பான பார்க்கப்படும் இந்த அதிநவீன காரின் வணிகரீதியான உற்பத்தி பணிகள் வரும் 2028-ஆம் ஆண்டில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பறக்கும் இந்த சாகச கார் பொதுச் சாலைகளில் ஓட்டுவதற்கான சட்டப்பூர்வ அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் ஆரம்ப விலை ஏற்கெனவே 2 லட்சம் அமெரிக்க டாலராக (சுமார் ₹1.6+ கோடி) அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இந்த காரின் உற்பத்தி மற்றும் வெளியீட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால், அதன் இறுதி மற்றும் அதிகாரப்பூர்வ விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
வாகனத் துறையையும் விண்வெளித் துறையையும் இணைத்து எலான் மஸ்க் நிகழ்த்தியுள்ள இந்த மைல்கல் சாதனை, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.