25-25-25-25 முதலீட்டு விதி: இதுதான் இப்போ டிரெண்டிங்!

Investment - 25-25-25-25 Rule
Investment - 25-25-25-25 Rule
Published on

நாளையத் தேவைக்காக இன்றே சேமிப்பது தான் நடுத்தர வர்க்கத்தினரின் இயல்பு. மாதச் சம்பளம் வாங்கும் பலரும் வட்டி குறைவாக கிடைத்தாலும் பாதுகாப்பான முதலீடுகளையே அதிகம் நாடுவர். ஆனால் முதலீட்டையே முதன்மையாக கருதும் பெரு முதலீட்டாளர்கள், பணத்தை விரைவாக பெருக்குவதில் கவனம் செலுத்துவர். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் முதலீடு தான் பங்குச்சந்தை.

பொதுவாக முதலீட்டாளர்கள் ஒரு முதலீட்டை மட்டும் நம்பியிருக்காமல், மற்ற சில முதலீடுகளையும் மேற்கொள்வார்கள். முதலீட்டைப் பொறுத்தவரை 60-40 விதிப்படி முதலீட்டைப் பிரித்து, 60% முதலீட்டை பங்குச்சந்தையிலும், 40% முதலீட்டை பத்திரங்களிலும் மேற்கொள்வார்கள். இந்த விதியைக் தான் பல ஆண்டுகளாக முதலீட்டாளர்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், வட்டி விகித உயர்வால் பத்திர வருமானம் பாதிக்கப்பட்டது. அதோடு சந்தை நிலையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாற்றம் அடைந்துள்ளது. தற்போதைய சூழலில் பங்குச்சந்தை மற்றும் பத்திரங்கள் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் சரிவை சந்திப்பதால், முதலீட்டு யுக்தியை மாற்றியுள்ளனர் முதலீட்டாளர்கள். இதன்படி தற்போது 25-25-25-25 என்ற முதலீட்டு விதி தான் பிரபலமடையத் தொடங்கியுள்ளது.

25-25-25-25 என்ற புதிய முதலீட்டு யுக்தி பரவலான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற பங்குச்சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபெட் கூட, தற்போது இந்த விதியைப் பயன்படுத்தி தான் முதலீடு செய்வதாக சொல்லப்படுகிறது. 4 வகையான முதலீட்டு வாய்ப்புகளில் சம அளவில் முதலீடு செய்து வந்தால், ஒன்றில் நஷ்டம் ஏற்பட்டாலும், மற்ற முதலீடுகளின் மூலம் நஷ்டத்தை ஈடு செய்து இலாபத்தை ஈட்ட முடியும்.

1. பங்குச்சந்தை:

வளர்ச்சி வாய்ப்புள்ள நிறுவனங்களைத் தேர்வு செய்து, அந்நிறுவனத்தின் பங்குகளில் 25% முதலீட்டை மேற்கொள்ளலாம். இதற்கு நீங்கள் தொடர்ந்து பங்குச்சந்தையை கவனித்து வர வேண்டும். அதோடு கடந்த 10 ஆண்டுகளில் எந்தப் பங்கு நல்ல இலாபத்தைக் கொடுத்துள்ளது என்பதையும் ஆராய வேண்டும்.

2. பத்திரங்கள்:

நிலையான வருமானத்தைத் தரும் பத்திரங்களில் 25% முதலீட்டை மேற்கொள்ளலாம். முதலீடு செய்ய பாதுகாப்பான மற்றும் வரி விலக்கு உள்ள பத்திரங்களைத் தேர்வு செய்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
'ஆட்டோ ஸ்வீப்' : இப்படி கூட பணத்தை முதலீடு பண்ணலாம்!
Investment - 25-25-25-25 Rule

3. தங்கம்:

ஆபரணத் தங்கம், தங்க இடிஎஃப் மற்றும் டிஜிட்டல் தங்கத்தில் 25% முதலீட்டை மேற்கொள்வது, உங்கள் வருமானத்தை கணிசமாக உயர்த்த உதவும். கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதால், நிச்சயமாக இது நல்ல முதலீட்டுத் தேர்வாக இருக்கும்.

4. மாற்று முதலீடுகள்:

மேலே குறிப்பிட்ட முதலீடுகள் அல்லாமல் ரியல் எஸ்டேட், கிரீன் என்ர்ஜி, தொழில்நுட்பம் மற்றும் கிரிப்டோ கரன்சி உள்ளிட்டவற்றில் 25% பணத்தைப் பிரித்து முதலீடு செய்யலாம். இதன்மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும்.

25-25-25-25 விதிப்படி முதலீடு செய்தால் அதிக வருமானம் தரும் பல முதலீட்டு வாய்ப்புகளை நம்மால் எளிதாக அணுக முடியும். புதிதாக முதலீடு செய்பவர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து பரவலாக முதலீடு செய்யுங்கள். எடுத்தவுடனே பங்குச்சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பணவீக்கம் அதிகரித்து வருவதால், நாம் செய்யும் முதலீடு வருங்காலத்தில் பணவீக்கத்தை சமாளிக்கும் அளவிற்கு இலாபம் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை முதலீடு - வாரன் பஃபெட் கூறும் ஆலோசனைகள்...
Investment - 25-25-25-25 Rule

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com