
கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாணக்கியர் அவர்கள், தனது அர்த்தசாஸ்திரம் நூலில் எவ்வாறு வருமான வரி வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். வரி வசூலிப்பது சமுதாயத்திற்கு அதிகபட்ச நன்மையைக் கொடுக்குமாறு அமைய வேண்டுமென்கிறார்கள். பணக்காரர்களுக்கு அதிக வரியும் ஏழை மக்களுக்கு குறைவான வரியும் விதிக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் எழுதப்பட்ட மனுஸ்மிருதியிலும் வரி வசூலிப்பது குறித்த போதனைகள் உள்ளன. மனுஸ்மிருதி வியாபாரிகள் மற்றும் கைவினைக் கலைஞர்களிடமிருந்து 20% வரி வசூலிக்க வேண்டுமென்கிறது. விவசாயிகளிடமிருந்து விளைச்சலில் 1/6, 1/8 அல்லது 1/10 பங்கினை விளைச்சல் சார்ந்த சூழ்நிலைகளின் படி வசூலிக்க வேண்டுமென்கிறது.
சங்ககால நூலான புறநானூற்றில் யானை புக்க புலம் என்ற பாட்டில், அறவழியில் வரி வசூலிப்பது குறித்து, பாண்டியன் அறிவுடை நம்பியை அறிவுறுத்தி, பிசிராந்தையார் பாடிய பாடலை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஜூலை 2019 பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்கள்.
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே
பொருள்:
சிறிய நிலமாயினும், அதன்கண் விளைந்த நெல்லை உணவாக யானைக்குக் கொடுத்தால், அது பல நாட்களுக்கு பசியாறும். ஆனால், பெரும் நிலத்தில், யானை புகுந்தால், அது உண்ணும் நெல்லை விட, அதன் காலடிபட்டு அழிவது மிகுதியாகிவிடும். அதுபோல், அறிவுடைய அரசன் அறநெறியறிந்து வரி வசூலித்தால், கோடிக்கணக்கான செல்வம் பெற்று, அவன் இன்புறுவதுடன், நாடும் செழிக்கும். அதற்கு மாறாக, அறமற்ற பெரிய வரியை வசூலித்தால், அது அவனுக்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும்.
இவ்வாறு சங்க காலம் தொட்டே வருமான வரி குறித்த தகவல்கள் நமக்குத் தெரிய வருகின்றன. ஒவ்வொரு அரசும் வருமான வரி வசூலிப்பதற்கு பல்வேறு விதிமுறைகளைக் கொண்டிருந்தன. முகலாயர்கள், விஜயநகர அரசர்கள், பாமினி சுல்தான்கள் என எல்லா அரசர்களும் தங்களுக்கென்று பிரத்யேக வரி வசூலிப்பு முறைகளைக் கொண்டிருந்தனர்.
கிபி 1857 இல் முதல் இந்திய சுதந்திர போருக்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இந்தியா வந்தபிறகு, நாம் தற்போது காணும் வருமான வரியின் தொடக்கம் ஆரம்பமாயிற்று. முதலாம் சுதந்திரப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கம் கடும் நஷ்டத்தை சந்தித்தது. அதனை ஈடுகட்ட நிதி அமைச்சர் சர் ஜேம்ஸ் வில்சன் அவர்களால் வருமான வரி பிப்ரவரி 1860 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அது 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தது.
கிபி 1922 ஆம் ஆண்டு இன்னும் சில மாற்றங்கள் வருமான வரியில் வந்தன. வருமான வரி மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு, பல்வேறு மாற்றங்கள் இந்த வருமான வரி சட்டத்தில் செய்யப்பட்டன.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, கிபி 1961 ஆம் ஆண்டு வருமான வரி சட்டம் அமல்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் வருமான வரியின் வசூலிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. இன்று உள்ள இந்தியாவின் வருமான வரி வசூலுக்கு இதுவே அடிப்படையாக உள்ளது.
சம்பாதிப்பது, தொழில் மற்றும் வியாபாரம் வழியாக பெறும் வருமானம், மூலதன ஆதாயம், வீட்டின் மூலம் பெறும் வருமானம், இதர முகாந்திரங்களில் இருந்து வரும் வருமானம் என வருமானங்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டன. மக்கள் வரி கட்டும் பொறுப்பைக் கண்காணிக்க வருமான வரி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
அதன் பிறகு பல்வேறு ஆண்டுகளில் வருமான வரி கணக்கீடுகளில் பல்வேறு மாற்றங்கள் வந்தன. கிபி 2020 ஆம் ஆண்டு பழைய வரி விதிப்பு முறை மட்டுமன்றி, புதிய வரி விதிப்பு முறை என்ற ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய வரி விதிப்பு முறையில் வரி விலக்கு சலுகைகள் குறைவாக இருக்கும். ஆனால், வருமான வரி வரம்புகளுக்கான வரி குறைவாக இருக்கும். இப்போது, நாம் ஒவ்வொரு வருடமும் புதிய வரி விதிப்பு முறை அல்லது பழைய வரி விதிப்பு முறை என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு வருமான வரி விதிப்பு காலங்காலமாக பல்வேறு மாற்றங்களைக் அடைந்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல்வேறு சிறப்பான மாற்றங்கள் வரும் என்று நம்புவோம்.